இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 24. உத்தமதானம் அடையும் வழி

அர்ச்சிஷ்டவர்கள் நமதாண்டவருடைய வாழ்க்கையை அறிந்து கொள்வதையே தங்கள் சிந்தனையின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவருடைய புண்ணியங்களையும் பாடுகளையும் தியானித்தார்கள், அதன் மூலம் அவர்கள் கிறிஸ்தவ உத்தமதனத்தை அடைந்தார்கள்.

அர்ச். பெர்னார்ட் என்பவர் இவ்வித தியானத்தை ஆரம்பித்தபின் அதை எப்போதும் விடாமல் செய்து வந்தார். அவர் கூறுகிறார்: 'நான் ஆண்டவர் பக்கமாய்த் திரும்பிய புதிதில், என் மீட்பருடைய பாடுகளால் மீறை என்னும் மலர்ச்செண்டு கட்டி அதை என் இருதயத்தில் வைத்துக் கொண்டேன். அவர் பட்ட அடிகளையும் அவருடைய முள் முடியின் முட்களையும் அவருடைய ஆணிகளையும் நினைத்தேன். இந்த உண்மைகளை ஒவ்வொரு நாளும் சிந்திப்பதில் என் மனவலிமை யெல்லாவற்றையும் பயன்படுத்தினேன்',

வேத சாட்சிகளும் இவ்வாறே செய்து வந்தனர், அவர்கள் மிகவும் கொடிய குரூர வேதனைகளை எவ்வளவு அதிசயிக்கத்தக்க முறையில் மேற்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். வேதசாட்சிகளின் வியப்புக்குரிய நீடித்த சகிப்புத்தன்மை ஒரே ஒரு காரணத்திலிருந்துதான வந்திருக்க முடியும். அதுவே அவர்கள் எப்போதும் செய்து வந்த சேசு கிறிஸ்துவின் காயங்களைப் பற்றிய தியானம். கிறிஸ்துவின் வீரர்களே வேதசாட்சிகள். அவர்களுடைய உடல் கொடிய வாதைகளால் நொறுக்கப்பட்டு அவர்கள் இரத்தம் பீறிட்டுப் பாய்ந்த போது, ஆண்டவருடைய காயங்களுக்குள்ளே அவர்களுடைய தாராளமுள்ள ஆன்மாக்கள் மறைந்து கொண்டன, எதுவும் அவர்களை மேற்கொள்ளாது டி நமதாண்டவரின் காயங்கள் செய்தன என்று அர்ச்சிஷ்ட பெர்னார்ட் கூறுகிறார்.

தன் திருக்குமாரனின் புண்ணியங்களையும் பாடுகளை யும், சிந்திப்பதே மாதாவுடைய வாழ்நாளில் முக்கிய இடம் பெற்றிருந்தது. அவர் பிறந்த வேளை சம்மனசுக்கள் பாடிய மகிழ்ச்சிப் பாடல்களை அவர்கள் கேட்டார்கள். மாட்டுத் தொழுவில் ஆயர்கள் வந்து அவரை ஆராதிப்பதைக் கண்டார்கள், அவர்களின் இருதயம் வியப்பால் நிறைந்திருக்க, இவ்வதிசய நிகழ்ச்சிகளை உள்ளத்தில் சிந்தித்தார்கள். மனித அவதாரமான தேவ வார்த்தையின் உயர்வை - அவருடைய ஆழ்ந்த தாழ்மை - தன்னையே அவர் எவ்வாறு தாழ்த்தினார் என்ற உண்மையுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். வைக்கோல் நிரம்பிய முன்னிட்டியில் அவர் இருந்ததையும், நித்திய பிதாவின் நெஞ்சத்தில் பரலோக ஆசனத்தில் அவர் வீற்றிருப்பதையும் எண்ணிப் பார்த்தார்கள், இறைவனின் வல்லமையுடன், குழந்தையின் பலவீனத்தை ஒப்பிட்டு நோக்கினார்கள். அவர்களுடைய ஞானத்துடன் இந்த பாமர தன்மையை பொருத்திப் பார்த்தார்கள்.

