இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 48. ஜெபத்தில் நீடிப்பது நிலை நிற்றல்

ஜெபத்தில் நீடித்து நிலை நிற்றல் பற்றியும் நான் இங்கு கூற வேண்டும். கேட்பதிலும் தேடுவதிலும் தட்டுவதிலும் நீடித்து நிலை நிற்பவனே பெற்றுக் கொள்வான், கண்டடைவான், அவனுக்கே திறக்கவும்படும், சில வரங்களை நாம் ஆண்டவரிடம் ஒரு மாதம், ஒரு வருடம், பத்து அல்லது இருபது வருடம் வரைக்கும் கேட்பதுகூடப் போதாது. கேட்பதில் நாம் ஒரு போதும் தளரவே கூடாது. நாம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மரணம் வரையிலும் கேட்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஜெபம் ஆண்டவர் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையைக் காட்டுகிறது. இதிலும் கூட நீடித்து நிலை நிற்கும் எண்ணத்தோடு நாம் மரணம் பற்றிய நினைவையும் சேர்த்துக் கொண்டு. அவர் என்னைக் கொன்றாலும் நான் அவரை நம்புவேன் (யோபு. 13:15). எனக்குத் தேவையானதையெல்லாம் அவர் தருவார் என நம்புகிறேன் என்று நாம் கூற வேண்டும்.

உலகத்தில் செல்வமும் உயர்வும் பெற்றவர்கள் தாங்கள் எதுவும் கேட்கப்படாமலே மற்றவர்களின் அவசியங்களை அறிந்து அதைச் செய்வதனால் தங்கள் பெருந்தன்மையான தாராள குணத்தைக் காட்டுகிறார்கள். அதற்கு மாறாக, கடவுளின் கொடைத் தன்மை எவ்வாறு காட்டப்படுகிறதென்றால், நமக்கு அவர் அருள விரும்பும் கொடைகளை நீண்ட நாள் தேடி மன்றாடி நாம் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் பல சமயங்களில் ஒரு கொடை எவ்வளவு பெரியதோ அவ்வளவு அதிக காலம் கழித்த பிறகே ஆண்டவர் அதை நமக்குத் தருகிறார். அவர் இவ்வாறு செய்வதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

1 அவ்வரத்தை அதிகமான அளவில் நமக்குக் கொடுப்பதற்காக

2 வரத்தைப் பெற்றுக் கொள்கிறவர்கள் அதை அதிகப் பெரிதாய் மதிக்கச் செய்யும்படியாக,

3. வரத்தை பெற்றுக் கொள்கிறவர்கள் அதை இழந்து போகாமல் மிகவும் கவனமாயிருக்கச் செய்யும்படியாக, ஏனென்றால் விரைவிலும் எளிதாகவும் கிடைத்த ஒன்றை யாரும் மதிப்பதில்லை .

எனவே ஜெபமாலை சபையோரே! உங்கள் எல்லா ஆன்மீக லௌகீக தேவைகளிலும் ஜெபமாலை வழியாக சர்வேசுரனை மன்றாடுவதிலே நீடித்து நிலைத்து நில்லுங்கள். யாவற்றையும் விட நீங்கள் தேவ ஞானத்தைக் கேளுங்கள், அது ஒரு குறையற்ற செல்வம். 'ஞானம் மனிதர்க்கு அளவில்லா திரவியம் (ஞானா. 7:14). நீங்கள் அதை மன்றாடி கேளுங்கள், இடையில் நிறுத்தி விடாதீர்கள். நடுவில் மனந்தளர்ந்து போகாதீர்கள். அப்படியானால் பிந்தியோ முந்தியோ நிச்சயமாக நீங்கள் அதை அடைந்து கொள்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , 'நீ இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது' (அர. 19:7). இதன் பொருள் என்ன? நீ இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். கஷ்ட காலங்களைச் சமாளிக்க வேண்டும். அதிக இடங்களை வெல்ல வேண்டும். போதிய அளவு செல்வத்தைப் பரலோகத்தில் சேர்த்து வைக்கு முன் இவையெல்லாம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஜெபமாலை சபை உறுப்பினருக்கும் காத்துக் கொண்டிருக்கும் அழகிய மகுடத்தைச் சம்பாதிக்கவும், பரலோக வழியை தேடியடைந்து கொள்ளப் போதுமான பரலோக மந்திரங்களையும் அருள் நிறை மந்திரங்களையும் சொல்லவும் வேண்டும்.

'ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடி (திருவெளி, (காட்சி) 3:11) பார்த்துக் கொள், ஜெபமாலை சொல்வதில் உன்னைவிட அதிக பிரமாணிக்கம் உள்ள ஒருவனால் உன் கிரீடம் எடுத்துக் கொள்ளப்படாதவாறு கவனித்துக் கொள். சர்வ வல்லப கடவுள் உனக்கெனத் தெரிந்தெடுத்துள்ள 'உன் கிரீடம் உள்ளது. நீ நன்கு ஜெபித்த ஜெபமாலைகளால் அதை அடைவதில் பாதி வழி வந்து விட்டாய். வேறு யாராவது ஒருவேளை இந்தப் பந்தயத்தில் உன்னை முந்தி விடக்கூடும். தன் அதிகப்படியான உழைப்பால், அதிகப்படியான பிரமாணிக்கத்தால், ஒரு வேளை இன்னொருவன் உனக்குரிய மகுமடத்தை தன் நற்செயல், ஜெபமாலைகள் ஆகிய விலை கொடுத்து வாங்கி விடக்கூடும். இத்தனை தூரம் நன்கு ஓடி வந்த பாதையிலே நீ நின்று விட்டால், இது நடந்து விடக்கூடியதே! 'நீங்கள் நன்றாய் ஓடினீர்கள்' (கலா. 5:7) உன் ஜெபமாலை மகுடத்தை நீ அடையாமல் தடுப்பவன் யார்? 'உங்களைத் தடுத்தவன் யார்? (கலா. 5:7) யார் தடுப்பார்கள்? புனித ஜெபமாலையின் பகைவர்களாக எத்தனையோ பேர் இருக்கிறார்களே அவர்கள்தான் தடுப்பார்கள்.

'பலவந்தம் செய்கிறவர்களே அதைக் கைப்பற்றுகின்றனர்' (மத் 11:12) இதை நீ நம்பு. உலகத்தின் பயமுறுத்தல்களுக்கும் ஏமாற்றுக்களுக்கும் பயந்த கோழைகளுக்கல்ல இந்த கிரீடங்கள். கடமையைக் கழிக்க, அவசரமாய், கவலையீனமாய் தங்கள் ஜெபமாலையைச் சொல்லும் மந்தமுள்ள சோம்பேறிகளுக்கல்ல இந்த மகுடங்கள். தங்களுக்கு விருப்பம் உண்டானால் மட்டும் இடைக்கிடையே எப்போதாவது ஜெபமாலையைச் ஜெபிப்பவர்களுக்கும் அவை தரப்படா. ஜெபமாலைக்கெதிராக நரகம் அவிழ்த்து விடப்பட்டதைக் கண்டதும் பயந்து போராயுதத்தைக் கீழே போடும் கோழைகளுக்கல்ல இந்த மணி முடிகள்.

ஜெபமாலைச் சபையினரே! ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்வதால் சேசு மரியாயிக்கு ஊழியஞ் செய்ய நீங்கள் விரும்பினால் சோதிக்கப்பட ஆயத்தமாயிருங்கள். 'நீ கடவுளுக்கு ஊழியஞ் செய்யப் போசையில். சோதனைக்குத் தப்ப உன் ஆன்மாவை ஆயத்தப்படுத்து' (சீராக், 2:1) பதிதர்களும், ஒழுக்கம் குறைந்தவர்களும், உலகத்தில் மரியாதைக்குரியவர்களும் நுனிப்புல் மேயும் பக்தியுள்ளவர்களும், கள்ளத் தீர்க்கத்தரிசிகளும், தவறிய மனித சுபாவத்தோடும், ஏன் நரகத்தோடேயே கைகோர்த்துக் கொண்டு உனக்கெதிராய்ப் பயங்கர போர் தொடுப்பார்கள். ஜெபமாலையை நீ கை விடும்படி எல்லா முயற்சிகளையும் செய்வார்கள்.

