நாள் 2, தியானம் 1, மூன்று வகைப் பாவம் - மூன்றாம் பாகம்

ஆதிமனிதன் செய்த பாவத்தையும், பாவத்தோடு கூடிய விஷயங்களையும், பாவத்துக்காக அவனுக்கும் மனுஷ சந்ததியார் எல்லாருக்கும் வந்த துன்ப நிர்ப்பந்தங்களையும் இரண்டாம் பாகத்தில் யோசித்தீர்கள். பாவம் எவ்வளவு தீமை உள்ளதென்று உங்களுக்குக் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். இன்னும் பாவத்தின் தோஷத்தை அறியும்படி பின்வரும் காரியத்தைக் கேளுங்கள்.

ஒரு மனிதன் பாவமின்றி பல வருஷம் நடந்தவன், ஒருநாள் நிர்ப்பாக்கியமாய் ஒரு சாவான பாவத்தைச் செய்தான். செய்தபின் மன்னிப்படையுமுன் செத்தான். இப்போது நரகத்தில் நித்திய தண்டனை அனுபவிக்கிறான். இது எவ்வளவு பயங்கர முள்ள காரியம்! பாவத்தைச் செய்யுமுன் அவன் தேவ இஷ்டப் பிரசாதம் உள்ளவனாய், சர்வேசுரனுடைய பிள்ளையாய், மோட்ச உரிமை உள்ளவனாயிருந்தான். பேறுபலன்கள் நிறைந்தவனாயிருந் தான். ஒரே ஒரு தடவை மாத்திரம் சாவான பாவத்தைச் செய்தான். மனஸ்தாபப்படுமுன் மரணமும் வந்து விட்டது. தேவநீதியின் கோபம் இடி போல் அவன் தலைமேல் விழுந்தது. அந்த ஆத்துமம் இப்போது நரகத்திலிருக்கிறது. நித்திய காலம் நரகத்தில் தண்டனை அநுபவிக்கும். பாவம் செய்வதற்கு ஒரு நிமிஷத்திற்கு முன் அவன் செத்திருந்தால் அவனுடைய ஆத்துமம் சர்வேசுரனுடைய சமுகத் தில் சம்மனசுகளுடன் ஒன்றாய் நித்திய காலம் பேரின்ப பாக்கியம் அநுபவித்திருக்கும். மறுநிமிஷமட்டும் உயிரோடிருந்து பாவத்தைச் செய்து மனஸ்தாபமின்றி செத்தான். செத்தவன் நரகத்தில் விழுந்தான்.

ஏன்? ஏனென்றால் அந்த ஒரே நிமிஷத்தில் அவன் சாவான பாவத்தில் விழுந்தான். விழுந்த உடனே பசாசுக்கடிமையானான். பசாசு தனக்கு அடிமையானவனை நரகத்துக்கு இழுத்துக் கொண்டு போக சர்வேசுரன் விட்டுவிட்டார். ஆ! சர்வேசுரனுடைய நீதியின் அகோரத்தை நினைக்கும் போது யார் பயந்து நடுங்க மாட்டான்?

கிறீஸ்தவனே! நீ முதல் சாவான பாவம் செய்து இப்போது எத்தனை வருஷமாகிறது? அந்த முதல் பாவத்தை நீ செய்த கணத் திலே உன்னை சர்வேசுரன் ஏன் நரகத்திலே தள்ளவில்லை? பல நூறு பேருக்குக் காட்டாத சிநேகமும் இரக்கமும் உனக்கு மாத்திரம் காட்டும்படி நீ சர்வேசுரனுக்கு என்ன செய்தாய்? அந்த முதற் பாவத்தோடாவது போதுமென்று நின்றாயா? இரண்டாம் முறை, மூன்றாம் முறை பாவத்தை நீ செய்த பிற்பாடாவது உனக்குப் புத்தி வந்ததா? ஆ! பாதகா! உன் சிறு வயதிலும், வாலிப வயதிலும், முதிர்ந்த வயதிலும், நீ செய்த பாவங்கள் எத்தனை என்று கணக்கிட உன்னால் கூடுமா? நீ எத்தனை முறை சாவான பாவத்தைச் செய் தாயோ அத்தனை முறையும் நரகத்துக்குப் போக வேண்டியவன். அத்தனை முறையும் நல்ல அதிர்ஷ்டமாய் நரக வாயிலிருந்து தப்பி ஓடிவந்தவன். இதை நினைத்து சர்வேசுரன் முன் சாஷ்டாங்கமாக விழுந்து கண்ணீர் சிந்தி பின்வருமாறு மன்றாடுவாயாக:

