இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 35. கர்தினால் பியே

பியே என்ற கர்தினால் ஒருவர் இருந்தார். இவருடைய உரிமை - ஆலயம் தைபர் நதிக்கப்பாலுள்ள மரியன்னை பேராலயம். இவர் அர்ச். சாமிநாதரின் நெருங்கிய நண்பர். தன் நண்பரின் வழியாக இவர் ஜெபமாலை மீது வெகு ஆழ்ந்த பக்தியைப் பெற்றிருந்தார். எவ்வளவுக்கென்றால் ஜெபமாலையை மிகவும் போற்றி, அதன் புகழ் பெருமையை எப்பொழுதும் எடுத்துரைத்து எல்லோரும் அவ்வித பக்தி பூணும்படி உற்சாகப்படுத்துவார்.

திருத்தலங்களில் துருக்கியரை எதிர்த்துப் போராடிய கிறீஸ்தவர்களுக்கு பாப்புவின் பிரதிநிதியாய் அனுப்பப் பட்டார் இக்கர்தினால். கிறீஸ்தவப் படையினரிடம் ஜெபமாலையின் வல்லமையைப் பற்றி எவ்வளவு நம்பிக்கையை ஊட்டினாரென்றால் அவர்கள் எல்லோரும் ஜெபமாலை ஜெபித்து மோட்சத்தை முற்றுகையிட ஆரம்பித்தனர். எண்ணிக்கையில் தங்களை விட பல மடங்கு அதிகமுள்ள எதிரிகளின் படையோடு போராடப் போவதால் தேவ உதவி தங்களுக்கு வேண்டும் என்று மன்றாடினார். இந்த ஜெபமாலை மன்றாட்டு வெற்றியளித்தது. மூவாயிரம் பேர் கொண்ட அவர்கள் படை லட்சம் பேரைக் கொண்ட எதிரிப்படையை வென்றது. இந்நிகழ்ச்சியை முத் ஆலன் எழுதியுள்ளார்.

நாம் முன்பு பார்த்தது போல பசாசுக்களுக்கு ஜெபமாலை என்றால் மிஞ்சின பயம் உண்டு. சம்மனசின் மங்கள வார்த்தை பசாசுகளை விரட்டுகிறது; நரகத்தையெல்லாம் நடுங்க வைக்கிறது என்று அர்ச் பெர்னார்ட் கூறுகின்றார்.

முன்பு தங்களையே ஆன்மாவிலும் சரீரத்திலும் சாத்தானுக்கு விற்று விட்ட அநேகர், தங்கள் ஞானஸ்நான வாக்குறுதியை மீறிய பலர், தாங்கள் சேசு கிறீஸ்துவுக்குரியவர்கள் என்று அவர்களே செய்த ஒப்பந்தத்தை உடைத்தவர்கள், ஜெபமாலையைக் கைக்கொண்ட பின் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர் என்று முத் ஆலன் உரைத்துள்ளார்.