இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாள் 2, தியானம் 1, மூன்று வகைப் பாவம் - முதல் பாகம்.

தம்மிலே தாமாயிருந்து சகல நன்மை பாக்கியம் யாவும் சம்பூரண மாய் நிறைந்த சர்வேசுரன் தமது அளவில்லாத வல்லமை, ஞானம், தயாளம், நீதி முதலிய தேவ இலட்சணங்கள் வெளியில் தோன்றி விளங்கும்படி சித்தமாகி, ஆதியிலே அரூபிகளாகிய கோடானு கோடி சம்மனசுக்களைச் சிருஷ்டித்தார்.

இவர்கள் சிருஷ்டி களுக்குள்ளே மகா முதன்மை பெற்ற, மூத்த புத்திரர். இவர்களுக்கு மனிதருக்கிருப்பது போல் காணக்கூடிய தேகமில்லை. சுபாவ இலட்சணங்களும், தேவ இஷ்டப்பிரசாதமும் நன்கு அமையப் பெற்றவர்கள். தெளிந்த ஞானம், விரிந்த அறிவு, கூரிய புத்தி, இவை முதலிய மனோதத்துவ இலட்சணங்கள் இவர்களிடத்தில் மகா சிறந்த விதமாய் இருந்தன. இவர்கள் மனது மாசற்றதாயும், நன்மைக்குச் சார்புள்ளதாயுமிருந்தது. இவர்களுடைய விருப்பமும் கருத்தும் பற்றுதலும் சகல நன்மை சுரூபியான சர்வேசுரனிடம் இயல்பாய் சார்ந்திருந்தன. சர்வ மகத்துவ சர்வேசுரனுடைய மந்திரிகளாய் அவர் சிம்மாசனத்துக்கு முன் சதாகாலம் ஆனந்த பேரின்ப பாக்கியம் அநுபவித்து வரும்படியாய் சிருஷ்டிக்கப்பட் டார்கள்.

இத்தனை கோடி சம்மனசுக்கெல்லாம் அதிபதி தலைவனாய் லூசிபேர் என்ற அரூபி எல்லா அரூபிகளிலும் மேலாய்ச் சிறந்து விளங்கி மேலான நன்மை வரங்களால் அலங்கரிக்கப்பட்டு வான மண்டலத்தின் பிரகாசம் வீசும் அழகிய நட்சத்திரம் போல் விளங்கினான்.

இந்த சம்மனசுக்களைச் சர்வேசுரன் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் உறுதிப்படுத்துமுன், இவர்களுக்கு மன சுதந்திரம் கொடுத்து மோட்ச பதவியைப் பெறுவதற்கான பேறு இவர்களுக்கு உண்டாகும்படி செய்தார். இப்படியிருக்க, இவர்களில் மூன்றில் ஒரு பங்கு, தங்களுக்கிருந்த அதி உன்னத குணாதிசயங்களைக் கண்டு கர்வங் கொண்டு தாங்கள் சர்வேசுரனாலே ஒன்றுமின்மையினின்று சிருஷ்டிக்கப்பட்டவர்களென்கிற ஆதி சத்தியத்தை மறந்து, வீண் பெருமை பாராட்டி, சர்வேசுரனுக்குத் தாங்கள் சமமானவர்கள் என்று மனதில் எண்ணி: நாங்கள் இனி சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியோம் என்று அகங்காரம் கொண்டார்கள்.

இப்படி இந்த அசரீரிகள் கர்வங்கொண்டு பாவத்தை மனதில் நினைத்து முடித்த அதே கணத்தில், எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்த சர்வேசுரன் அவர்களுக்கு தீர்ப்பிட்டார். மகா பயங்கர தீர்ப்பு. தமது தேவ நீதியின் கோப அக்கினி குமுறி எரியும் நரகத்தை புதிதாய் சிருஷ்டித்து, கீழ்ப்படியாத துரோகிகளான அந்த சம்மனசுக்களை அந்த நரகில் தள்ளினார். சம்மனசுக்களா யிருந்தவர்கள் பசாசுகளானார்கள்.

ஒரு நிமிஷத்துக்கு முன் மோட்சத்தில் சர்வேசுரன் சமூகமுன் சம்மனசுகளாய் சம்பூரண பாக்கியம் அநுபவித்தவர்கள் மறு நிமிஷத்தில் எல்லாம் இழந்து பசாசுகளாய் நரகத்தின் பாதாளக் குழியில் விழுந்தார்கள். இவர்கள் தாங்கள் செய்த பாவத்தின் கனம் இன்னதென்று அறியவும், அதற்கு மனஸ்தாபப்படவும் நேரம் கொடாமல், அவர்கள் பாவத்தை மனதில் செய்து முடித்த கணத்திலே மின்னாமல் விழும் கோடை இடிபோல், தேவ நீதியின் நித்திய சாபம் இவர்கள் தலைமேல் விழுந்து நரகத்தில் இவர்களைத் தள்ளி விட்டது. இவர்களுக்குள் திடீரென்று உண்டான இந்த மாற்றத்தைப் பற்றி வேதவாக்கியம் அதிசயப்பட்டாற் போல் : ஓ வானமண்டலத்தின் பிரகாசம் வீசிய நட்சத்திரங்களே! நீங்கள் எப்படி ஒளி மங்கி இடம் பெயர்ந்து கீழே விழுந்தீர்கள்? என்று கேட்கின்றது (இசை.14:12).

