இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 21. பதினைந்து தேவ இரகசியங்கள்

தேவ இரகசியம் என்பது அறிவில் கண்டு கொள்வதற்கு கடினமான ஒரு திரு நிகழ்ச்சியாகும். நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் செயல்களெல்லாம் தெய்வீக திருநிகழ்ச்சிகள். ஏனென்றால் அவர் கடவுளாகவும் அதே சமயம் மனிதனாகவும் இருக்கின்றார். தேவ அன்னையின் செயல்கள் யாவும் புனிதமுள்ளவை. காரணம், கடவுளின் சிருஷ்டிகளிளெல்லாம் அதிக பரிசுத்தமும் உத்தமுமான சிருஷ்டி அவர்களே. 

நமதாண்டவர் ஆற்றிய செயல்களும் மாதாவின் செயல்களும் தக்க காரணத்தோடு தேவ இரகசியங்கள் என்று அழைக்கப்படலாம். ஏனென்றால், அவற்றில் ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. எல்லா வகையான நிறைவும் ஆழமான உன்னத உண்மைகளும் அவற்றில் உள்ளன. இத்தேவ இரகசியங்களை மதிக்கிற தாழ்மையுள்ள எளிய ஆன்மாக்களுக்கு பரிசுத்த ஆவி இவ்வுண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

சேசுவினுடையவும் மரியாயுடையவும் செயல்களை அதிசய மலர்கள் என்றும் அழைக்கலாம். ஆனால் அவற்றை ஊன்றி ஆராய்கிறவர்களுக்கும், உண்மையுடன் கருத்தாய் அவற்றை சிந்தித்து அம்மலர்களின் நறுமணத்தை நுகர்கிறவர்களுக்கும் மட்டுமே அவற்றின் அழகும் வாசனையும் எட்டும்.

நமதாண்டவரின் வாழ்க்கையையும் மாதாவின் வாழ்க்கையையும் பதினைந்து தேவ இரகசியங்களாக வகுத்துள்ளார் அர்ச். சாமிநாதர். இந்தப் பதினைந்து தேவ இரகசியங்களும் அவர்களுடைய புண்ணியங்களையும் மிக முக்கிய செயல்களையும் உணர்த்தி நிற்கின்றன. இவை பதினைந்தும் பதினைந்து நிலைக்காட்சிகள் அல்லது சித்திரங்கள் எனலாம். அவற்றின் ஒவ்வொரு அம்சமும் நம் வாழ்வைத் தூண்டி எழுப்பி நம் வாழ்க்கையின் சட்டமாக அமைய வேண்டும். இத்தேவ இரகசியங்கள், இவ்வுலக வாழ்வு முழுவதிலும் நம்மை வழிநடத்தும் எரிகிற தீபங்களாயிருக்கின்றன.

சேசுவையும் மரியாயையும் நாம் அறிந்து கொள்ள உதவும் ஒளிக் கண்ணாடிகள் இப்பதினைந்து தேவ இரகசியங்கள், நம்மையே நாம் அறியவும் இவை உதவுகின்றன. சேசு மாதா இருவர் மீதும் அன்புத் தீயை நம் இருதயங்களில் மூட்டவும் அவை உதவி செய்கின்றன.

இத்தேவ இரகசியங்கள் பதினைந்தும் பற்றி எரியும் பதினைந்து தெய்வீகச் சூளைகள். இச்சூளைகளின் சுவாலைகள் நம்மை முழுவதும் எரித்து எடுத்துக் கொள்ளும் தன்மையுடையன.

இவ்வரிய ஜெப முறையை தேவ அன்னை அர்ச். சாமிநாதருக்கு சொல்லிக் கொடுத்தார்கள். கிறிஸ்தவர்களின் பக்தியை மீண்டும் எழுப்பவும் அவர்களின் இருதயங்களில் நமதாண்டவர் மீது அன்பைப் புதுப்பிக்கவும் ஜெபமாலையை எல்லா இடங்களிலும் போதிக்கும்படி கட்டளையும் கொடுத்தார்கள்.

நம் தேவ தாய் முத் ஆலன் ரோச்சுக்கும் இதைக் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு காட்சியில் அவருக்குத் தோன்றி. 'நூற்றைம்பது தடவை தூதனின் மங்களத்தை மக்கள் சொன்னால் அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. எனக்கு உகந்த வாழ்த்தாக அது உள்ளது. ஆயினும் இதை விடச் சிறந்தது என்னவென்றால், அம்மங்கள வார்த்தை சொல்லும் போதே சேசுக் கிறிஸ்துவின் வாழ்வு, பாடுகள், மரணம் இவற்றை தியானிப்பதாகும். ஏனெனில் இத்தியானமே இச்செபத்தின் உயிராக இருக்கின்றது' என்று கூறினார்கள்.

