இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 23. ஒரு நினைவுச் சின்னம்

சேசு கிறீஸ்து நமதான்மாக்களின் மணாளனும் மிகவும் அன்புள்ள நண்பனுமாயிருக்கிறார். அவர் நம்மீது காட்டும் நன்மைத் தனத்தையும் நமக்குத் தந்தருளிய வரங்களையும் நாம் ஞாபகத்தில் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் விட இவைகளை அதிகம் மதிக்க வேண்டுமென விரும்புகிறார். நாம் ஜெபமாலையின் தேவ இரகசியங்களை பக்தியுடனும் அன்புடனும் தியானிக்கும் போதெல்லாம் நமதாண்டவருக்கும் தேவ அன்னைக்கும் மோட்சத்திலுள்ள எல்லா அர்ச்சிஷ்டவர்களுக்கும் ஒரு பரிபூரண மகிழ்ச்சியை நாம் அளிக்கின்றோம்,

நமதாண்டவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் தனித்த பலன்தான் இத்தேவ இரகசியத் திருநிகழ்ச்சிகள். அவர் நமக்குத் தரக்கூடிய மிகப்பெரிய கொடையும் இவைதான். ஏனென்றால், அர்ச்சிஷ்டவர்களும், ஏன் கன்னிமரியாயுங்கூட மகிமையுடன் மோட்சத்தில் இருப்பதே இக்கொடையினால்தான்.

முத்தி பேறு பெற்ற ஃபோலிக்னோ ஆஞ்செலா ஒரு நாள் நமதாண்டவரிடம், எந்த ஞான முயற்சியைச் செய்தால் அவருக்கு அதிக மகிமையளிக்கலாம் என்று கேட்டாள். சேசு சிலுவையில் அறையப்பட்டடவராய் அவளுக்குத் தோன்றி, 'மகளே இதோ என் காயங்களைப் பார்' என்றார். நமதாண்டவரின் பாடுகளை நாம் தியானிப்பதே அவருக்கு மிகவும் விருப்பமானது என ஆஞ்செலா இதனால் அறிந்து கொண்டாள். அதன்பின் சேசு தலையிலுள்ள காயங்களைக் காட்டி இன்னும் வேறு பல வேதனைகளையும் அவளுக்கு அறிவித்து, இவற்றையெல்லாம் உன்னை மீட்கும்படி நான் அனுபவித்தேன். நான் உன் மேல் கொண்ட அன்புக்குப் பதிலாக என்னதான் நீ செய்ய முடியம்? என்றார்,

திவ்ய பலிபூசை மகா அர்ச், தமதிரித்துவத்திற்கு அளவற்ற மகிமையளிக்கின்றது. ஏனென்றால் அது சேசு கிறிஸ்துவின் பாடுகளின் பிரதிபலிப்பாய் இருக்கிறது. மேலும் திவ்யபலி பூசையினால் நாம் நமதாண்டவரின் பாடுகளின் பலனையும் அவருடைய கீழ்ப்படிதலையும் அவருடைய வேதனைகளையும் அவருடைய மிகவும் பரிசுத்தமான திரு இரத்தத்தையும் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம். மோட்ச இராஜ சபை முழுவதுமே திருப்பலியினால் கூடுதலான மகிழ்வைப் பெறுகின்றது. திருச்சபையின் வேத சாஸ்திரிகள் பலர், அர்ச். தாமஸ் அக்வினாஸ் உட்பட இவ்வாறு கூறுகிறார்கள்: அதாவது, திருப்பலி பூசையினால் மோட்சவாசிகள் யாவரும் விசுவாசிகளின் சமூக பிரயோஜனத்தில் மகிழ்கிறார்கள். ஏனெனில் திவ்விய நற்கருணை, சேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் இவற்றின் நினைவுச் சின்னமாயிருக்கிறது. திருப்பலியினால் மனிதர்கள் அவற்றில் பங்கு கொண்டு தங்கள் ஈடேற்றத்தை அடைந்து கொள்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க. தேவ இரகசியங்களைத் தியானித்துச் சொல்லப்படும் ஜெபமாலை இரட்சண்யம் என்னும் பெரும் கொடைக்காக சர்வேசுரனுக்கு நன்றி கூறும் ஒரு புகழ்ச்சிப் பலியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, அது சேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், மகிமை இவற்றின் புனித நினைவு கூர்தலாகவும் உள்ளது. எனவே ஜெபமாலை நமதாண்டவருக்கும் தேவ தாய்க்கும் அர்ச்சிஷ்டவர்களுக்கும் கூடுதல் மகிழ்வை அளிக்கின்றது என்பது உண்மையே. ஏனென்றால், நமதாண்டவருக்கு இத்துணை மகிமையளிப்பதும் நம் ஈடேற்றத்துக்கு இவ்வளவு உதவக் கூடியதுமான ஜெபமாலைப் பக்தியில் நாம் ஈடுபடுவதைக் காண்பதைவிட அதிக பெரியதும் நம் நித்திய மகிழ்வுக்கு உதவக்கூடியதுமான வேறு எதையும் அவர்கள் விரும்ப முடியாது.

