நாள் 2, தியானம் 1, மூன்று வகைப் பாவம் - இரண்டாம் பாகம்

சர்வேசுரன் அரூபிகளான சம்மனசுக்களைச் சிருஷ்டித்த பின்பு, சரீரமுள்ள மானிட ஜென்மத்தை சிருஷ்டிக்கச் சித்தமானார். ஆதியில் ஆதாம் ஏவை என்ற இருவரைத் தமது சாயலாக உண்டாக்கி, பூலோக பரகதியென்ற சிறந்த சிங்காரத் தோட்டத்தில் இவர்களை வைத்தார். இவ்விருவரையும் தேவ இஷ்டப்பிரசாதம் வரத்தால் தமது பிள்ளைகளாக்கி அவர்களுக்குச் சுபாவ நன்மை களும், சுபாவத்துக்கு மேலான நன்மைகளும் ஆசையளவுக்கு மேலாய் தாராளமாய்க் கொடுத்து மேன்மைப்படுத்தினார். இவர்களுக்குத் தெளிந்த அறிவும் சிறந்த மனதும் இருந்தது. சரீரத்தின் ஐம்புலன்கள் யாவும் புத்தி மனதுக்கு அமைந்ததும், புத்தி மனது தேவசித்தத்துக்கு கீழ்ப்பட்டதுமாய் இருந்தது. அவர் களுடைய ஆசை, பற்றுதல், பிரியம் எல்லாம் ஒழுங்குள்ளதா யிருந்தன. மனதில் பூரண சமாதானம் நிலையாயிருந்தது. இவர்கள் உலகிலுள்ள சகல சிருஷ்டிகளுக்கும் எஜமான்களாய் மேன்மை பெற்றிருந்தார்கள்.

சர்வேசுரன் இவர்களுக்குத் தரிசனமாவார். அவரோடு பிள்ளைகள் தங்கள் தகப்பனுடன் கலந்து பேசுவது போல், இவர்கள் பேச அவரும் முகங்கொடுத்து அன்பாய்ப் பேசுவார். சர்வேசுரன் தாமே இவர்களுக்கு ஆதிகர்த்தரான ஆண்டவரென்றும், அவருக்குப் பணிந்து நடந்தால் மாத்திரம் இந்தப் பாக்கிய அந்தஸ்தில் நிலை நிற்பார்களென்றும் இவ்விருவருக்கும் காண்பிக்க, அந்தத் தோட்டத்தில் வளர்ந்திருந்த பல மரங்களில் ஒன்றைக் காட்டி அதன் கனியைச் சாப்பிட வேண்டாமென்று கற்பித்து, அப்படிச் சொல்லை மீறிச் சாப்பிட்டால், சாகவே சாவீர்கள் என்று தெளிவாய்ச் சொல்லியிருந்தார்.

இப்படியிருக்கும்போது, மோட்சத்தை விட்டு துரத்தப்பட்ட பசாசு பொறாமை கொண்டு தான் இழந்த மோட்ச பாக்கியத்தை நீச மனிதர் அனுபவியாதபடி தடுக்க வேண்டுமென்று, பாம்பின் வேஷம் எடுத்து வந்து, ஆதி மனுஷியை நோக்கி: "சிங்கார வனத் லுள்ள எல்லா மரத்தின் கனிகளைப் புசிக்க வேண்டாமென்று கடவுள் ஏன் உங்களுக்குக் கற்பித்தார்?” என்று கேட்டது. அதற்கு ஏவை : "சிங்கார வனத்திலுள்ள மரங்களின் கனியைப் புசித்தே வருகிறோம். ஆனால் வனத்தின் நடுவேயிருக்கும் மரத்தின் கனியை நாங்கள் புசிக்கவும் கூடாது தொடவும் கூடாது, சீண்டினால் செத்துப் போவோமென்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார்'' என்று பதில் உரைத்தாள். சர்ப்பமோ ஸ்திரீயைப் பார்த்து: "நீங்கள் நிச்சயம் சாகவே சாக மாட்டீர்கள், நீங்கள் என்றைக்கு அக்கனி யைப் புசிப்பீர்களோ அன்று உங்கள் கண்கள் திறக்கப்பட்டு, நன்மை தின்மை அறிந்து தேவர்களைப் போலிருப்பீர்களென்று சர்வேசுர னுக்குத் தெரியும்" (ஆதியாகமம் 3 - ம் அதி.) என்று பாம்பு உருவ மாய் வந்த வஞ்சகப் பசாசு தந்திரமாய்ச் சொல்லிற்று. அதனால் மதிமயங்கிய ஏவாள் விலக்கப்பட்ட கனியின் மேல் ஆசை கொண்டு அதைப் பறித்துப் புசித்தாள். தான் புசித்ததும் போதாமல் தன் புருஷன் ஆதாமுக்கும் கொண்டுபோய்க் கொடுத்தாள். ஆதி மனிதனும் அதை வாங்கிப் புசித்தான். இருவரும் தேவ கட்டளையை மீறிப் பாவம் செய்தார்கள்; தேவ இஷ்டப்பிரசாதத்தையிழந்து பாவிகளானார்கள்.

