இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 20. அருள் நிறை மந்திர விளக்கம்

பரிதாபத்துக்குரிய பாவ நிலையில் நீ இருக்கின்றாயா? அப்படியானால் மாதாவை அழைத்து 'வாழ்க' என்று சொல். இதன் பொருள் 'மரியாயே. பாவ மாசு எதுவுமே இல்லாத உம்மை மிக ஆழ்ந்த மரியாதையுடன் வணங்குகிறேன் என்பதாகும். நீ இவ்வாறு அழைத்தால், உன்னை உன் பாவக் கேட்டிலிருந்து மாதா விடுவிப்பார்கள்.

அறியாமை என்னும் இருளிலும் தப்பறையிலும் நீ திசையறியாமல் அலைகின்றாயா? மாதாவிடம் சென்று மரியாயே வாழ்க" என்று சொல். இதன் பொருள் 'நீதிக்கதிரோனின் ஒளியில் மூழ்கியிருக்கும் மரியாயே நீர் வாழ்க!' என்பதே. அன்னை தன் ஒளியின் ஒரு பாகத்தை உன்மேல் வீசச் செய்வார்கள்,

பரலோக பாதையை விட்டு நீ விலகிச் சென்றுள்ளாயா? அப்படியானால் மரியாயைக் கூப்பிடு. ஏனெனில் 'மரியா' என்னும் பெயருக்கு இதுவே பொருள், 'சமுத்திர நட்சத்திரம் வாழ்வெனும் கடல் யாத்திரையில் நம் ஆன்மா என்னும் மரக்கலங்களை வழிநடத்தும் வடதிசை விண்மீன். அன்னை உன்னை நித்திய வாழ்வென்னும் துறைக்கு வழி நடத்துவார்கள்.

துயரத்தில் நீ இருக்கின்றாயா? மரியாயை நோக்கிப் பார். ஏனென்றால் அவர்களின் பெயருக்கு இன்னொரு பொருளும் உண்டு. 'கசந்த கடல்' இவ்வுலகில் மரியா என்னும் கடல் கொடிய வேதனைகளால் நிரப்பப்பட்டது. ஆனால் இப்போது மோட்சத்தில் மிகத் தூய்மையான மகிழ்ச்சிக் கடலாக மாற்றப்பட்டுள்ளது. அன்னை உன் துயரத்தை மகிழ்வாகவும் உன் வேதனைகளை ஆறுதலாகவும் மாற்றுவார்கள்.

நீ தேவ இஷ்டப்பிரசாத நிலையை இழந்து விட்டாயா? சர்வேசுரன் மரியாயை நிரப்பியுள்ள எண்ணற்ற அருள் வரங்களை சிந்தித்து வாழ்த்தி, 'அருள் நிறைந்தவளே, பரிசுத்த ஆவியின் எல்லா வரங்களாலும் நிறைந்துள்ளவளே' என்று சொல். அன்னை உனக்கும் அவற்றில் ஒரு பாகம் தருவார்கள்.

கடவுளின் பாதுகாப்பை இழந்ததால் நீ தனியாக விடப்பட்டுள்ளாயா? மாதாவை நோக்கி ஜெபித்து, 'கர்த்தர் உம்முடனே' என்று சொல். அதாவது, 'கடவுள் உம்முடன் கொண்டுள்ள ஐக்கியம், மற்ற புனிதர், நீதிமான்களுடன் அவர் கொண்டிருக்கும் ஐக்கியத்தைவிட அதிக அந்நியோந்நியமும் உயர்வும் கொண்டதாகும். ஏனெனில் தேவ மாதாவே தேவனுடன் நீர் ஒன்றாயிருக்கிறீர். அவர் உமது குமாரன். அவருடைய சரீரம் உம்முடைய சரீரம். சர்வேசுரனைப் போல அப்படியே அவர் சாயலில் நீர் இருப்பதாலும், உங்களிருவரின் பரஸ்பர அன்பினாலும் ஆண்டவருடன் ஒன்றாயிருக்கிறீர். ஏனென்றால் அவருடைய தாயாக இருக்கிறீர் என்று சொல். மேலும் தெய்வீக மூன்று ஆட்களும் உம்முடன் இருக்கின்றார்கள். ஏனென்றால் நீர் மகா பரிசுத்த திரித்துவத்தின் ஆலயமாக இருக்கிறீர் என்றும் கூறு. அன்னை உன்னை சர்வ வல்லப கடவுளின் பாதுகாப்பிலும் கரிசனையிலும் மீண்டும் சேர்ப்பார்கள்.

