இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 38. ஒரு மேற்றிராணியாரின் பக்தி

ஸ்பெயின் தேச பெருமாட்டி ஒருத்தி அர்ச். சாமிநாதரிடமிருந்து ஜெபமாலை சொல்லக் கற்றுக் கொண்டாள். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை எவ்வளவு நன்றாகச்செய்து வந்தாளென்றால் அதன் பயனாக அவள் ஞானவாழ்வில் மிகவும் முன்னேற்றம் கண்டிருந்தாள். அவளுடைய ஒரே விருப்பம் உத்தமதனம் அடைய வேண்டும் என்பதே. ஆதலால் அவள் நல்ல பிரசங்கம் ஆற்றும் ஆற்றல் பெற்ற ஒரு மேற்றிராணியாரிடம் சென்று தான் உத்தமதனம் அடைய செய்ய வேண்டிய சில காரியங்களைக கூறும்படி கேட்டாள்,

அவளுக்கு ஆலோசனை கூறும் முன் அவளுடைய ஆன்மா என்ன நிலையில் உள்ளதென்பதை தான் அறிய வேண்டும், எனவே அவள் என்ன ஞானப் பயிற்சிகளைக் கைக்கொண்டு வருகிறாள் என்று கேட்டார் மேற்றிராணியார், ஜெபமாலை ஒன்றே அவள் செய்து வந்த மிக முக்கிய ஞானப் பயிற்சி என்றும், அதை அவள் தினமும் செய்து வருவதாகவும், சந்தோச, துக்க, மகிமைத் தேவ இரகசியங்களை தியானித்துச் சொல்வது அவளுக்கு மிகவும் உதவியாயிருப்பதாகவும் கூறினாள் அந்தப் பெண்,

ஜெபமாலை திருநிகழ்ச்சிகளில் எவ்வளவு விலை மதிப்பற்ற தற்போதனைகள் அடங்கியுள்ளன என்பதை அவள் எடுத்துக் கூறும் போது மேற்றிராணியார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறினார்: 'நான் இருபது ஆண்டுகளாக வேத சாஸ்திரப் பண்டிதனாக இருக்கிறேன், பல பக்தி முயற்சிகளைப் பற்றி எத்தனையோ சிறந்த புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை இதுபோல் ஒன்றை நான் கண்டதில்லை. ஏனென்றால் இந்த ஜெபமாலை பக்தி கிறீஸ்தவத்தின் கருப்பொருளா யிருக்கிறது. இப்பக்தி முயற்சி எப்படியும் பலனளித்தே தீரும். உன்னைப் போல் நானும் இனி ஜெபமாலையைக் கைக்கொள்வேன். இது முதல் ஜெபமாலையை நான் பிரசங்கிப்பேன்' என்றார்.

ஜெபமாலைப் பக்தியைப் பிரசங்கித்த இம்மேற்றிராணியார் கைமேல் பலனைக் கண்டார். பலனும் அதிகமாயிருந்தது. வெகு துரிதத்தில் அவருடைய மேற்றிராசனம் மாற்றமடைந்தது! அம்மேற்றிராசனத்தில் ஒழுக்கக்கேடு குறைந்தது. எல்லாவகை உலக போக்கும் குறைவுபட்டன. சூதாட்டமும் சுருங்கிற்று. பலர் மனந்திருந்தி மீண்டும் விசுவாசத்தைக் கண்டடைந்தனர். பாவிகள் தங்கள் தீச்செயலுக்குப் பரிகாரம் செய்தனர். இன்னும் பலர் தங்கள் தீய வாழ்வை விட்டு விடுவதாக உண்மை மனதோடு தீர்மானித்தனர். வேதத்தில் ஊக்கமும் கிறீஸ்தவ பிறர் அன்பும் தழைத்தன. இவை மிகவும் குறிப்பிடக்கூடியவையாகத் தெரிந்தன. ஏனென்றால் கொஞ்சங்காலமாக இம்மேற்றிராணியார் தன் மந்தையை சீர்திருத்த எவ்வளவோ முயன்று வந்தார். ஆனால் ஒரு பலனும் ஏற்படவில்லை .

தன் கிறீஸ்தவ மக்களிடம் ஜெபமாலைப் பக்தியை அதிகம் எடுத்துக் காட்டும்படி இம்மேற்றிராணியார் ஒரு அழகிய ஜெபமாலையை எப்போதும் தன் இடையில் அணிந்து வந்தார். அவர் பிரசங்கம் செய்யும்போது அந்த ஜெபமாலையைக் காட்டி அவர் இவ்வாறு கூறுவார்:

'சேசு கிறீஸ்துவில் என் அன்புள்ள சகோதரரே. நான் வேத இயலிலும் திருச்சபை சட்டம், தேச சட்டம் இவற்றிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். ஆனால் உங்கள் ஆயர் என்ற முறையில் சொல்கிறேன், நான் என் மேற்றிராணித்துவ உடைகளையும் கல்விக்குரிய அடையாளத்தையும் அணிவதை விட தேவ அன்னையின் ஜெபமாலையை அணிவதில் அதிக பெருமை கொள்கிறேன்'.