இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 37. கன்னியர் மடம் சீர்திருத்தம் பெற்றது

ஒரு பிரபுவுக்கு பல பெண் மக்கள் இருந்தார்கள். ஒரு மகளை அவர் கன்னியர் மடத்தில் கொண்டு சேர்த்தார். அம்மடம் கட்டுப்பாடு தளர்ந்திருந்தது. அங்குள்ள கன்னியர் தற்பெருமையுள்ளவர்கள். உலக மகிழ்ச்சிகளையே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆன்ம குருவோ ஆன்ம தாகமுடையவர். ஜெபமாலை மீது மிகுந்த அன்புடையவர். புதிதாய் சேர்ந்த இக்கன்னிகையை நல்வழியில் நடத்த விரும்பி, அவள் ஒவ்வொரு நாளும் தேவ அன்னையின் மகிமைக்காக, சேசுவின் வாழ்வு. பாடுகள், மகிமை இவற்றை மனதில் சிந்தித்தபடி ஜெபமாலை சொல்லுமாறு கட்டளையிட்டார்.

அப்புதிய கன்னிகை வெகு மகிழ்ச்சியோடு ஜெபமாலை சொல்லி வந்தாள். கொஞ்சங் கொஞ்சமாக அவளுக்கு தன் உடன் சகோதரிகளுடைய உலகப் போக்கான வாழ்வு மீது வெறுப்பு தட்டியது. மௌனத்தையும் ஜெபத்தையும் விரும்பினாள். மற்ற சகோதரிகள் கொண்டதை விடாத பிடிவாதக்காரி என்றெல்லாம் அவளை ஏளனம் செய்து வெறுத்து ஒதுக்கிய போதும் அவள் தன் நல்வழியில் ஊன்றி நின்றாள்.

இச்சமயம் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அம்மடத்தை விசாரணை செய்ய புனிதமான ஒரு குரு வந்தார். ஒரு நாள் அவர் தியானம் செய்து கொண்டிருக்கையில் ஒரு விநோத காட்சியைக் கண்டார். அது என்னவென்றால், ஒரு கன்னிகை அவளுடைய அறையில் ஜெபத்தில் மூழ்கியிருக்கிறாள்; அவள் எதிரே, சொல்லால் விவரிக்க இயலாத அழகுடைய ஒரு பெண் சம்மனசுக்கள் சூழ காணப்படுகிறாள். சம்மனசுக்களின் கரங்களில் எரியும் ஈட்டிகள் காணப்பட்டன. அவற்றைக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முயற்சித்த பெருங்கூட்டமான பசாசுக்களை விரட்டினார்கள். பின், இப்பேய்கள் மோசமான மிருகங்களைப் போல் உருவெடுத்து மற்றக் கன்னியர்களுடைய அறைகளுக்குள் புகுந்து விட்டன,

இக்காட்சியினால், அந்தக் கன்னியர் மடம் எவ்வளவு பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்தது என்பதை அக்குரு உணர்ந்து கொண்டார். இந்த நினைவு அவரை எவ்வளவு பாதித்ததென்றால் அவர் துயரத்தால் இறந்து விடுவார் போலத் தோன்றியது. உடனே அவர் அப்புனித சகோதரியை அழைத்து, அவள் தன் பக்தியில் நீடித்து இருக்குமாறு புத்திமதி கூறினார்.

ஜெபமாலையின் பலனை சிந்திக்க சிந்திக்க, அவர் உள்ளத்தில் ஒரு தீர்மானம் உருவாகியது. அம்மடத்து சகோதரிகளை ஜெபமாலையால் சீர்திருத்த அவர் முடிவு செய்தார். அழகிய ஜெபமாலைகளைத் தருவித்து அந்த சகோதரிகளுக்கு ஆளுக்கொன்று கொடுத்து தினமும் ஜெபமாலை சொல்லும்படி வெகுவாய்க் கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்ல, அவர்கள் மட்டும் ஜெபமாலையை நன்றாகச் சொல்லி வருவதாயிருந்தால் அவர்கள் வாழும் முறையை மாற்றும்படி தான் கூறப் போவதில்லை என்று வாக்கும் கொடுத்தார். இவ் ஏற்பாட்டுக்கு அந்த சகோதரிகள் ஒப்புக் கொண்டது ஆச்சரியமாகவே இருந்தது. ஜெபமாலைகளை வாங்கிக் கொண்டு அதைச் சொல்லி வருவதாகவும் கூறினார்கள்.

சிறுகச் சிறுக அவர்களுடைய உலகச் சார்புடைய வெற்று வாழ்க்கை கைவிடப்பட்டது. மவுனமும் சிந்தனையும் குடிகொண்டன. ஒரு ஆண்டிற்குள்ளாக அவர்கள அனைவரும் தங்கள் மடம் சீர்திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று தாங்களாகவே கேட்டுக் கொண்டார்கள்.

அந்த குரு போதனையாலும், கட்டளையாலும் செய்திருக்க முடியாத இதய மாற்றத்தை அவர்களிடம் ஜெபமாலை சிறப்பாகச் செய்து விட்டது!