நீ புறக்கணிக்கப்பட்டவனும் கடவுளால் சபிக்கப் பட்டவனு மாயிருக்கிறாயா? அப்படியானால் 'பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே - எல்லா இன மக்களிலும் நீர் உமது தூய்மையாலும், அருட்செழிப்பினாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர். கடவுளின் சாபங்களை ஆசீர்வாதங்களாக எங்களுக்கு மாற்றித் தந்திருக்கிறீர் என்று சொல். அன்னை உன்னை ஆசீர்வதிப்பார்கள்.

வரப்பிரசாதம் என்னும் அப்பத்திற்கும் வாழ்வென்னும் அப்பத்திற்கும் பசியாயிருக்கிறாயா? பரலோகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வின் அப்பத்தைப் பயின்ற மரியாயை அணுகிச் சென்று, 'உமது திருவயிற்றின் கனி ஆசீர்வதிக்கப்படுவதாக என்று சொல். 'உமது கன்னிமைக்கு ஒரு சிறு பங்கமுமின்றி அவரை உம் உதரத்தில் கொண்டீர். யாதொரு துன்பமுமின்றி அவரை சுமந்தீர்; யாதொரு வேதனையுமின்றி அவரைப் பெற்றெடுத்தீர். நாங்கள் பாவத்தளையால் கட்டப்பட்டிருந்த போது, துன்பப்பட்ட இவ்வுலகை மீட்ட சேசு ஆசீர்வதிக்கப்படுவாராக! அவரே உலகத்தை அதன் பிணியிலிருந்து குணப்படுத்தினார். இறந்தவரை உயிருடன் எழுப்பினார். நாடு துரத்தப்பட்டோரை வீடு கொண்டு சேர்த்தார், பாவிகளை வரப்பிரசாத வாழ்வுக்கு மீண்டும் கொணர்ந்தார், தண்டனைத் தீர்ப்பிலிருந்து மாந்தரை இரட்சித்தார்' என்று கூறு. இவ்வாழ்வில் உனதான்மா நிச்சயமாய் வரப்பிரசாத உணவால் நிரப்பப்படும்: மறு வாழ்வில் நித்திய மகிமையால் நிறைவிக்கப்படும். - ஆமென்.

பின்னர், உன் ஜெபத்தின் முடிவில், தாயாகிய திருச்சடையுடன் இவ்வாறு மன்றாடு:

அர்ச்சிஷ்ட மரியாயே 

ஆன்மாவிலும் சரீரத்திலும் பரிசுத்தமானவளே! சர்வேசுரனுடைய ஊழியத்தில், ஒப்புமை இல்லா உம் நித்திய பற்றுதலால் பரிசுத்தமான மரியாயே! சர்வேசுரனின் தாய் எனும் மாபெரும் உயர்வால் பரிசுத்தமான மரியாயே! இப்பெரும் தகைமைக்கு ஏற்ற ஒரு பண்பாக உயர்ந்த புனிதத்தை தேவன் உமக்களித்தார்.

சர்வேசுரனுடைய மாதாவே!

எங்களுக்கும் தாய் நீரே எமக்காகப் பரிந்து பேசுபவள், எங்கள் மத்யஸ்தி! கடவுளின் வரப்பிரசாதங்களை காப்பவள் உமது விருப்பப்படி அவற்றை விநியோகிப்பவள். எம் பாவ மன்னிப்பை, விரைவாக எமக்கு அடைந்தருளும்படி உம்மிடம் மன்றாடுகிறோம். ஒப்பற்ற மகத்துவ தேவனுடன் மீண்டும் நாங்கள் சமாதானமடைய எங்களுக்கு அருள்வீராக!

