இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - பகுதி 2 : அவருடைய ஆசிரியையாகிய மாமரி

அந்த நேரத்தில் அவருக்கருகே மகத்துவம் நிறைந்த தோற்ற முள்ள ஒரு பெண்மணியை நான் கண்டேன். அவர்கள் ஓர் அழகான மேற்போர்வையை அணிந்திருந்தார்கள். அது நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டது போல, ஒளிவீசிக் கொண்டிருந்தது. என் குழப்பம் அதிகரிப்பதை அவர்கள் கண்டார்கள். ஆகவே அவர்கள் என்னைத் தன்னிடம் அழைத்தார்கள். மிகுந்த கருணையோடு என் கையைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் என்னிடம்:

“பார்!” என்றார்கள்.

நானும் பார்த்தேன். எல்லாக் குழந்தைகளும் மறைந்து விட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக அங்கே நான் பல மிருகங்களைக் கண்டேன்: அங்கே வெள்ளாடுகளும், நாய்களும், பூனைகளும், கரடிகளும், இன்னும் பல வகையான மிருகங்களும் இருந்தன.

“இது உன்னுடைய வயல்; நீ வேலை செய்ய வேண்டியது இங்கேதான்” என்று அந்த இராக்கினி என்னிடம் கூறினார்கள். “தாழ்ச்சியும், நிலையுறுதியும், வலிமையும் உள்ளவனாக உன்னையே ஆக்கிக் கொள். இந்த மிருகங்களுக்கு எது நிகழக் காண்பாயோ, அதை என் குழந்தைகளுக்கு நீ செய்ய வேண்டியிருக்கும்.”

நான் மீண்டும் பார்த்தேன்; அந்தக் காட்டு மிருகங்கள், அதே எண்ணிக்கையிலான செம்மறியாட்டுக் குட்டிகளாக - சாந்தமுள்ள வையும், துள்ளிக் குதித்து விளையாடுபவையுமான - ஆட்டுக் குட்டிகளாக மாறி விட்டன! அவை அந்த மனிதரையும், அந்த இராக்கினியையும் வரவேற்கும் விதமாகக் கத்தின.

என் கனவின் இந்த இடத்தில் நான் அழத் தொடங்கினேன். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று விளக்கும்படி நான் அந்த இராக்கினியிடம் மன்றாடினேன். ஏனெனில் நான் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருந்தேன். அப்போது அவர்கள் என் தலைமீது தன் கரத்தை வைத்து,

“உரிய காலத்தில் உனக்கு எல்லாம் புரியும்” என்று கூறினார்கள்.

இந்த வார்த்தைகளை அவர்கள் பேசி முடித்த பின், ஏதோ ஒரு சத்தம் என்னை எழுப்பியது. எல்லாம் மறைந்து விட்டது. நான் முற்றிலும் குழப்பமடைந்திருந்தேன். அந்தச் சிறுவர்களோடு சண்டையிட்டதன் காரணமாக, என் கரங்கள் இன்னும் வலித்துக் கொண்டிருந்தன, என் கன்னங்கள் இன்னும் கொட்டப்பட்டவை போல வேதனை தந்தன. மேலும் அந்த மனிதரோடும், அந்த இராக்கினியோடும் நான் செய்த உரையாடல் எந்த அளவுக்கு என் மனதைக் குழப்பியது என்றால், அன்றிரவு மேற்கொண்டு என்னால் உறங்க முடியவில்லை .

காலையில் எழுந்தவுடனேயே இந்தக் கனவை விவரித்துச் சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை. என் சகோதரர்கள் இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான் அதன்பின் என் தாயிடமும், பாட்டியிடமும் கூறினேன். இதைக் கேட்ட ஒவ்வொரு வரும் வெவ்வேறான விளக்கங்கள் தந்தார்கள். என் சகோதரன் ஜோசப் : “நீ ஓர் இடையனாகி, வெள்ளாடுகளையும் செம்மறி யாடுகளையும், மற்ற வீட்டு மிருகங்களையும் மேய்க்கப் போகிறாய்” என்றான்.

என் தாயின் விளக்கம்: “யாருக்கும் தெரியும்? ஒருவேளை நீ ஒரு குரு ஆகலாம்.”

அந்தோணி வறட்சியாக, “நீ ஒரு கொள்ளையர் கூட்டத்துக்குத் தலைவனாகப் போகிறாயோ, என்னவோ?” என்றான்.

ஆனால் மிகுந்த தெய்வ பக்தியுள்ள, கல்வியறிவற்ற என் பாட்டியின் வார்த்தைதான் கடைசியானதாக இருந்தது: “நீ கனவு களுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது.”

இது பற்றி நானும் அப்படித்தான் நினைத்தேன். என்றாலும் என்னால் அந்தக் கனவை மறக்கவே முடியவில்லை. நான் இப்போது விவரிக்க இருப்பது, இதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவும். மேற்கொண்டு இந்த விஷயத்தை நான் வளர்க்கவில்லை, என் உறவினர்களும் அதற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை . 

ஆனால் 1858-ல் சலேசிய சபையைப் பற்றிப் பாப்பரசரோடு உரையாடும்படி நான் உரோமைக்குச் சென்றபோது, ஒன்பதாம் பத்திநாதர் என்னிடம் சுபாவத்திற்கு மேற்பட்ட அற்ப விஷயம் ஏதும் நிகழ்ந்திருந்தாலும் கூட, அது உட்பட எல்லாவற்றையும் தம்மிடம் சொல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். 

அப்போது, முதல் தடவையாக, எனக்கு ஒன்பது வயதாயிருந்தபோது நான் கண்ட கனவு பற்றி அவரிடம் சொன்னேன். நான் யாருக்காக உரோமைக்குப் போயிருந் தேனோ, அந்த சபை உறுப்பினர்களை ஊக்குவிக்கும்படியாக, அதை விவரமாக எழுதும்படி பாப்பரசர் எனக்கு ஆணையிட்டார்.

அடுத்த பதினெட்டு ஆண்டுகளாக இந்தக் கனவு ஜான் போஸ்கோவுக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை அது வந்தபோதும், அதில் எப்போதும் புதுப்புது காரியங்கள் சேர்ந்திருந்தன. 

இந்த ஒவ்வொரு கனவையும் கொண்டு, தமது மாணவர் விடுதி ஸ்தாபிக்கப்படுவது, தமது பணி விரிந்து பரவுவது ஆகியவை மட்டுமின்றி, இவற்றிற்கு எதிராக எழவிருந்த தடைகளையும், அவருடைய எதிரிகளின் சதித் திட்டங்களையும், அவற்றை வெற்றிகொள்வதற்கான வழியையும் கூட அவரால் அதிகத் தெளிவாகக் கண்டுகொள்ள முடிந்தது.