சர்வேசுரன் இருவரையும், அவர்களோடு மனுஷ ஜென்மத் தையும் சபித்தார். அவர்களுக்குக் கொடுத்திருந்த சுபாவத்துக்கு மேலான தேவ வரங்களைப் பறித்துக்கொண்டு, தோட்டத்தை விட்டு வெளியே துரத்தி அவர்கள் திரும்பி உள்ளே வராதபடி உருவின வாளேந்திய தேவ தூதனைக் காவலாக தோட்டத்தின் வாசலிலே நிறுத்தினார். பாவம் இவ்விதமாய் உலகத்தில் ஆதி முதலில் வந்தது. பாவத்தோடு அதன் துணைகளும் பரிவாரமுமாகிற சாவும் நோவும், துன்பமும், துயரமும், கவலையும், கண்ணீரும், சண்டையும் யுத்தமும், அநியாயமும் அக்கிரமமும், பெரும் வெள்ளம் போல் உலகத்தில் பரவின. மோட்சம் போலிருந்த இந்தப் பூமி கண்ணீர்ப் பள்ளத்தாக்காய் மாறினது. மனிதன் சுபாவமே கேடு அடைந்தது. ஐம்புலன்கள் புத்தியை விரோதித்து, நன்மை செய்ய வெறுப்பும், தீமை செய்ய ஆசையும் மேலிட்டு, நித்தம் யுத்த போராட்டமாய் நிற்கின்றது. மானிட ஜென்மம் மாசுபட்டுக் கெட்டுப் போனது. நாம் இதைக் கண்ணால் பார்த்து பட்டறிந்து வருகிறோம். பிள்ளை பிறக்கும்போதே அழுது கொண்டு பிறக்கின்றது.

சகோதரரே! இத்தனை நிர்ப்பாக்கிய துன்பத்துக்கெல்லாம் காரணம் யாது? ஒரே ஒரு பாவம். அப்படியானால் பாவம் என்பதில் எவ்வளவோ தோஷமும் விஷமும் இருக்க வேண்டும். ஆதியில் பாவம் உலகத்தில் நிகழ்ந்த பொழுது, அதைச் சார்ந்திருந்த பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்கலாம். அதே விஷயங்களை நீங்கள் செய்யும் பாவங்களில் இன்னமும் காண்பீர்கள். பாவம் வரும் வழி இன்னதென்று அறிந்தால் அது வராதபடி வழியை அடைத்துத் தடுக்கலாம்.