இந்தத் துஷ்ட அரூபிகள் செய்த பாவமோ, ஒரே ஒரு பாவம்தான். அதுவும் முதல் பாவம். அந்த முதல் பாவமும் மனதால் மாத்திரம் செய்த பாவம். இந்த ஒரே பாவத்துக்காக அவர்கள் நரகத்தில் விழுந் தார்கள். இப்போது நரகத்தில் வேதனைப்படுகிறார்கள். இன்னும் நித்தியம் நித்தியம் நரக நெருப்பிலே தண்டனைக்குள்ளாகி வேவார்கள். இவர்களுக்குச் சர்வேசுரன் இந்த ஒரு தடவை மாத்திரம் பொறுத்தல் கொடுத்திருந்தால், கணக்கில்லா இத்தனை அரூபி களும் மோட்சத்தில் சர்வேசுரனுக்கு நித்தியமான ஊழியம் செய்து, அவரைப் புகழ்ந்து வாழ்த்தி ஸ்துதித்திருப்பார்கள்.

அளவற்ற நீதியுள்ள சர்வேசுரன் அத்தனை பேர் தமக்கு முன் செய்த ஊழியத்தையும், இனிமேல் செய்யக் கூடுமான ஊழியத் தையும் பாராமல் பாவத்தை அவர்கள் செய்த கணமே, பாரபட்சன்றி அவர்களை நரகத்திலே தள்ளினார்.

சகோதரரே! இந்தப் பயங்கரமுள்ள நிகழ்ச்சியைச் சற்றுக் கவன மாய் யோசித்தால் யார் சர்வேசுரனுடைய பயங்கரமான நீதியைக் கண்டு பயந்து நடுநடுங்காமலிருப்பான்? யார், எவனாயினும் சர்வேசுரனை விரோதித்துப் பாவம் செய்தால் சர்வேசுரன் அவனை அகோரமாய்த் தண்டிப்பார். தமது மோட்ச அரண்மனையில் மந்திரி பிரதானிகளாயிருந்த செல்வ மூத்த புத்திரர்களை இப்படி இரக்கமின்றித் தண்டித்தால், அற்ப மனிதனைத் தண்டியாமல் விடுவாரோ? நீங்கள் செய்த பாவங்களையும் இந்த அரூபிகள் செய்த பாவத்தையும் சற்று சீர்தூக்கி ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஆ! எவ்வளவு பாரதூர வித்தியாசமிருக்கின்றது! அவர்களோ, ஒரே ஒரு பாவம், அதையும் நினைவால் மாத்திரம் செய்தார்கள். நீங்கள் செய்த பாவங்களுக்கோ மட்டுமில்லை அளவுமில்லை. உங்கள் ஜீவிய நாட்களில் பாவமில்லாத நாள் ஏதாவதுண்டோ ? இந்தப் பாவங்கள், நினைவால் மாத்திரமோ? வார்த்தையாலும் செய்கையாலும் உண்டான பாவங்கள் பெரு மலைபோல் உங்கள் கண்முன் வளர்ந்து நிற்கிறதை நீங்கள் பார்க்கிறதில்லையா? முதல் முறை புத்தி அறிவு வந்தபின் ஒரு பாவத்தைச் செய்தது போதா தென்று அதே பாவத்தை எத்தனை முறை செய்திருக்கிறீர்கள்? அரூபிகள் செய்யும் பாவம் விஷமுள்ளது. மனிதன் செய்யும் பாவம் விஷமற்றது என்று எண்ணுகிறீர்களோ? அரூபிகளை மாத்திரம் சர்வேசுரன் தண்டிப்பார், மனிதனைத் தண்டிக்க மாட்டாரோ?

ஓ! சகோதரரே! பாவத்தை யார் செய்தாலும், பாவம் எப்போதும் பாவம். பாவம் எப்போதும் சர்வேசுரனுக்குத் துரோகமான செய்கை. பாவத்தை சர்வேசுரன் எப்போதும் தண்டிப்பார். ஆகையால் பாவத்துக்காக அரூபிகளைத் தண்டித்த சர்வேசுரன், பாவம் செய்யும் மனிதர்களையும் தண்டிப்பாரென்பது நிச்சயம். அவருடைய நீதி கோணாத நீதி, எல்லாருக்கும் ஒரே அளவு. பாரபட்சம், ஓரவஞ்சனை, முகநட்பு, அவரிடமில்லை (சங். 7:11).