இவர்களுடைய தாக்குதல்களுக்கு எதிராக உங்களைத் தயாரிப்பதற்கென, இவர்கள் எப்போதும் நினைத்தும் சொல்லியும் வருகிற சில காரியங்களை உங்களுக்குக் கூறுகிறேன். இங்கு நான் கூறுகிறவைகள், முழுக்க முழுக்க உலகப் போக்கிலே போய்க் கொண்டிருக்கிறவர்களுடைய தாக்குதல்களை எதிர்த்து சமாளிக்க அல்ல. ஆனால் அவ்விரு சாராரையும் விட, உலகமுறைப்படி 'மரியாதைக்குரியவர்களாயிருக்கிறார்களே அவர்களுடைய தாக்குதல்களையும், இன்னும் (நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்) ஜெபமாலையினால் ஒரு உபயோகமும் இல்லை என்று கூறுகிற பக்தியுள்ள கிறீஸ்தவர்களின் எதிர்ப்புகளையும் சமாளிக்க உங்களை இவை தயார்படுத்தும்.

'இந்த வாய்ப் பிரசங்கி என்ன சொல்லப் பார்க்கிறான்? (அப்பணி 17:18). 'வாருங்கள் இவனை நெருக்குவோம். ஏனெனில் இவன் நமக்கு எதிராயிருக்கிறான் அதாவது, 'இவன் இத்தனை ஜெபமாலைகளைச் சொல்லி என்ன செய்கிறான்? எப்போதும் இவன் என்னத்தை முனகிக் கொண்டிருக்கிறான்? என்னே இவன் சோம்பல்! இந்த பழைய மணிக்கொட்டைகளை உருட்டிக் கொண்டிருக்கிறானே, எவ்வளவு வீண் நேரம் போக்குகிறான்! இந்த பைத்தியக்காரத்தனத்தை விட்டுவிட்டு இவன் வேலையில் ஈடுபட்டாலென்ன? நானும் தெரியாமல் பேசவில்லை. தெரிந்துதான் சொல்கிறேன்.

'ஓ நீங்கள் ஒரு விரலைக் கூட அசைக்க வேண்டியதில்லை! ஜெபமாலை சொன்னால் போதும்! அதோடு பெரிய திரவியம் வானத்திலிருந்து பொத்தென்று உங்கள் மடியில் வந்து விழும்! ஜெபமாலையே உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிடும்! அப்படித்தானே? ஆனால், 'தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்கிறவர்களுக்குத்தான் கடவுள் உதவுகிறார்' என்பதல்லவா முதுமொழி! இவ்வளவு ஜெபம் செய்யத் தேவையே இல்லை . ஏன்? 'ஒரு சிறிய ஜெபமும் மோட்சத்தில் கேட்கப்படும் தானே? ஒரு பரலோக மந்திரமும் ஒரு அருள் நிறைமந்திரமும் தாராளமாய்ப் போதுமே. அவை நன்கு சொல்லப்பட்டால்!