உண்மையில் பார்த்தால் நம் மீட்பரின் தேவ இரகசியங்களைத் தியானிக்காமல் ஜெபமாலையைச் சொன்னால், அது ஏறக்குறைய ஆன்மா அற்ற உடலைப் போல்தான் இருக்கும். நல்ல வஸ்து உருவமற்றிருப்பது போல, தியானித்தல் தான் உருவம், ஜெபமாலையை மற்ற பக்தி முயற்சிகளிலிருந்து தனியே பிரித்துக் காட்டுகிறது இதுதான்.

ஜெபமாலையின் முதல் பாகத்தில் ஐந்து தேவ இரகசியங்கள் உள்ளன. (1) கபிரியேல் சம்மனசு தேவ மாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னது. (2) தேவ மாதா தன் உறவினரான அர்ச். எலிசபெத்தைச் சென்று சந்தித்தது. (3) சேசுநாதர் சுவாமி பிறந்தது. (4) சேசு நாதர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. (5) 12 வயதில் காணாமல் போன சேசுவை தேவாலயத்தில் சாஸ்திரிகள் நடுவில் கண்டது.

இவைகள் சந்தோச தேவ இரகசியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றால் பிரபஞ்சம் முழுவதற்கும் வந்த மகிழ்ச்சியினிமித்தம் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. தேவசுதன் மனித உரு எடுத்த அந்நேரமே தேவ தாயும் சம்மமனசுக்களும் பொங்கி வழியும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். சேசுவும் மரியாயும் தங்களைச் சந்திக்க வந்த போது அர்ச். எலிசபெத்தும் ஸ்நாபக அருளப்பரும் மகிழ்ந்து அக்களித்தனர். நம் மீட்பர் பிறந்ததனால் பரலோகமும் பூவுலகமும் குதூகலித்தன. அர்ச். சீமோன் திருக்குழந்தையை தன் கரத்தில் ஏந்திய போது மிகப் பெரும் ஆறுதலடைந்து மகிழ்வால் நிறைந்தார். வேத சாஸ்திரிகள் சேசு கூறிய பதில்களைக் கண்டு வியப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கிப் போனார்கள். மேலும், மூன்று நாளாய்க் காணாமல் போன சேசுவை மாதாவும் சூசையும் கண்ட போது அவர் அடைந்த மகிழ்ச்சியை யார் விவரிக்கக்கூடும்?

ஜெபமாலையின் இரண்டாம் பாகத்தில் ஐந்து தேவ இரகசியங்கள் உள்ளன. இவை துக்க தேவ இரகசியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் அவை நமதாண்டவர் துயரத்தால் அழுத்தப்பட்டு காயங்களால் மூடப்பட்டு வேதனை துன்பங்களாலும் நிந்தை அவமானங்களாலும் நொந்ததைக் காட்டுகின்றன. இவை (1) சேசு ஒலிவ தோட்டத்தில் ஜெபித்ததும் மரண அவஸ்தைப்பட்டதும் (2) சேசு கசையால் அடிக்கப்பட்டது (3) சேசு முள் முடி சூட்டப்பட்டது (4) சேசு சிலுவை சுமந்தது (5) சேசு கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டதும் அவருடைய மரணமும்.

ஜெபமாலையின் மூன்றாம் பாகம் ஐந்து வேறு தேவ இரகசியங்களைக் கொண்டுள்ளது. இவை மகிமைத் தேவ இரகசியங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், அவற்றிலே நாம் சேசு, மாதா இவர்களின் வெற்றியையும் மகிமையையும் தியானிக்கிறோம். (1) சேசுவின் உயிர்ப்பு (2) சேசு பரலோகம் சென்றது (3) அப்போஸ்தலர்கள் மீது பரிசுத்த ஆவி இறங்கியது (4) தேவ அன்னையின் மகிமையான மோட்சாரோபணம் (5) தேவ அன்னை பரலோகத்தில் முடி சூட்டப்பட்டது.

தேவ இரகசிய ரோஜா செடியின் பதினைந்து பூக்கள் இவை. பற்றுதலுள்ள ஆன்மாக்கள் தேனீக்களைப் போல் இம்மலர்களை நாடிச் சென்று தெய்வீக இனிமையைப் பெறுகின்றனர். ஆழந்த பக்தியெனும் தேனைச் சேகரிக்கின்றனர்.