ஆனால் சிலர், நான் செய்தது ஒரே ஒரு பாவ மாத்திரம். நானா, இவன் அவளைப் போல் பாவத்தில் பழகுகிறதில்லை என்று சொல்வார்கள். ஒரே ஒரு பாவம்தானா? இருக்கட்டும்! ஒரே ஒரு நாகப்பாம்பு உன்னைத் தீண்டினாலும், ஒன்பது நாகம் தீண்டி னாலும் விஷம் விஷம்தானே. துஷ்ட அரூபிகள் செய்ததும் ஒரே ஒரு பாவமல்லவா? ஒரே ஒரு பாவமானாலும் சர்வேசுரன் அவர் களை நித்திய தண்டனையால் இன்னும் தண்டிக்கிறார். ஆதலால் ஒரே ஒரு பாவம்தான் நான் செய்தேனென்று சொல்லி உன் பாவத் தின் கனத்தைக் குறைக்காதே. ஆனால் நான் பழைய கிறீஸ்துவன். நேற்று, முந்தைநாள் மனந்திரும்பினவன் அல்ல.

என் தந்தையும், முன்னோரும் சத்திய வேத வளர்ச்சிக்காக வெகுவாய் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அநேக தர்மங்கள் செய்திருக்கிறார்கள். கோவில் கட்டியிருக்கிறார்கள். நானும் கோவிலுக்காக நிலம் பூமி முழு இலவசமாய் விட்டிருக்கிறேன். சத்திரங்கள் பல இடங்களில் கட்டியிருக்கிறேன். ஏழைகளுக்கு வருஷா வருஷம் அன்னதானம் கொடுக்கிறேன். திருநாள் கொண்டாட்டங்கள் என் கைச் செலவில் தான் நடக்கின்றன. என் முயற்சியாலே தான் தேவாலயச் சிறப்பும் திரு நாட்களின் ஆடம்பரமும், குருக்களின் பராமரிப்பும் சீராய் நடந்து வருகின்றது. இன்னும் சர்வேசரன் எனக்கு நீண்ட ஆயுளும், செல்வமும் கொடுத்தால் கோவிலுக்காக நிரம்பவும் செய்யக் காத்திருக்கிறேன் என்று சில கிறீஸ்தவர்கள் தாங்கள் செய்த ஊழியத்தைப் பிரமாதமாய் மதித்துப் பேசி இதன் நிமித்தம் அளவுக்கு மிஞ்சிய நம்பிக்கை கொண்டு சர்வேசுரனுடைய கற்பனை களையும், திருச்சபையின் சட்டங்களையும் மீறி நடப்பார்கள்.

கிறீஸ்துவனே! நீ சர்வேசுரனுக்காக ஏதோ வெகுவாய் செய்தது போல் இறுமாப்புக் கொண்டு வீணாய்ப் புலம்பாதே! சம்மனசுக்கள் தமக்கு நீடித்துச் செய்த ஊழியத்தையும் இனி அவர்கள் நித்தியத் துக்கும் செய்யக்கூடுமான ஊழியத்தையும், சர்வேசுரன் பாராமல் அவர்களை உடனே தண்டித்தாரல்லவா? ஏன்? ஏனென்றால், எவனுடைய ஊழியமும் சர்வேசுரனுக்கு அவசியமோ? உன் பணமும், காசும் சர்வேசுரனுக்கு நீ படைப்பதால், உன் இஷ்டம் போல் சர்வேசுரனை நீ நிந்திக்கலாமென்றோ எண்ணுகிறாய்? எந்தப் பிச்சைக்காரனும், உன்னிடத்திலிருந்து அரைக்காசு தர்மமாய் வாங்கும்படியாக, நீ அவன் முகத்திலே காறி உமிழும்படி சம்மதிப் பானோ?

ஆ! ஆ! நீ சர்வேசுரனை யாரென்று எண்ணுகிறாய்? மோசம் போகாதே. சர்வேசுரன் பாவத்தை சர்வ பகையோடு பகைக்கிறார். பாவம் செய்கிறவன் யாராயினும் சரி, அதி உன்னத அரூபியாயிருந்தாலும், அவனைத் தண்டிப்பார். இதை நன்றாய் மனதில் வைத்துக் கொள். நான் இதை, அதைச் செய்தேன். நான் இதை அதை இனிச் செய்வேன் என்று சர்வ ஞான சுரூபியான சர்வேசுரனை மயக்கி உன் பக்கம் இணக்கலாமென்று கனவிலும் நினையாதே. பாவம் இன்னதென்றும், சர்வேசுரன் எவ்வளவு அதைப் பகைக்கிறார் என்றும் இப்போது அறிந்தாய். பாவம் எப்படி வருமென்று இரண்டாம் பாகத்தில் அறிவாய். கவனமாய்க் கேள்.