'ஜெபமாலை சொல்ல வேண்டுமென்று கடவுள் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா, இல்லையே! ஆனால் ஜெபமாலை நல்லதுதான் - அது ஒரு மோசமான ஜெபமல்ல. அதற்கு போதிய நேரம் இருந்தால். ஆனால், நம்மை விட இந்த ஜெபமாலை சொல்கிறவர்களுக்கு மோட்சம் அதிக நிச்சயம் என்று மட்டும் யாரும் நினைக்க வேண்டாம். ஜெபமாலையையே சொல்லாத அர்ச்சிஷ்டவர்களைப் பாருங்கள்! எல்லோரும் தங்களைப் போலவே நோக்க வேண்டும் என்று மிகப் பலர் நினைத்து வருகிறார்கள். இவர்கள் யார் தெரியுமல்லவா? எதை எடுத்தாலும் அடுத்த கரை வரைக்கும் போய் விடுவார்கள். கண்டதெல்லாம் பாவம் என்று கூறி விடுவார்கள் ஜெபமாலை சொல்லாதவர்களெல்லாம் நரகத்திற்குத் தான் போவார்கள் என்று ஒரேடியாய்ச் சொல்லி விடுவார்கள்!

'வாசிக்கத் தெரியாத கிழவிகளுக்கு ஜெபமாலை சரிதான். ஆனால் தேவ மாதாவின் மந்திர மாலை ஜெபமாலையைவிட எவ்வளவு மேலானது! அல்லது ஏழு தவச் சங்கீதங்களை எடுத்துக் கொள்ளுங்களேன்! பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட சங்கீதங்களை விட அதிக அழகியது வேறு என்னதான் இருக்க முடியும்? நீங்கள் தினமும் ஜெபமாலை சொல்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள், அப்படியா? வைக்கோலில் பிடித்த நெருப்பு மாதிரிதான் இது! இது நீடித்து நில்லாது என்பது உங்களுக்கே தெரியும். கொஞ்சமாக ஒப்புக் கொண்டு அதிக பிரமாணிக்கத்துடன் அதை நிறைவேற்றுவது நல்லதல்லவா?

நண்பனே என்னை நம்பு. உன் காலை மாலை ஜெபத்தைச் சொல். பகலில் நன்றாக உழைத்து வேலை செய். அதை இறைவனுக்கு ஒப்புக் கொடு. இதற்கு மேல் இறைவன் எதையும் உன்னிடம் கேட்க மாட்டார். நீயும் உன் ஆகாரத்திற்காக உழைக்க வேண்டியுள்ளதுதானே. நீ ஓய்வுள்ள மனிதனானால் எத்தனை ஜெபமாலை வேண்டுமானாலும் சொல். உன் விருப்பம், நான் எதுவும் கூறவில்லை . ஞாயிறு, திருநாட்கள் இவற்றில் நிறைய நேரம் இருக்குமல்லவா, அப்போது கட்டாயம் ஜெபமாலை சொல்ல வேண்டுமானால் சொல்லிக் கொள்.

'ஆனால் இத்தனை ஜெபமாலை மணிகளை வைத்துக் கொண்டு நீ உண்மையிலேயே என்ன தான் செய்கிறாய்? உன்னைப் பார்க்க ஒரு ஆண் பிள்ளையாகத் தோன்றவில்லை. வயது சென்ற பெண் போல அல்லவா இருக்கிறாய்! ஒரே ஒரு பத்து கொண்ட ஜெபமாலை நான் பார்த்திருக்கிறேன். பதினைந்து பத்து மணி கொண்ட ஜெபமாலை போலவே அதுவும் உள்ளது. உன் ஜெபமாலையை இடையில் ஏன் தான் அணிந்திருக்கிறாய்? ஒரு தலைப் பைத்தியம்! ஸ்பெயின் தேசத்தவரைப் போல ஒரேடியாக அதை உன் கழுத்தைச் சுற்றி போட்டுக் கொள்வது தானே? அவர்கள் ஒரு பெரிய ஜெபமாலையை ஒரு கையிலும் ஒரு பட்டாக்கத்தியை மறு கையிலும் வைத்திருக்கிறார்கள்!

'தயவு செய்து இந்த வெளிப் பக்திகளையெல்லாம் விட்டு விடுங்கள். உண்மை பக்தி, இருதயத்தில் அல்லவா உள்ளது...

