இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 26. உன்னதமான ஜெபம்

ஜெபமாலையைப் பற்றிப் பேச்சு வந்தால், உரோமையிலுள்ள ஒரு பெண் அடிக்கடி குறிப்பிடப்படுகிறாளே, அந்த சுயேச்சைக்காரியான பக்திமானைப் போல் நீங்கள் இருக்க வேண்டாம். அவள் எவ்வளவு உருக்கமான பக்தியுடையவளென்றால் திருச்சபையிலுள்ள மிக கடின கட்டுபாடுள்ள துறவிகளை விட மிஞ்சிய பக்தி பற்றுதல் அவளிடம் காணப்பட்டது.

இந்தப் பெண் அர்ச். சாமிநாதரிடம் தன் ஆன்ம வாழ்வைப் பற்றி ஆலோசனை கேட்க விரும்பி, முதலில் அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்றாள். அர்ச். சாமிநாதர் அவளுக்கு பரிகாரமாக ஒரு முழு ஜெபமாலையைக் கட்டளையிட்ட பின் தினமும் அவள் ஒரு முழு ஜெபமாலை செய்தால் நல்லது என ஆலோசனையாகச் சொன்னார். அவளோ அப்படிச் செய்வதற்கு தனக்கு நேரமில்லை என்றாள். தான் தினமும் ரோமையிலுள்ள சில குறிப்பிட்ட கோவில்களைச் சந்தித்து குறிப்பிட்ட ஜெபங்களை சொல்வதாகவும் (இப்படி ஒரு பழக்கம் அப்போது இருந்தது) தான் சாக்கு உடையும் மயிர்ச்சட்டையும் அணிவதாகவும், வாரத்தில் பல தடவை கசையால் தன்னை அடித்துக் கொள்வதாகவும், இன்னும் அநேக தவ முயற்சிகளையும் அதிகமான உபவாசங்களையும் கைக் கொண்டிருப்பதாகவும் காரணம் கூறினாள்.

அர்ச். சாமிநாதர் திரும்பவும் திரும்பவும் அவள் ஒரு முழு ஜெபமாலை தினமும் சொல்லும்படி கேட்டார். அவளோ அதற்கு இணங்கவில்லை. தான் விரும்பாத ஒரு பக்தி முயற்சியை ஏற்றுக் கொள்ளும்படி தன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு வற்புறுத்தும் ஒரு ஆன்ம குருவைப் பற்றி எரிச்சலுடன் திரும்பினாள்.

பின்பு ஒரு நாள் அவள் ஜெ பித்துக் கொண்டிருக்கையில் பரவசமாகி தன் ஆன்மா ஆண்டவரின் நீதி ஆசனத்தின் முன் நிற்பதாகக் கண்டாள். அர்ச். மிக்கேல் சம்மனசானவர் அவள் செய்து வந்த எல்லா தவமுயற்சிகளையும் மற்றும் ஜெபங்களையும் தராசின் ஒரு தட்டில் வைத்து. அடுத்த தட்டில் அவளுடைய எல்லாப் பாவங்களையும் குறை பாடுகளையும் வைத்தார். அவள் பாவங்களின் தட்டு பாரத்தால் கீழே இறங்கியது.

இதைக் கண்ட அப்பெண் பயந்து தனக்காகப் பரிந்து பேசும் தேவ அன்னையை மன்றாடி தனக்கு இரக்கம் கிடைக்க வேண்டுமென்று கதறினாள். அவள் மீது இரக்கம் கொண்ட கன்னித்தாய் அவள் பரிகாரத்திற்கென செய்த ஒரே ஒரு ஜெபமாலையை அவளுடைய நற்செயல்கள் வைக்கப்பட்டிருந்த தட்டில் வைத்தார்கள். இந்த ஒரு ஜெபமாலையும் எவ்வளவு பாரமாக இருந்ததென்றால் அது ஒன்றே அவளுடைய பாவங்கள் எல்லாவற்றையும் விட - அவளுடைய நற்செயல்கள் யாவற்றையும் விட - நிறையில் அதிகமாயிருந்தது. இதன்பின் தேவ அன்னை தன் ஊழியன் சாமிநாதனுடைய ஆலோசனையை அவள் ஏற்று தினமும் ஜெபமாலை சொல்லாததற்காக அவளைக் கடிந்தார்கள்.

