இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 31. காஸ்டில் பிளான்ஷே - எட்டாம் அல்போன்ஸ்

பிரான்ஸ் நாட்டு அரசி காஸ்டில் பிளான்ஷே, பன்னிரு ஆண்டுகளாக அவளுக்கு மகப்பேறு இல்லை, அதனால் அவள் மிகவும் கவலையடைந்தாள். அர்ச். சாமிநாதர் அவளை காணச் சென்றபோது, தாய்மைப் பேறு கிடைக்கும்படி ஆண்டவரை மன்றாட ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லும்படி கூறினார். அவளும் அப்படியே அதைக் கடைபிடித்தாள். 1213-ம் ஆண்டு அவள் தன் மூத்த மகனைப் பெற்றாள்: பெயர் பிலிப். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே அம்மகன் இறந்தான்,

இதனால் அரசியின் ஊக்கம் தளர்ந்து விடவில்லை. மாறாக அவள் தேவ அன்னையின் உதவியை முன்னை விட அதிகம் மன்றாடினாள். அரச மாளிகையிலுள்ள எல்லாருக்கும் ஜெபமாலைகள் கொடுக்க ஏற்பாடு செய்தாள். நாட்டின் பல நகரங்களிலும் ஜெபமாலைகளை விநியோகம் செய்து எல்லோரையும் தன் கருத்து முழு நிறைவேற்றம் காணும்படி மன்றாட கேட்டுக் கொண்டாள். இங்ஙனம் 1215-ம் ஆண்டு அவளுக்கு இன்னொரு மகன் பிறந்தான். இந்த மகன்தான் அர்ச். லூயிஸ் அரசர். எல்லா கிறீஸ்தவ அரசர்களுக்கும் மாதிரிகையாக விளங்கியவர். பிரான்ஸ் நாட்டின் மகிமையாகத் துலங்கியவர்,

காஸ்டில், அரகோன் நாடுகளை ஆண்ட அரசனாகிய எட்டாம் அல்போன்ஸ் சீர் கெட்ட வாழ்க்கை வாழ்ந்ததால் கடவுளால் பல வகைகளில் தண்டிக்கப்பட்டார். அவர் போரில் தோல்வியுற்று தன் நேச நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்தது இத்தண்டனைகளில் ஒன்று.

அவ்வருடம் கர்த்தர் பிறந்த திருநாளன்று அர்ச். சாமிநாதர் அங்கு இருக்க நேரிட்டது. அவர் தாம் எப்பொழுதும் செய்து வந்தது போல் ஜெபமாலையைப் பற்றி அன்று பிரசங்கித்தார். அதன் மூலம் எவ்வளவு பெரிய வரங்களை அடைய முடியும் என எடுத்துக் கூறினார். ஜெபமாலையை உருக்கத்துடன் ஜெபிக்கிறவர்கள் தங்கள் எதிரிகளை மேற்கொள்வார்கள் என்றும் தாங்கள் போரில் இழந்தவைகளையெல்லாம் மீண்டும் அடைவார்களென்றும் கூறினார்.

இப்பிரசங்கத்தை அல்போன்ஸ் அரசன் கவனமுடன் கேட்டார். அர்ச். சாமிநாதரை அழைத்து, அவர் ஜெபமாலையைப் பற்றிக் கூறியவை உண்மைதானா என்று கேட்டார். அர்ச். சாமிநாதர் அவை மிகவும் உண்மை என்றும் ஜெபமாலைப் பக்தியை அரசன் கைக்கொண்டு அச்சபையில் உட்பட்டால் அவ்வுண்மையை நேரிலேயே கண்டு கொள்ளலாம் என்றும் கூறினார். அரசனும் தினம் ஜெபமாலை சொல்வேன் என உறுதி பூண்டார். ஒரு முழு ஆண்டளவாக தினமும் ஜெபமாலை ஜெபித்தார். அடுத்த கர்த்தர் பிறந்த திருநாளன்று அவர் ஜெபமாலை ஜெபித்து முடியவும் தேவ அன்னை அவருக்குத் தோன்றி: 'அல்போன்ஸ், நீ தினமும் என் ஜெபமாலையை ஒரு ஆண்டுக்காலம் ஜெபித்து என்னைச் சேவித்தாய். உனக்கு வெகுமானமளிக்க வந்துள்ளேன். என் குமாரனிடமிருந்து உன் பாவங்களுக்கு மன்னிப்பை அடைந்துள்ளேன். இச்செபமாலையை உனக்குத் தருகிறேன். இதை அணிந்து கொள். உன் பகைவர் எவரும் இனி உனக்குத் தீங்கிழைக்க முடியாது' என்று கூறினார்கள்.

அரசன் மிக்க மகிழ்வும் திடமும் பெற்றார். தேவ அன்னை மறைந்தார்கள். அவர் தன் மனைவியிடம் சென்று அன்னை கொடுத்த பரிசையும் அளித்த வாக்கையும் கூறினார். (சில காலமாக குருடாயிருந்த) அரசியின் கண் எதிரே அந்த ஜெபமாலையைக் காட்டவும் அவளுடைய பார்வையை அவள் மீண்டும் பெற்றாள்.

சிறிது காலத்தில் அரசன் தன் கூட்டு நாடுகளுடன் சேர்ந்து தைரியமாக தன் பகைவரை எதிர்த்துச் சென்றார். தன்னிடமிருந்து அவர்கள் அபகரித்திருந்த நிலப்பகுதியை மீட்டார். அவருக்கெதிராக அவர்கள் செய்த மற்ற அநீதிகளுக்கு ஈடு செய்து அவர்களை முற்றும் முறியடித்தார். போர்களில் அவருக்கு எவ்வளவு நல்ல வாய்ப்பு கிட்டியதென்றால், பல திசைகளிலிருந்து போர் வீரர்கள் அவருடைய கொடியின் கீழ் போரிட முன் வந்தனர். ஏனென்றால் இந்த அரசர் எப்பொழுது போருக்குப் புறப்பட்டாலும் வெற்றி அவருக்கே கிடைத்தது.

இதில் ஆச்சரியமில்லை . பக்தியுடன் முழங்காலில் நின்று ஜெபமாலை சொல்லாமல் அவர் ஒரு போதும் போருக்குப் புறப்படுவதில்லை. தன் அரண்மனையி லுள்ளவர்கள் யாவரும் ஜெபமாலைப் பக்தி சபையில் உட்படும்படி கவனித்துக் கொண்டதோடு அவருடைய அலுவலர்களும் ஊழியரும் அதற்கு உண்மையுடன் நடக்கவும் கருத்தாயிருந்தார்.

அரசியும் அச்சபையில் உட்பட்டு ஜெபமாலை ஜெபிக்க ஆரம்பித்தாள். அவள் கணவனும் அவளும் தேவ அன்னையின் ஊழியத்தில் நீடித்து நிலைத்திருந்து உண்மையான அர்ச்சிஷ்ட வாழ்வை மேற்கொண்டனர்.