இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 45. ஜெபமாலையை வணக்கத்துடன் சொல்ல வேண்டும்

இதையும் நான் இங்கு கூற விரும்புகிறேன். ஜெபமாலை வணக்கத்துடன் சொல்லப்பட வேண்டும். அதாவது முடிந்த போதெல்லாம் முழங்காலில், கூப்பிய கரங்களில் ஜெபமாலையைப் பிடித்த வண்ணம் அதைச் சொல்ல வேண்டும். ஆயினும் நோயுற்றிருப்போர் படுக்கையிலிருந்தே சொல்லலாம். பயணம் செய்வோர் நடந்து கொண்டே சொல்லலாம். முழங்காலிட இயலாதவர்கள் உட்கார்ந்தோ நின்று கொண்டோ சொல்லலாம். தினசரி வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் வேலை நேரத்திலும் ஜெபமாலை சொல்ல முடியும்: ஏனென்றால் கையால் வேலை செய்து கொண்டே வாய்ச் ஜெபம் சொல்வது எப்போதும் முடியாமல் போகாது. ஆனால் நம் ஆன்மா பலங்குறைந்ததாகையால் நாம் சரீர வேலை செய்யும் போது ஜெபம் போன்ற ஆன்ம காரியங்களில் முழுக்கவனமும் செலுத்த முடியாது. ஆயினும் வேறு வழியில்லாவிட்டால் இப்படி கையுழைப்பைச் செய்து கொண்டே ஜெபமாலை சொல்வது தேவ அன்னை முன்னிலையில் வீண் போகாது. நம் வெளிச் செயலை விட நம் நல்ல நோக்கத்திற்கு அவர்கள் சன்மானமளிக்கிறார்கள்.

என்னுடைய ஆலோசனை இது : நீங்கள் ஜெபமாலை சொல்வதை ஐந்து தேவ இரகசியங்கள் கொண்ட மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாகத்தையும் நாளின் வெவ்வேறு நேரத்தில் சொல்லுங்கள். பதினைந்து தேவ இரகசியங்களையும் ஒரே நேரத்தில் சொல்வதை விட இது அதிக நல்லது.

ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை ஒரே நேரத்தில் சொல்ல முடியாவிட்டால் ஒவ்வொரு பத்தாக, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சொல்லுங்கள். உங்களுக்கு அலுவல்கள் இருந்தாலும், நேரம் மற்ற வகைகளில் செலவிடப்பட வேண்டியிருந்தாலும், இவ்விதம் செய்தால் தூங்கப் போகுமுன் எப்படியும் முழுவதையும் சொல்லி விட முடியுமென்று நினைக்கிறேன்.

ஜெபமாலையைத் தவறாமல் செய்வதில் அர்ச். பிரான்சிஸ் சலேசியார் நமக்கு சிறந்த உதாரணம். ஒரு நாள் அவர் தம் விசாரணைப் பயண அலுவலால் மிகவும் களைத்துச் சோர்ந்து வந்தார். நள்ளிரவாகும் நேரம். தம் ஜெபமாலையில் சில பத்து மணிகள் சொல்லாதது அப்போது அவர் நினைவுக்கு வந்தது. அவற்றைச் சொல்லாமல் தூங்கச் செல்லவில்லை. முழங்காலிலிருந்து சொன்னார். அவர் எவ்வளவு களைப்படைந்திருந்தார் என்று அறிந்திருந்த துணைவர் அச்செபத்தை மறுநாள் சொல்லும்படி எவ்வளவோ கூறியும் அவர் அதற்கு இணங்கவில்லை.

அர்ச். பிரான்சிஸின் குறிப்புகளில் கூறப்படும் பரிசுத்த வாழ்வுடைய ஒரு சகோதரரைப் பற்றி மீண்டும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். அவர் ஜெபமாலை சொல்வதில் தவறியதில்லை . தினமும் பகல் உணவுக்கு முன் பக்தி வணக்கத்துடன் ஜெபமாலை ஜெபிப்பார். இதைப்பற்றி இந்நூலில் முன்பே கூறியுள்ளேன், (ரோஜா மலர் 7 காண்க.)