இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 22. ஜெபமாலை நம்மை கிறீஸ்துவைப் போல் ஆக்குகின்றது

உத்தம தனத்தை அடைய முயல்வதே ஒரு கிறிஸ்தவனின் முதல் கவலையாக இருக்க வேண்டும் மிகவும் அன்புள்ள பிள்ளைகளைப் போல கடவுளைப் பின் செல்பவர்களாயிருங்கள் என்று அர்ச். சின்னப்பர் உரைக்கிறார் (எபேசி. 5:1). நித்தியமாய் நம்மை முன் நியமம் செய்திருக்கும் சர்வேசுரனின் திட்டத்திலேயே இந்தக் கடமை உள்ளடக்கப்பட்டுள்ளது. நித்திய மகிமையை அடைவதற்கு அவரால் தரப்பட்டுள்ள ஒரே வழி உத்தமதனம் அடைய முயல்வதே என்ற அளவிற்கு இந்தக் கடமை உள்ளது.

அர்ச். நிஸா கிரகோரியார் ஒரு அழகிய உபமானம் கூறுகிறார்: நாம் ஓவியர்கள், நமது ஆன்மாக்கள்தான் ஓவியம் எழுதப்படும் வெற்றுப் பலககைகள். ஓவியத்தால் இவற்றை நாம் நிரப்ப வேண்டும். கிறீஸ்தவப் புண்ணியங்கள் தான் நாம் உபயோகிக்க வேண்டிய வண்ணங்கள். பிதாவாகிய சர்வேசுரனின் உயிருள்ள உருவமான சேசு கிறீஸ்துவே நாம் பார்த்து எழுத வேண்டிய மாதிரிகை ஆகும். ஒரு படத்தை வரையும் ஓவியன் அதை நன்றாகச் செய்ய வேண்டுமானால், மாதிரிப் படத்தின் முன் நின்று ஒவ்வொரு கோடு வரையுமுன்னும் அதைப் பார்த்துக் கொள்கிறான். அவ்வாறே கிறீஸ்தவன் ஒருவன் சேசு கிறீஸ்துவின் புண்ணியங்களையும் வாழ்வையும் எப்பொழுதும் கண்முன் நிறுத்தி அந்த மாதிரிக்கு மாறுபட்ட எதையும் நினையாமலும் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மீட்பை அடையும் மாபெரும் அலுவலில் நமக்கு உதவ விரும்பினார்கள் நம் தேவ அன்னை . ஆகவே தான் சேசு கிறீஸ்துவின் வாழ்வின் திருநிகழ்ச்சிகளை விசுவாசிகளுக்கு தியானிக்க கற்றுக் கொடுக்குமாறு அர்ச். சாமிநாதருக்குக் கட்டளையிட்டார்கள். மாதா இப்படிச் செய்தது, நாம் சேசுவை ஆராதித்து மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுல்ல. ஆனால் மிக முக்கியமாக, அவருடைய வாழ்வு செயல்கள் புண்ணியங்கள் இவற்றை முன் வைத்து. அவ்வாறே நாமும் நம் வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 

பெற்றோரைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடன் பேசுவதாலும் அவர்கள் பேசக் கேட்பதாலும் பெற்றோர்களுடைய மொழியை பிள்ளைகளும் அறிந்து கொள்கிறார்கள். தொழில் கற்கும் மாணவன் தொழிலாசிரியர் வேலை செய்வதைப் பார்த்து பயிற்சி பெறுகிறான். இதே போல் ஜெபமாலைப் பக்தி சபையின் உறுப்பினர் தங்கள் தெய்வீக ஆசிரியரைப் போல ஆக முடியும். எப்படியென்றால் இப்பதினைந்து திரு நிகழ்ச்சிகளிலும் காட்டப்படுகின்ற அவருடைய புண்ணியங்களை வணக்கத்துடன் கற்றுக் கொண்டு நடைமுறையில் கடைபிடிப்பதால், அவருடைய அருளாலும் அவரது அன்னையின் மன்றாட்டின் உதவியாலும் இது சாத்தியமாகும்.

சர்வேசுரன் யூத மக்களுக்குச செய்த நன்மைகளை அவர்கள் ஒரு போதும் மறக்கக்கூடாது என்பதை கட்டளையாகச் சொல்லும்படி நெடுங்காலத்திற்கு முன்பே மோயீசன் இறைவனால் ஏவப்பட்டார். இதுவே இப்படியானால் தேவ திருச்சுதன் தம் வாழ்வு, பாடுகள், மரணம் ஆகிய திரு நிகழ்ச்சிகளை நம் இருதயங்களில் பதித்து அவற்றை எப்பொழுதும் நம் கண்முன் நிறுத்த வேண்டுமெனக் கேட்க எவ்வளவோ பெரிய காரணம் உள்ளது! ஏனென்றால் ஒவ்வொரு தேவ இரகசியமும் ஒரு தனிப்பட்ட முறையில் நமக்கு அவர் செய்துள்ள நன்மையை நினைவூட்டுகின்றது. இந்தத் திருநிகழ்ச்சிகளின் வழியாகவே அவர் நம் மீது கொண்டுள்ள பொங்கி வழியும் அன்பையும், நம் இரட்சிப்புப் பற்றிய அவரது ஆவலையும் நமக்குக் காட்டியுள்ளார். நமதாண்டவர் நம்மை நோக்கி இவ்வாறு கூறுகின்றார்: 'ஓ இவ்வழியாய்ப் போகிற நீங்கள் எல்லாரும் சற்று நில்லுங்கள். உங்கள் அன்பிற்காக நான் அடைந்த துயரத்ததைப் போல் ஒரு துயரம் உண்டோ என்று பாருங்கள். நான் மேற்கொண்ட வறுமையையும் அடைந்த தாழ்வுகளையும் நினையுங்கள். உங்களுக்காக என்னுடைய வேதனை நிறைந்த பாடுகளிலே நான் பருகிய பிச்சுக் கலந்த காடியை எண்ணிப் பாருங்கள்'.

நமதாண்டவருக்கும் தேவ மாதாவுக்கும் மகிமையாக நம் வாயால் ஜெபமாலை சொல்வது மட்டும் போதாது. அதைச் சொல்லும்போது தேவ இரகசியங்களை மனதில் சிந்திக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்த, மேற்சொன்னவைகளும் இவை போன்ற பிறவும் போதுமானவை.