இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அத்தியாயம் 3. எப்பேர்ப்பட்ட ஒரு புயல் எழுந்திருக்கும்!

மேலும், பாவசங்கீர்த்தனம் யாராவது ஒரு ஆயர், பாப்பரசர், அல்லது குருவின் கண்டுபிடிப்பாகவோ, கருத்தாகவோ இருந்திருந்தால், அல்லது அது ஏதாவது ஒரு மனித அதிகாரத்தால் ஒரு கடமையாக - அல்லது இன்னும் அதிகமாக ஒரு தேவத்திரவிய அனுமானமாக - கிறிஸ்தவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்தால், எப்பேர்ப்பட்ட விவாதங்களின் ஒரு புயலை, கோபமான சர்ச்சைகளை, அப்படிப்பட்ட ஒரு முயற்சி விளைவித்திருக்கும்!

முற்றிலும் விசுவாச சத்தியத் தன்மையுள்ள பிரச்சினைகளே கூட கசப்பான, நீடித்த சச்சரவுகளும், வாதங்களும் தோன்றச் செய்திருக்கின்றன என்ற நிலையில், ஒரு மனிதன் - அவர் ஆயரோ, குருவோ, ஏன், பாப்பரசரோ யாராயினும் சரி - மனிதர்கள் தங்கள் இரகசியப் பாவங்களையும், குற்றங்களையும், தங்களுக்கு அவமானம் தரும் பலவீனங்களையும் வேறு மனிதர்களிடம் வெளிப்படுத்தும்படி மனிதர்களுக்குக் கட்டளையிட்டிருந்தாலோ, அல்லது, பாவங்களை மன்னிப்பதற்கு ஒரு சாதாரண மனிதன் மற்றொரு மனிதனால் நியமிக்கப்பட முடியும் என்று அவர் தன் இஷ்டப்படி உரிமை கொண்டாடினாலோ, எப்பேர்ப்பட்ட கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்!

அப்படிப்பட்ட புயல் எதுவும் இருப்பதாக எந்தக் குறிப்புமில்லை. அப்படிப்பட்ட எதுவும் ஒருபோதும் எழுந்ததில்லை. ஏனெனில் கிறீஸ்தவத்தின் பிறப்பில் இருந்தே குருவிடம் செய்யப்படும் இரகசியப் பாவசங்கீர்த்தனம் கிறீஸ்துநாதரால் ஏற்படுத்தப்பட்ட திருச்சட்டத்தின் ஓர் அத்தியாவசியமான பாகமாக நம்மீது இறங்கி வந்தது.

மேலும், பாவசங்கீர்த்தனம் ஒரு ஆயரால் அல்லது பாப்பரசரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்றால், அவர் எந்தப் பாப்பரசர், அல்லது ஆயர் என்பதைச் சொல்ல நம் எதிரிகளால் நிச்சயமாக முடிந்திருக்கும்; மேலும், அது எப்போது, எந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதையும் அவர்கள் சொல்லியிருப்பார்கள்!

அப்படிப் பட்ட எந்த ஒரு நிகழ்வும் எந்த வரலாற்றிலும் குறிப்பிடப்படவில்லை, அல்லது எந்த எழுத்தாளராலும் நமக்குத் தரப் படவில்லை. வேறு எங்கும் இன்னும் அறிமுகமாகாத நிலையில், பாவசங்கீர்த்தனம் எந்த நாட்டில் எப்போது முதலில் அறிமுகம் செய்யப்பட்டது என்று யாராலும் சுட்டிக்காட்ட முடியாது.

அது கிறீஸ்தவ வேதம் அறிமுகமான இடங்களில் எல்லாம் படிப்படியாக எல்லாக் கிறீஸ்தவர்களாலும், எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும், கிறிஸ்தவர்கள் வாழும் எல்லா இடங்களிலும் அனுசரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.