இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாள் 2, தியானம் 1, மூன்று வகைப் பாவம்

சகல ஞான சுரூபியான சர்வேசுரன் மனிதர்களைத் தமது சாயலாக உண்டாக்கச் சித்தமான போது, அவர்கள் தம்மை ஸ்துதித்து வணங்கி, தமக்கு ஊழியம் செய்து அதனால் தங்கள் ஆத்தும இரட்சணியமடையத் தீர்மானித்தார்.

ஆகையால் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவன் தன்னை இரட்சிப்பவன். ஊழியம் செய்யாதவனோ, சர்வேசுரனை விரோதிப்பவன். அவன் விரோதித்துச் செய்யும் துர்ச் செய்கையே பாவமென்று சொல்லப்படும்.

சர்வ வல்லப சர்வேசுரனை விரோதிக்கும் துர்ச் செய்கையாகிய பாவம், எவ்வளவு விஷம் நிறைந்த செய்கையென்றும் அந்தச் செய்கையைச் சர்வேசுரன் எவ்வளவு பகைக்கிறாரென்றும், அதைத் துணிந்து செய்பவர்களை எப்படி கடினமாய்த் தண்டிக்கிறா ரென்றும் மனதில் பதிய நன்றாய் உணர்வது மகா அவசியம்.

பாவத் துக்குள்ள விஷமும் தோஷமும் அதற்கு வரும் தண்டனையும் எவ்வளவு என்று நீங்கள் அறிந்தால் பாவத்தை வெறுத்து பகைப் பீர்கள். இதுவரை செய்த பாவங்களுக்காக மனஸ்தாபப்படுவீர்கள். இனி பாவத்துக்குப் பயந்து அதைச் செய்யாதபடி பெருமுயற்சி செய்வீர்கள்.

இந்த நல்ல பலன் அடையும்படியாக, சம்மனசுகளும், ஆதித்தாய் தகப்பனும் செய்த முதல் பாவத்தைப் பற்றி இந்தத் தியானப் பிரசங்கம் செய்யப் போகிறோம்.

நீங்கள் இதைக் கவனமாய்க் கேட்டு, கேட்டதின் பேரில் மனதில் நன்றாய் யோசித்தால், பாவத்தின் பேரில் பயமும் பகையும் உங்கள் மனதில் பிறக்கும்.

இந்த இரண்டாம் நாள் தியானங்களின் பயன் இதுதான். ஜென்மப் பாவத்தின் தோஷமின்றி அமலோற்பவியாய் ஜென்மித்துப் பிறந்த தேவதாய் நமக்குத் துணையாய் முன் நிற்பார்களாக.ராக.