அர்ச். பிரிஜித் அம்மாளிடம் ஒரு நாள் தேவ தாய் இவ்வாறு கூறினார்கள்: 'என் குமாரனுடைய அழகு பொறை, ஞானம் இவற்றை நான் சிந்தித்த போதெல்லாம் என் இருதயம் மகிழ்வால் நிறைந்தது. அவருடைய கரங்களும் பாதங்களும் கொடிய ஆணிகளால் துளைக்கப்படுமே என்று நான் நினைத்த போதெல்லாம் நான் மிகவும் கசிந்து அழுதேன். என் இருதயமும் துயரத்தாலும் வேதனையாலும் கிழிந்து போயிற்று',

நமதாண்டவர் பரலோகம் சென்ற பின், தேவ தாய் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவருடைய பிரசன்னத்தாலும் பாடுகளாலும் புனிதமாக்கப்பட்ட இடங்களைத் தரிசிப்பதிலே செலவிட்டார்கள். அந்த இடங்களில் அவர்கள் சேசுவின் அளவற்ற அன்பையும் கொடிய பாடுகளையும் நினைத்து சிந்தித்தார்கள்.

* அர்ச் மரிய மதலேனம்மாள் தன் வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளாக பரிமளம் என்ற இடத்தில் வாழ்ந்தபோது ஜெபத்தியானத்திற்கு ஏற்ற அந்த இடத்தில் இவ்வித ஞான முயற்சிகளைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. (* கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின்படி (Cath. Encyclopedla) அர்ச். மரிய மதலேன் தன் இறுதி 30 ஆண்டுகளையும் புராவென்ஸ் நாட்டில் பரிமளம் என்ற இடத்தில் கழித்ததாக பாரம்பரியம் கூறுகின்றது. சாமிநாதர் சபையைச் சேர்ந்த ஓர் ஆலயத்தில் அவளுடைய சிரம் வணங்கப்படுகிறது. புனித யாத்திரையாக மக்கள் அங்கு செல்கின்றனர்.)

திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் புனித தலங்கள் மீது விசுவாசிகளிடையே பக்தி பரவி இருந்தது என அர்ச். எரோணிமுஸ் கூறுகிறார். தமது பிறப்பு, வேலை, பாடுகள், மரணம் இவற்றால் தங்கள் மீட்பர் புனிதப்படுத்திய இடங்களைப் பார்ப்பதால் அவர் மீது அதிக அன்டையும் அவரைப் பற்றிய ஞாபகத்தையும் தங்கள் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கும்படி கிறீஸ்தவ உலகின் எல்லா திசைகளிலிருந்தும் கிறீஸ்தவ மக்கள் புனித நாட்டுக்கு வந்தார்கள்.

கிறீஸ்தவர்கள் அனைவரும் ஒரே விசுவாசம் கொண்டிருக்கிறார்கள், ஒரே கடவுளை வழிபடுகிறார்கள், எல்லாரும் ஒரே மோட்ச இன்பத்தில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், அவர்களுக்கு ஒரே மத்தியஸ்தர் சேசு கிறீஸ்து. எனவே அவர்கள் எல்லோரும் தங்களின் ஒரே தெய்வீக மாதிரிகையான அவரையே பின்பற்றி நடத்தல் வேண்டும். இதனைச் செய்வதற்கு அவர்கள் அவருடைய வாழ்வின் திருநிகழ்ச்சிகளையும் புண்ணியங்களையும் அவருடைய மகிமையையும் தியானித்தல் வேண்டும்.

குருக்களும் துறவியரும், உலக சந்தடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களும்தான் விசுவாச உண்மைகளைப் பற்றியும் சேசு கிறீஸ்துவின் வாழ்வின் திரு நிகழ்ச்சிகள் பற்றியும் தியானிக்க வேண்டும் என்று எண்ணுவது ஒரு பெரும் தவறு. குருக்களும் துறவியரும் நம் திருமறையின் பெரும் உண்மைகளைப் பற்றி தியானிப்பது அவர்களுடைய அழைத்தலுக்குப் பொருந்த வாழ்வதற்கு அவசியமானால் விசுவாசிகளும் தங்கள் அழைப்பிற்குத் தக்க வாழுமாறு அவ்வித தியானம் செய்வது அவசியமே. ஏனென்றால் தங்கள் ஆன்மாவை இழக்கச் செய்யும் ஞான ஆபத்துக்களை அவர்கள் தினமும் எதிர் கொள்கிறார்கள். எனவே அவர்கள் அடிக்கடி நமதாண்டவரின் வாழ்வு, புண்ணியங்கள், பாடுகள் இவற்றை தியானித்து தங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். இத்தியானப் பொருள்களை ஜெபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களிலும் அழகுறக் காணலாம்.