மனந்திருந்தி தவஞ்செய்கிற ஒரு பாவி எல்லா சம்மனசுக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக சுவிசேஷம் கூறுகிறது. ஒரு பாவி மனந்திருந்தித் தவஞ் செய்வதால் சம்மனசுக்கு மகழ்ச்சி உண்டாகிறதென்றால், நாம் இவ்வுலகில் பக்தியுடனும் அன்புடனும் நமதாண்டவரின் தாழ்வு, நோவு கொடிய கேவல மரணம் இவற்றைத் தியானிப்பதைக் காணும் நம் ஆண்டவரும் விண்ணுல கத்தோரும் எவ்வளவு பெரும் மகிழ்ச்சியும் ஆனந்த அக்களிப்பும் அடைவார்கள். இதை விட எதுதான் நம் இருதயங்களைத் தொட முடியும்? இதை விட எதுதான் நம்மை உண்மையான மனந்திருந்துதலுக்கு தூண்ட முடியும்?

ஜெபமாலையின் தேவ இரகசியங்களைத் தியானிக்காத ஒரு கிறீஸ்தவன் நமதாண்டவருக்கு மிகவும் நன்றி கெட்டவனாவான். நம் தெய்வீக மீட்பர் உலகத்தை மீட்க எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை என்றுதானே காட்டுகிறான். மேலும் அவனுடைய இந்த மனப்பான்மை எதை வெளிப்படுத்துகிறது? சேசு கிறீஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி அவன் ஒன்றுமே அறியவில்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவன் முயன்றதேயில்லை. நம்மை மீட்க சேசு என்ன செய்தார், என்னவெல்லாம் பட்டனுபவித்தார் என்று அவன் தெரிந்து கொள்ளவில்லை என்பதையல்லவா காட்டுகிறது.

இப்படிப்பட்ட கிறீஸ்தவன், ஒரு போதும் கிறீஸ்துவை அறியாதவனாயிருப்பதால், அல்லது அவரை தன் மனதிலும் இருதயத்திலுமிருந்து வெளியேற்றி விட்டதால், சேசுவும் தீர்வை நாளில் அவனை மறுதலிப்பார். அவன் மீது குற்றம் சுமத்தி உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன் உன்னை அறியேன் என்று கூறுவார் என அவன் அஞ்ச வேண்டும்.

எனவே நாம் ஜெபமாலை வழியாக நமதாண்டவரின் வாழ்வையும் அவருடைய பாடுகளையும் நினைப்போம். அவருக்கு நன்றியுள்ளவர்களாகும்படி அவரை அறிந்து கொள்வோம். தீர்ப்பு நாளில் நம்மை அவர் தம் மக்களுடனும் நண்பர்களுடனும் சேர்த்துக் கொள்ளும்படி அவ்விதம் செய்வோம்.