ஓ என் சர்வேசுரா! அந்த நாளிலே நான் சாவான பாவம் செய்த கணத்திலே என்னை உமது நீதி சிம்மாசனத்தின் முன் நிறுத்தித் தீர்ப்பு சொல்லியிருந்தால், நான் இப்போது சபிக்கப்பட்ட நரகத்திலே பசாசுகளோடு இருக்க வேண்டும். அங்கே எவ்வளவு கண்ணீர் சிந்தினாலும் பலன் ஒன்றுமிராது. ஆனால் தேவரீர் என் மேல் தயவாயிருந்து என்னை இதுமட்டும் காப்பாற்றினீர். இன்னும் நான் பூமியிலிருக்கிறேன். இங்கே நான் என் பாவங் களுக்காக சிந்தும் கண்ணீர் பிரயோசனமுள்ள கண்ணீர். இதோ என் கண்ணீரை ஏற்றுக் கொள்ளும். இனி நான் பாவத்தைச் செய்ய மாட்டேன். உமது நீதியின் கோபத்தை இனிமேலும் தூண்டி எழுப்ப மாட்டேன். இதுமட்டும் புத்தியில்லாமல் நான் நடந்தது போதும். எனக்கு இனி மீதியாயிருக்கும் நாட்களை உமக்குப் பிரமா ணிக்கமாய் ஊழியம் செய்வதில் செலவழிப்பேன். இதுவே என் மாறாத தீர்மானம். ஓ தேவ மரியாயே ! பாவிகளின் தஞ்சமே! என் மனதை உறுதிப்படுத்தும்படி உம்மை நான் கெஞ்சி மன்றாடு கிறேன்.

ஆமென் சேசு.

விவரம் : இந்தத் தியானத்துக்குப் பின்னும் இனி வரும் தியானங்களுக்குப் பின்னும், பின்வரும் ஜெபங்களைக் கூடியமட்டும் முழங்காலிலிருந்து செய்வது ஒழுங்கு.

முதல் ஜெபத்தில்: பரலோக ஆண்டவளும், நம்முடைய இரட்சகரின் தாயுமான தேவ கன்னி மாமரி , தமது திருக்குமாரனிடம் மன்றாடி, மூன்று வரங்களைக் கேட்கும்படி அவர்களிடம் மன்றாடுவாயாக.

முதலாவது நமது பாவங்கள் இவையென்று நாம் நன்றாய் அறிந்து அவைகளைப் பகைக்கவும், இரண்டாவது நமது நடத்தையை ஒழுங்காய் சீர்திருத்தி சர்வேசுரனுடைய சித்தப்படி நடக்கவும், மூன்றாவது உலகத் திலிருக்கும் பாவ அக்கிரமங்கள் எவ்வளவென்று அறிந்தபின், அந்த உலகத்தையும் அதன் வீண் கோலத் தோற்றத்தையும் முழுவதும் பகைத்து வெறுக்கவும் ஆகிய இந்த மூன்று விண்ணப்பங்களைச் செய்வது முறை. இது முடிந்ததும் அருள்நிறை மந்திரம் சொல்.

அதன்பின் சேசுநாதரிடத்தில் இதே மூன்று மன்றாட்டுக்களைக் கேட்டு கிறிஸ்துவின் ஆத்துமமானதே என்ற ஜெபம் சொல். கடைசியில் பிதாவாகிய சர்வேசுரனிடம் இந்த மூன்று விண்ணப்பங் களைச் செய்து முடிவில் பரலோக மந்திரம் சொல்.