அத்தியாயம் 2. பாவசங்கீர்த்தனம் கிறீஸ்துநாதரால் ஏற்படுத்தப்பட்டது!

(உங்கள் ஆத்துமங்களை சுத்திகரித்துக்கொள்ளுங்கள்.)

தேவசுதன் மனிதனை இரட்சிப்பதற்காக உலகிற்கு வந்தார். எதிலிருந்து இரட்சிக்க வந்தார்? பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் இரட்சிக்க வந்தார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். பூமியில் இருந்தபோது, அவர் கற்பித்த பக்திக்குரிய ஞானப் பாடங்கள், அவர் நமக்குத் தந்தைவழிச் சொத்தாக விட்டுச் சென்ற அற்புதமான ஞான போதகம், அவர் ஏற்படுத்திய தேவத்திரவிய அனுமா னங்கள், அவர் செய்த அதிசயமான புதுமைகள் ஆகிய இவை அனைத்தும், பாவத்திலிருந்து மனிதனை இரட்சிப்பதை மட்டுமே தங்கள் மாபெரும் நோக்கமாகக் கொண்டிருந்தன.

இங்கே பூமியில் நம்மோடு நமதாண்டவர் வாழ்ந்த 33 ஆண்டுகளும், அவருடைய கொடூரமான துன்பங்களும், அவர் சிந்திய விலைமதியாத திரு இரத்தமும், கல்வாரியின் மீது அவர் அடைந்த திருமணமும் ஒரே ஒரு நோக்கத்தைத் தான் கொண்டிருந்தன. உலகத்தைப் பாவத்திலிருந்து துப்புர வாக்குவதுதான் அந்த நோக்கம். இந்த நோக்கத்தை அவர் சாதித்திருக்கவில்லை என்றால், அவரிடம் ஒப்படைக்கப் பட்ட பணி ஒரு தோல்வியாகவே இருந்திருக்கும்.

இந்த நோக்கத்திற்காகத்தான் அவர் வந்தார், பாவி களை நேசித்தார், அவர்களோடு வாழ்ந்தார், அவர்களைத் தம்மிடம் அழைத்தார். அவர்களில் ஒருவரும், பலவீனருமான இராயப்பரைத் தம் திருச்சபையின் தலைவராக்கினார். கோபவெறியோடும், இரக்கமற்ற விதமாகவும் தமது திருச் சபையைத் துன்புறுத்தியவரான சின்னப்பரை, அவர் புறஜாதியாரின் அப்போஸ்தலராகவும், ''தெரிந்து கொள்ளப் பட்ட பாத்திரமாகவும்" (அப். 9:15) மாற்றினார். கொடிய பாவியும், தான் வாழ்ந்த ஊருக்குப் பெரும் துர்மாதிரிகை யுமாக இருந்த மரிய மதலேனம்மாளை அவர் தம் விசேஷ சீடப் பெண்ணாகத் தெரிந்து கொண்டு, தபசு செய்பவர் களுக்கு அவளை முன்மாதிரிகையாக்கினார். இறுதியாக, தமது மாசற்ற திருமாதாவிடம் அவளை ஒப்படைத்தார்.

இந்தக் காரியத்தில் நமக்கு வரும் சந்தேகங்களைப் போக்குவதற்கு நம் ஆண்டவருடைய செயல்கள் போது மானவையாக இல்லை என்றால், 'நீதிமான்களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' (மத். 9:13) என்ற அவருடைய நேரடியான பிரகடனம் நமக்குப் போதுமான தாக இருக்கும்.

இனி, கிறீஸ்துநாதர் தம்மிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த பணியை எக்காலமும் தொடர்ந்து செய்வதற் கான அதிகாரத்தைத் தம் திருச்சபைக்குத் தந்து, அதை இறுதி வரையிலும் முழுமையாகப் பாதுகாப்பதாக அதற்கு வாக்குறுதியும் அளித்தார்:

''இதோ நான் உலக முடிவு வரை எந்நாளும் உங்களோடேகூட இருக்கிறேன்'' (மத். 28:20), ''நரகத்தின் வாசல்கள் திருச்சபையை மேற்கொள்ள மாட் டாது'' (மத்.16:18) என்று அவர் வாக்களித்தார்.

உண்மையில் பாவத்திற்கு எதிரான அதியற்புதமான, உந்நதமான தீர்வு ஒன்றை தமது திருச்சபைக்கு அவர் தராமல் போயிருந் தால், அது மிகவும் ஆச்சரியத்திற்குரிய காரியமாகவே இருந்திருக்கும். ஏனெனில் ஆத்துமங்களின்மீது அளவற்ற பரிதவிப்பாலும், இரக்கத்தாலும், நன்மைத்தனத்தாலும், அன்பாலும் தூண்டப்பட்டு, அந்த ஒரே நோக்கத்திற்காகத் தான் அவர் உலகிற்கு வந்தார்.

தாம் இவ்வளவு ஆவலோடு ஏங்கித் தேடியதை சாதிக்க நம் ஆண்டவருக்குள்ள வல்லமையைப் பற்றி நிச்சய மாக யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அப்படியே அவருடைய மட்டற்ற அன்பையும், தாராளத்தைப் பற்றியும் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஒரே வார்த்தையால் ஒன்றுமில்லாமையிலிருந்து இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்தை சிருஷ்டித்த அந்த சர்வ வல்லப சர்வேசுர னுக்கு, தமது சிருஷ்டிகளாகிய பலவீனமுள்ள மனிதர்களை உயர்த்தி, அவர்களை மன்னித்து, நீதியின் பாதையில் அவர் களை உறுதிப்படுத்துவதில் எந்த சிரமமும் இருக்க முடியாது. அவருடைய அளவில்லாத அன்பும், தாராளமும் மகா கொடூரமான வாதைகளின் மத்தியில் தம் உயிரைக் கையளிக்க அவரைத் தூண்டின. யாருக்காக அப்படி மரித்தாரோ, அவர்களுக்காக அந்த அன்பும், தாராளமும் தங்களாலியன்ற எல்லாவற்றையும் நிச்சயமாகச் செய்யும்.

பாவத்திற்கு எதிராக நம் ஆண்டவர் விட்டுச் சென்ற அந்தத் தீர்வு பாவசங்கீர்த்தனம் ஆகும். அதில் பாவியானவன் தனது குற்றத்திலிருந்து மன்னிக்கப்படுவது மட்டு மல்ல, (இதை நன்கு குறித்துக் கொள்ளுங்கள், அன்புள்ள வாசகர்களே), மாறாக, அவன் எதிர்காலத்தில் பாவத்தை விலக்கத் தேவையான பலத்தையும் வல்லமையையும் கூட பெற்றுக்கொள்கிறான்.

''உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன. சமாதானமாய்ப் போ, இனி பாவம் செய்யாதே" என்று பாவியான அந்தப் பெண்ணுக்குத் தாம் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் பாவசங்கீர்த்தனம் செய்ய தம்மிடம் வரும் ஒவ்வொரு மனஸ்தாபமுள்ள பாவியிடமும் அவர் சொல்கிறார். பாவம் செய்யாதிருக்கும்படி அவர்களுக்கு அவர் கட்டளையிடுவது மட்டுமல்ல, அப்படிப் பாவம் செய்யாதிருக்கத் தேவையான பலத்தையும் விருப்பத்தையும் அவரே அவர்களுக்குத் தருகிறார்.