பாவிகளாயிருக்கிற எங்களுக்காக 

தேவையிலுள்ள யாவருக்கும் எப்பொழுதும் இரக்கம் காட்டும் அன்னையே! பாவிகளை ஒரு போதும் நீர் புறக்கணிப்பதில்லை. போ என்று அவர்களைத் தள்ளுவதுமில்லை பாவிகளாலன்றோ மீட்பரின் தாய் ஆனீர்! எங்களுக்காக மன்றாடும்.

இப்பொழுதும் 

நிலையற்ற துயரம் நிறைந்த குறுகிய இவ்வாழ்வில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். இப்பொழுது ஏனெனில் தற்பொழுது தவிர எங்களுக்கு வேறெதுவும் உறுதியில்லை. வலிய இரக்கமற்ற எதிரிகளால் இரவிலும் பகலிலும் தாக்கப்படுகிறோம் இப்பொழுது எங்களுக்காக மன்றாடும். எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும் ஆபத்து நிறைந்த பயங்கர நேரம் அது. பலம் வற்றிப் போகும் ஊக்கம் தளரும் அச்சத்தாலும் வேதனையாலும் ஆன்மாவும் சரீரமும் தளர்ந்து போகும்

எம் மரண வேளையில் எங்களுக்காக மன்றாடும். 

கேட்டில் விழத்தாட்ட பலத்தோடும் திறத்தோடும் பசாசு முயலும் அவ்வேளையில் எங்களுக்காக மன்றாடும். மோட்சம் அல்லது நரகம் என்ற நிச்சயத்தைத் தருவதும் நித்தியமாய் மாறாததுமான அந்நேரத்தில், இரக்கத்தின் இனிய தாயே உமது எளிய பிள்ளைகளுக்கு உதவிட வாரும். பாவிகளுக்கு அடைக்கலமே! பரிந்து பேசும் தாயே! மரணம் வரும் நேரத்தில் எங்களைப் பாதுகாரும். அச்சமூட்டும் தங்கள் பிரசன்னத்தால் எங்களை பயத்தால் நிரப்பி, எங்கள் மீது பழி கூறும் கொடிய பகைவரான பசாசுக்களை தூரமாய் விரட்டி விடும். தாயே தயவுடனே மரண நிழலென்னும் பள்ளத்தாக்கில், நாங்கள் செல்லும் பாதையில், ஒளி வீசும்! உம் திருக்குமாரனின் நீதி ஆசனத்திற்கு எங்களை வழி நடத்தும்.

அங்கே எங்களைக் கை விட்டு விடாதீர் அம்மா! எங்களை மன்னிக்கும்படி உமது திருமகனை மன்றாடி அர்ச்சிஷ்டவரின் வரிசையில் நித்திய மகிமையில் எம்மைச் சேர்த்தருளும். ஆமென்'. அப்படியே ஆகட்டும்.

கர்த்தர் கற்பித்த ஜெபமும் மங்கள வார்த்தை ஜெபமும் பரலோகத்திலிருந்து வந்தவை. இவ்விரண்டாலும் அக்கப் பெற்ற ஜெபமாலையின் அழகினை வியந்து பாராட்டாமல் யாரும் இருக்க முடியாது. இவைகளை விட வேறு எந்த ஜெபம் தேவனுக்கு அதிக விருப்பமுடையதாகும்? இவற்றை விட தேவ அன்னைக்குப் பிரியமானது வேறு என்ன இருக்க முடியும்? இந்த இரு ஜெபங்களையும் விட அதிக எளிதானது வேறு உண்டா ? இவற்றைவிட அதிக விலையுள்ளதும் அதிகம் உதவுவதும் எது? மிகப் பரிசுத்தத் திரித்துவத்திற்கும் நம் மீட்பரான சேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய திருத்தாய்க்கும் மகிமையாக இந்த இரு ஜெபங்களையும் நாம் நம் இருதயத்திலும், நாவிலும் எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பத்து மணி முடிவிலும் திரித்துவ தோத்திர ஜெபத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பிதாவுக்கும், சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.