ஆதித் தாயாகிய ஏவாள் இங்கும் அங்கும் போய் எல்லாம் பார்க்க வேண்டுமென்கிற விநோதப் பிரியத்தால் தன்னந்தனியே புறப் பட்டாள். பாவத்துக்கு இதுதான் பிரதான வழி. வீட்டில் தங்கி யிருந்து தன் வேலையைக் கவனித்து செய்வது அநேகம் பேர்களுக்கு மகா வருத்தம். வெளியே போய் சுற்றித் திரிந்து நடக்கிறதெல்லாம் பார்க்க வேண்டும். எல்லாரையும் பார்த்து எல்லாருக்கும் தன்னைக் காட்ட வேண்டும். எங்கே மக்கள் கூட்டம், எங்கே சண்டை இரைச்சல், எங்கே கூத்து வேடிக்கை, எங்கே நாடகம் நடனம் இருக்கிறதென்று விசாரித்து அங்கே போவார்கள். இந்தக் கூட்டங்களிலெல்லாம் பசாசு தன்னை மறைத்து வேஷமெடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு இது நன்றாய்த் தெரியும். முன்னொரு தடவை அங்கே போனீர்கள். விலக்கின் பழத்தை சாப்பிட்டீர்கள். சர்வேசுரன் குரல் சத்தம் உங்கள் மனதில் ஒலித்தது. இதையெல்லாம் மறந்து போய் திரும்பவும் அங்கே போகிறீர்கள். ஓ! காலம் எவ்வளவு கெட்டுப் போயிருக்கிறது. பெண்களும் சிறுவரும், தங்களுக்கு இயற்கையாய் இருக்க வேண்டிய நாணத்தை மறந்து, ஊர் சுற்றிப் பார்க்கப் போய், பார்க்கத் தகாததைப் பார்த்தும், கேட்கத் தகுதியற்றதைக் கேட்டும், வீட்டுக்குத் திரும்பி வருகி றார்கள். மகா ஞானி சாலமோன் சொல்லும் வேத வாக்கியத்தைக் கேளுங்கள். கண் பார்த்து திருப்தியடையாது, காது கேட்டபின் போதுமென்காது (சங்க. 1:8). ஆதலால் பார்த்துப் பார்த்து திருப்தி அடையலாம் என்று எண்ணினால் மோசம் போவீர்கள். ஐம்புலன் களின் நாட்டத்தையும் வினோதப் பிரியத்தையும் அடக்குவது பாவம் வராதபடி தடுக்கும் முதல் வழியாகும்.

அன்றியும் ஆதி மனுஷன் எவ்வளவு இழிவாய் பாவத்தை செய்தான் என்று யோசித்தால், பாவம் வரும் வேறொரு வழி இன்னதென்று அறிவீர்கள். சர்வேசுரன் விலக்கின கனியைச் சாப்பிடுவது தகாதென்று அவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. தெரிந்தும் தன் மனைவி சாப்பிடச் சொன்னதால், அவளுக்குப் பயந்தோ, அவள் பிரியத்தைப் பற்றியோ, வாங்கிச் சாப்பிட்டான். மறுத்து கண்டித்துப் பேச அவனுக்கு நாவெழவில்லை.

எத்தனையோ ஆண்பிள்ளைகள் வெளியில் வீரசூரர் போல தாண்டிக் குதித்துப் பேசுவார்கள். வீட்டிலே ஓர் பெண்பிள்ளை சொல்லும் நய வஞ்சக வார்த்தையைக் கேட்டு, அவள் பார்வையால் மயங்கி, வலையிற் சிக்கி, மனத்துணிவில்லா கோழைகளாய், தங்கள் சுயபுத்தி மதியைக் காலில் மிதித்து, செய்யத் தகாத காரியத்தைச் செய்து, நஷ்டப்பட்டு நாணமிழந்து, நாலுபேர் சிரிக்க, பழிச் சொல்லுக்கு உட்பட்டு, சீரழிந்து ஊரெல்லாம் இவன்தான் அவன் என்று சுட்டிக்காட்ட நடந்து வருகிறார்கள். சில பட்டணங் களிலும், ஊர்களிலும், கிறிஸ்தவர்களின் சபையில் ஆவலாதியும், அயோக்கியமுமுள்ள செய்திகள் இருப்பதற்குக் காரணமென்ன? ஏன் ஒரு காலத்தில் நன்றாய்ச் செல்வமாயிருந்த சில குடும்பங்கள் இப்போது பாழாய்க் கிடக்கின்றன? ஏன் சில வீடுகளில் சண்டையும் மனஸ்தாபமும் ஓயாமல் குடும்பப் பூர்வமாய் வளர்ந்து வருகின்றன? ஏன் என்று வீட்டிலுள்ள பெரிய மனுஷனைக் கேள். வீட்டிலிருக்கும் இவனும் அவனும் மிகக் கெட்டவர்கள். ஒரு பெண்பிள்ளைக்கு அடிமைப்பட்டு அவளுக்குத் தொண்டு செய்கிறார்கள். அவள் சொல்லைக் கேட்டு அக்கிரமம் செய்கிறார்கள். இதனாலே இவ்வளவு துன்பமுண்டாகின்றதென்று சொல்லுவான்.

