இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 40. வியத்தகு பலன்கள்

முத்திப்பேறு பெற்ற ஆலன் ரோச். சங். ஜான் டு மோன், சங். தாமஸ் போன்ற ஞானாசிரியர்கள் எழுதியுள்ளவற்றிலும் இன்னும் மற்றவர்களின் நூல்களிலும் அர்ச், சாமிநாதரின் குறிப்புகளிலும் ஜெபமாலையால் நிகழ்ந்துள்ள ஆச்சரியமான மனமாற்றங்களைப் பற்றி வாசிக்கிறோம். இவர்கள் தங்கள் கண்களால் அவைகளைக் கண்டிருக்கிறார்கள். பெரும்பாவிகள் ஆண்களும், பெண்களும் சொல்ல முடியாத மாபெரும் தீமைகளிலும் பாவங்களிலும் இருபது முப்பது நாற்பது ஆண்டுகள் கூட உழன்ற பின், ஜெபமாலையைத் தவறாது சொல்லி வந்த காரணத்தால், மனந்திருந்தியுள்ளார்கள். இவ்வாறு மனந்திருந்திய இவர்கள், மனந்திருந்த வேண்டும் என்ற எந்தப் பேச்சையும் கூட சற்று முன்பு கேட்க மறுத்தவர்கள்! 

அவற்றையெல்லாம் இங்கு கூற இயலாது. இந்நூல் மிகப் பெரிதாகி விடும் என்பதால் என் கண்ணால் கண்டவற்றை கூட இங்கு எழுதவில்லை. நான் அவற்றை இங்கு சொல்லாததற்கு பல காரணங்கள் உண்டு. * (குறிப்பு: * அர்ச். லூயிஸ் நேரடியாக இயற்றிய பல புதுமையான மனந்திரும்புதல்கள் பற்றி தம் தாழ்ச்சியினிமித்தம் இங்கு கூறாது விடுகிறார் எனத் தோன்றுகிறது.)

இதனை வாசிக்கும் நண்பரே, இந்த (ஜெபமாலைப்) பக்தியை நீர் கைக்கொள்வீரானால், அதைப் பரப்ப உதவுவீரானால், எந்த ஞான நூலிலிருந்தும் நீர் கற்பதை விட ஜெபமாலையிலிருந்து அதிகம் கற்றுக் கொள்வீர். இதுமட்டுமல்ல, அர்ச். சாமிநாதருக்கும், முத். ஆலனுக்கும் மற்றும் இப்பக்தியைக் கைக்கொண்டு பரப்பி வரும் அனைவருக்கும் தேவ அன்னை வாக்களித்துள்ளவை களையும் நீர் வெகுமதியாகப் பெற்றுக் கொள்வீர். இந்த ஜெபமாலைப் பக்தி தேவ அன்னைக்கு மிகவும் விருப்பமுள்ளது. காரணம், சேசு மரியாயின் புண்ணிய நலன்களை அது மக்களுக்குப் போதிக்கிறது. அவர்களை தியான ஜெபத்திற்கு வழி நடத்துகிறது. நமதாண்டவரும் மீட்பருமாகிய சேசு கிறீஸ்துவைப் போல் ஒழுகச் செய்கிறது. தேவதிரவிய அனுமானங்களை அடிக்கடி நாடி வரச் செய்கிறது. கிறீஸ்தவப் புண்ணியங்களை நேர்மையுடன் தேடத் தூண்டுகிறது. எல்லாவிதமான நற்செயல்களையும் செய்ய வைக்கிறது. ஜெபமாலையால் அடையக்கூடிய அநேக வியத்தகும் பலன்களை நாடச் செய்கிறது.

ஜெபமாலை எவ்வளவு மிகுதியான ஞானப் பலன்களைக் கொண்டது என்பதை மக்கள் அறியார்கள். இதன் காரணம் என்னவென்றால், பல குருக்கள் ஜெபமாலையைப் பற்றிப் பிரசங்கம் செய்யும் போது, அதன் பலன்களைப் பற்றிப் பேசுவதில்லை . அவர்கள் சொல்லழகுள்ள பாராட்டுக்குரிய உரைகளை நிகழ்த்துகிறார்கள். அது வியப்பை உண்டு பண்ணுகிறது. ஆனால் எதையும் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை.

இது இப்படி இருக்கட்டும், உங்களுக்கு நான் இப்போது முத் ஆலன் ரோச் வாய் மூலமாக உறுதியாய்க் கூறுவது இதுவே. எண்ணற்ற ஆசீர்வாதங்களை உடைய திரவியக் கூடம் ஜெபமாலை. இப்பலன்களின் வேராக இருப்பது ஜெபமாலை. ஏனென்றால் ஜெபமாலையின் வழியாக...

1. பாவிகள் மன்னிப்படைகிறார்கள். 

2. தாகங்கொண்ட ஆன்மாக்கள் தாகந் தணிகிறார்கள். 

3. கட்டுக்கு உட்பட்டவர்கள் கட்டவிழ்க்கப் படுகிறார்கள்.

4. அழுகிறவர்கள் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். 

5. சோதனையில் அகப்பட்டவர்கள் அமைதியை அடைகிறார்கள். 

6. எளியவர்கள் உதவி பெறுகிறார்கள். 

7. துறவிகள் புது திருத்தம் பெறுகிறார்கள். 

8. ஞான அறிவற்றவர்கள் அறிவூட்டப்படுகிறார்கள். 

9. உலகில் வாழ்பவர்கள் ஆங்காரத்தை வெல்லப் பழகிக் கொள்கிறார்கள். 

10. இறந்த நல்லோர் வேதனை குறைகிறார்கள்.

ஒரு நாள் தேவ அன்னை முத், ஆலனிடம்; 'என்னுடைய ஜெபமாலை மீது பற்றுள்ளவர்கள் என் திருக்குமாரனின் அருளையும் ஆசீரையும் இவ்வாழ்வில் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மரணத்திலும் அதற்குப் பின்னும் அவர்கள் எல்லா அடிமைத் தனத்திலிருந்தும் விடுபட்டு சிரசில் மணிமுடியும், கரத்தில் செங்கோலும் ஏந்தியவர்களாய் அரசர்களைப் போல் நித்திய மகிமையை அனுபவிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்' - என்று கூறினார்கள். ஆமென். அவ்விதமே ஆகுக!