இவ்விதமாக, பல புத்திசாலிகளும் படித்த அறிவாளர்களும் இடைக்கிடையே பேசி நீ ஜெபமாலை சொல்வதைத் தடுக்கப் பார்ப்பார்கள். இவர்கள் சுய விருப்பமும் அகங்காரமும் கொண்டவர்கள் என்பதே உண்மை . இவர்கள் ஜெபமாலைக்குப் பதிலாக ஏழு தவச் சங்கீதங்களையோ அல்லது வேறு ஏதாவது ஜெபத்தையோ சொல்லும்படி கூறுவார்கள்.

ஒரு நல்ல குரு உனக்குப் பாவப் பரிகாரமாக இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் ஜெபமாலையைத் தினமும் சொல்லும்படி கூறியிருந்தால் அதை மாற்றி வேறு ஜெபம், உபவாசம், பூசை, தான தர்மம் ஆகிய ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் மேற்கூறிய கருத்துடைய குருக்களிடம் பாவங்கீர்த்தனத்துக்குப் போனால் போதும்!

உலகத்தில் ஜெப வாழ்வு மேற்கொண்டுள்ள சிலரிடம் சென்று ஆலோசனை கேட்டால், அவர்கள் ஜெபமாலையைச் செய்து பழகாதவர்களாயிருந்தால் - நிச்சயம் ஜெபமாலையை ஆதரிக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, ஜெபமாலையை விட்டு விட்டு தியான ஜெபத்தை (Contemplation) பயிற்சி செய்யும்படி கூறுவார்கள். ஜெபமாலையும் தியானமும் இணைந்து செல்ல முடியும் என்று அறியாமல் அப்படிச் சொல்வார்கள். ஜெபமாலைப் பக்தியுடைய அர்ச்சிஷ்டவர்கள் தியானச் ஜெபத்தின் உச்ச நிலைகளை அடைந்துள்ளார்கள் என்றும் இவர்களுக்குத் தெரியாது!

உனக்கு மிக அருகிலிருக்கும் உன் விரோதிகள் உன்னை அதிக கொடுமையாய்த் தாக்குவார்கள் - அவர்கள் அருகிலிருக்கும் காரணத்தால். உன் ஆன்ம சரீர புலன்கள், சம்பந்தப்பட்ட காரியமாகப் பேசுகிறேன் - மனப்பராக்குகள், சித்தம் நிச்சயமற்றுத் தடுமாறுதல், ஆன்ம வறட்சி, உடல் பலவீனம், சோர்வு இவையாவும் சாத்தானுடன் சேர்ந்து கொண்டு இவ்வாறு பேசும்; 'ஜெபமாலை சொல்வதை நிறுத்து, உன் கஷ்டங்களுக்கெல்லாம் அதுவே காரணம். அதை விட்டு விடு. அதைச் சொல்லா விட்டால் பாவமேயில்லை. எப்படியும் அதைச் சொல்லியே ஆக வேண்டும் என்றால் அதில் ஒரு பாகத்தை மட்டும் சொல், போதும். உனக்கிருக்கும் தொல்லைகளைப் பார்த்தால் அதைச் சொல்ல வேண்டாமென்பது கடவுளின் சித்தம் என்றே தெரிகிறது. இன்று வேண்டாம், நாளை உனக்கு சொல்லலாம் என்று இருக்கும் போது அதைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம்...

இறுதியாக, என் சகோதரா, ஜெபமாலைக்கு எத்தனை பகைவர்கள் உள்ளார்கள்! ஜெபமாலை சொல்வதில் மரணம் வரை நீடித்து நிலைத்திருப்பது இறைவன் அருளும் ஒரு மாபெரும் வரம் என்றே கருதுகிறேன்.

ஜெபமாலை சொல்வதில் நீடித்து நிலைத்து நில். அவ்வாறு நின்றால் முடிவில் உனக்காக மோட்சத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் அரிய மகுடத்தைப் பெற்றுக் கொள்வாய். மரணம் வரை பிரமாணிக்கமாயிரு. அப்போது வாழ்வின் கிரீடத்தை உனக்குத் தருவேன் (திருவெளி. (காட்சி ) 2:10).