சகோதரர்களே! என்றும், எங்கும் தன் புத்தி சுயாதீனமுள்ள மனிதனைப் போல் நடக்க வேண்டுமேயன்றி, அடிமையைப் போல் பெண்ணின் தந்திர வார்த்தையை நம்பி , மதிகேடனாய் நடக்கக் கூடாது. சர்வேசுரனுடைய கட்டளைப்படி உங்கள் மனச்சான்றின் சொல்லைக் கேட்டு ஒழுக்கமாய் நடப்பது, அது தான் ஆணுக்கு அழகு. அதுதான் மனுஷனுக்கு உரிய இலட்சணம்.

ஆதி மனுஷர் செய்த பாவத்தில் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு விசேஷமிருக்கிறது. இவர்கள் பாவத்தை அறிந்த சர்வேசுரன் இருவரையும் கூப்பிட்டு, தமது சமுக முன் நிறுத்தி, விசாரணை செய்து ஏன் இப்படி நமது கட்டளையை மீறினீர்களென்று கேட்கும் போது, இருவரும் ஆண்டவர் பாதத்தில் விழுந்து : ''சுவாமி! நாங்கள் புத்தியில்லாமல் செய்தோம். எங்களைச் சிருஷ்டித்த தகப்பனே! எங்களைப் பொறுத்துக் கொள்ளும். முதல் தடவை இது. இனிமேல் எச்சரிக்கையாய் நடப்போம்" என்று சொல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டி, ஆதாம், ஏவாள் தன்னை ஏமாற்றினா ளென்றும், ஏவாள், பசாசு தன்னை ஏமாற்றியதென்றும், இப்படியாய் வீண் போக்குத் தேடி , செய்த குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

கிறீஸ்தவர்களும் இப்படியே செய்து வருகிறார்கள். தன் மேல் தான் செய்த குற்றத்தைச் சாட்டி, நான் இந்தப் பாவத்தைச் செய்தேன் என்று சொல்பவர்கள் வெகு சொற்பப் பேர். பிறர் மேல் பழியைச் சுமத்துபவர்கள் அதிகம் பேர். நான் ஒன்றும் அறியேன்; அவன் தான் செய்தவன்; அவள்தான் கொடுத்தவள் என்று எல்லார் வாயிலும் சகஜமாய் வரும். இது வெகு அநியாயமான செய்கை. தப்பிதம் செய்த பின் அதை நல்ல மனதோடு ஏற்று, நான்தான் இதைச் செய்தவன் என்று சொல்வது கெளரவம் நிறைந்த மனதின் குணம். பெரியோர் தன்மை. மனிதன் எவ்வளவு பலமற்றவனென்று சர்வேசுரன் அறிந்திருக்கிறார். பாவத்தை நீ செய்த பின் அவர் பாதத் தில் விழுந்து உன் தப்பிதத்தை ஏற்றுக் கொண்டு தாழ்மையாய்ப் பொறுத்தல் கேட்கும்போது அவர் தப்பாமல் பொறுத்தல் உனக்குக் கொடுப்பார். வானத்திலிருந்து விழும் மழை தாழ்ந்த நிலத்தில் ஓடி விழுமேயன்றி உயர்ந்து எழும்பிய பூமியில் ஏறுமா?