இந்தப் பெண் தன் சுய நினைவுக்கு வந்த உடனே அர்ச். சாமிநாதரிடம் சென்று அவர் பாதத்தில் விழுந்து நடந்ததெல்லாம் கூறி, தன் அவிசுவாசத்திற்கு மன்னிப்பு கேட்டாள். தினமும் ஜெபமாலை சொல்வதாகவும் வாக்களித்தாள். இவ்விதம் அவள் கிறிஸ்தவ உத்தமதனத்தையும், இறுதியில் நித்திய மகிமையையும் அடைந்தாள்.

இதிலிருந்து ஜெபமாலையின் வலிமை எவ்வளவு பெரியது. அதன் விலை யாது, அதன் முக்கியத்துவம் என்ன, தியானத்துடன் கூடிய ஜெபமாலைப் பக்தி எத்தகையது என்று ஜெப வாழ்வு வாழும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அர்ச். மரிய மதலேனைப் போன்ற உன்னத ஜெப நிலையை வெகு சில அர்ச்சிஷ்டவர்களே அடைந்துள்ளார்கள். தினமும் தேவ தூதர்களால் அவள் மோட்சம் வரை உயர்த்தப்படுவாள். நமதாண்டவரிடமும் அவர் திருத்தாயிடமும் நேர்முகமாக பாடம் பயின்றவள் மரிய மதலேன். ஒரு நாள் அவள் சர்வேசுரனிடம் தான் அவருடைய அன்பில் வளரவும் உத்தமதனத்தின் உயர்விற்கு வந்து சேரவும் நிச்சயமான ஒரு வழியைக் காட்டும்படி கேட்டாள். சர்வேசுரன் அதிதூதரான அர்ச். மிக்கேலை அவளிடம் அனுப்பி, நமதாண்டவரின் பாடுகளை தியானிப்பதைவிட உத்தமதனம் அடைய வேறு சிறந்த வழி இல்லை என்று அறிவித்தார். மேலும் அதிதூதர் அவளுடைய குகையின் வாசலில் ஒரு சிலுவையை நட்டு, அவள் தன் கண்ணால் நேர்முகமாய்க் கண்ட துக்கத்தேவ இரகசிய நிகழ்ச்சிகளை அந்த சிலுவையின் முன் இருந்து தியானித்து ஜெபிக்கும்படி கூறினார்.

அர்ச். பிரான்ஸிஸ் சலேசியார் ஒரு பெரிய அர்ச்சிஷ்டவர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு முழு ஜெபமாலை சொல்வதாக நேர்ந்து. தம்மையே இந்த நேர்ச்சிப் பிரமாணத்தால் கட்டாயப்படுத்திக் கொண்டார். இவர் ஓர் பெரிய ஆன்ம குருவாயிருந்தவர். இவருடைய இம்முன்மாதிரிகை, ஜெபமாலைப் பக்தி சபையில் சேர நிச்சயம் உங்களைத் தூண்டும்.

அர்ச். சார்லஸ் பொரோமெயோ என்பவர் தினமும் ஜெபமாலை சொல்லி வந்தார். தம் குருக்களும் குரு மடத்திலுள்ளவர்களும் தம் கிறீஸ்தவ மக்களும் இப்பக்தியைக் கைக்கொள்ளும்படி மிகவும் ஊக்கமாக உபதேசித்தார்.

திருச்சபையை ஆண்ட சிறந்த பாப்புமார்களுக்குள் ஒருவரான அர்ச். 5-ம் பத்திநாதர் தினமும் ஜெபமாலை ஜெபித்து வந்தார். வாவென்ஸ் அதிமேற்றிராணியரான வில்லனோவா அர்ச். தோமையார், அர்ச். இஞ்ஞாசியார், அர்ச். பிரான்சிஸ் சவேரியார், அர்ச். தெரசம்மாள், அர்ச். பிலிப் நேரியார் இன்னும் நான் இங்கு கூறாத பெரியோர் பலர் ஜெபமாலை மீது அழ்ந்த பற்று உடையவர்களா யிருந்தனர்,

இவர்களைக் கண்டு நடங்கள், உங்கள் ஆன்ம வழிகாட்டிகள் இப்பக்தி முயற்சியால் நீங்கள் அடையக்கூடிய பலன்களை அறிவார்களானால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அதோடு ஜெபமாலையைக் கைக்கொள்ளும்படி அவர்களே உங்களை ஊக்கப் படுத்துவார்கள்.