இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 19. நல்ல பரிமாற்றம்

கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் (லூக், 6:38) என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு முத் ஆலன் ரோச் கொடுக்கும் பொருள் : நான் உன் பகைவனாயிருந்தாலும் தினமும் உனக்கு நான் நூற்றைம்பது வைர மணிகளைக் கொடுத்து வந்தால், என்னை நீ மன்னிக்க மாட்டாயா? என்னை உன் நண்பனைப் போல் பாவித்து உன்னால் செய்யக் கூடிய உதவியெல்லாம் செய்ய மாட்டாயா? கடவுளின் வரப்பிரசாத திரவியங்களையும், மகிமையையும் நீ பெற்றுக் கொள்ள விரும்பினால் பரிசுத்த கன்னிகைக்கு வணக்கம் செலுத்து. உன் தாயாகிய மரியாயை மகிமைப்படுத்து. 'தன் தாயை (தேவ அன்னையை) மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் போலாவான் (சீராக். 3:5) ஆதலால் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பது அருள் நிறை மந்திரங்களையாவது அன்னைக்குக் கொடு, ஏனென்றால் அதில் ஒவ்வொன்றும் பதினைந்து விலையுயர்ந்த கற்களுக்குச் சமம். இவ்வுலகின் செல்வங்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்தாலும் இவற்றிற்கு அவை ஈடாகாது.

மேலும் தேவ அன்னையின் தாராள குணத்திலிருந்து நீ எவ்வளவோ பெரிய காரியங்களை எதிர்பார்க்கலாம். தேவதாய் நம் நண்பனும் அன்னையுமாயிருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் பேரரசியாயிருக்கிறார்கள். உலகிலுள்ள எல்லா அரசிகளும் அன்னையரும் சேர்ந்து ஒருவனை நேசிப்பதைவிட நம் தாய் நம்மை அதிகம் நேசிக்கிறார்கள். இது மிகவும் உண்மை . ஏனென்றால் அர்ச், அகுஸ்தீன் உரைப்பது போல எல்லா சம்மனசுக்களுடையவும் மனிதருடையவும் இயல்பான அன்பையெல்லாம் விட தேவ அன்னையின் அன்பு மிகுதியாயிருக்கிறது.

ஒரு நாள் அர்ச், ஜெர்த்ருத் ஓர் காட்சியில் நமதாண்டவர் தங்க நாணயங்களை எண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவரிடம் கேட்பதற்கு அவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, 'சேசு ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்?" எனக் கேட்டாள், 'நீ சொல்லிய அருள் நிறை மந்திரங்களை எண்ணுகிறேன். மோட்சம் செல்லும் வழிப் பயணத்துக்கு நீ அவற்றை செலுத்தலாம்' என்று சேசு விடையளித்தார்.

புனித வாழ்வு வாழ்ந்த வேத அறிஞரான சேசு சபை சூவாரஸ் என்ற குரு இம்மங்கள வார்த்தையின் நற்பலனை எவ்வளவு ஆழமாக உணர்ந்திருந்தரென்றால் தகுந்த விதமாக சொல்லப்பட்ட ஒரு அருள் நிறை மந்திரத்திற்கு விலையாக, தான் கற்ற கல்வி யாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருப்பதாகக் கூறினார்.

மேலும் முத் ஆலன் ரோச் பின்வருமாறு உரைக்கின்றார். 'ஓ மிகவும் புனித மரியாயே உம்மை நேசிக்கும் எல்லாரும் இதனைக் கேட்டு இதன் பொருளைப் பருகட்டும்.

விண்ணகம் மகிழ்கின்றது! மண்ணகம் வியப்பில் மூழ்குகின்றது! மரியாயே வாழ்க! என்று நான் உரைக்கும் போதும் உலகினை வெறுக்கின்றேன்: தேவ சிநேகத்தால் என் இதயம் நிரம்பி நிற்கின்றது: மரியாயே வாழ்க! என்று நான் உரைக்கும் போது! அச்சம் எல்லாம் என்னில் அகன்று அழிகின்றன! ஆசாபாசமெல்லாம் அமர்கின்றன மரியாயே வாழ்க! என்று நான் உரைத்தால்!

பக்தி என்னுள் வளர்கின்றது, பாவத்திற்கு வருத்தம் என்னுள் உதிக்கின்றது. மரியாயே வாழ்க என்று நான் உரைக்கும் போது!

நம்பிக்கை என் நெஞ்சில் உறுதிப்படுகின்றது. ஆறுதலென்னும் தண்பனி மென்மேலும் என் ஆன்மாவில் பொழிகின்றது. மரியாயே வாழ்க! என்று நான் உரைப்பதனால்! என் மனம் மகிழ்ந்து களிக்கின்றது! | துயரம் மறைந்து போகின்றது மரியாயே வாழ்க! என்று நான் உரைக்கும் போது!

இந்தப் பாக்கியமான மங்கள வாழ்த்தின் இனிமை எவ்வளவு மேலானதென்றால், அதை விளக்கிக் கூற வார்த்தைகள் இல்லை. அதன் ஆச்சரியங்களையெல்லாம் கூறி முடித்தாலும் அது இன்னும் எவ்வளவோ அதிசயங்களைக் கொண்டு எவ்வளவு அழ்ந்ததாயிருக்கிறதென்றால், அதன் அழத்தை ஒரு போதும் எட்ட இயலாது. இம்மங்கள வார்த்தையின் இனிமை தேனைவிடச் சிறந்தது. பொன்னிலும் விலையுயர்ந்தது. அதனை நம் இதயத்திலே அடிக்கடி நினைத்து சிந்திக்க வேண்டும். எப்போதும் அது நம் நாவில் இருக்க வேண்டும். இவ்வாறு திரும்பவும், திரும்பவும் அன்புடன் நாம் அதைச் சொல்ல வேண்டும்.

கீழ்வரும் சம்பவத்தை முத் ஆலன் கூறுகிறார். ஜெபமாலை மீது எப்போதும் சிறந்த பக்தி பூண்டிருந்த ஒரு கன்னிகை இறந்தபின் அவளுடைய ஆன்மா, அவள் உடன் கன்னிகை ஒருத்திக்குத் தோன்றி, 'ஒரே ஒரு அருள் நிறை மந்திரம் சொல்வதற்காக - அதையும் வேகமாகவோ, அதிக பற்றுதல் இல்லாமலோ சொன்னால் கூட போதும்; நான் என் உடலுக்குள் மீண்டும் செல்ல அனுமதிக்கப்பட்டால், மிக்க மகிழ்ச்சியோடு செல்வேன். இந்த ஒரு அருள் நிறைந்த மந்திரத்தின் பலனைப் பெறும்படியாக நான் இறக்குமுன் அனுபவித்த நோயை மீண்டும் அனுபவிக்க விரும்புகிறேன் என்று கூறினாள். (ஜெபமாலையின் மகத்துவம்: முத். ஆலன் ரோச்). இந்தக் கன்னிகை இதற்கு முன் பல ஆண்டுகளாக நோய்ப் படுக்கையிலே இருந்து கொடிய வேதனைகளை அனுபவித்தாள் என்ற உண்மை அவள் வார்த்தைகளுக்கு அதிக உறுதியளிக்கின்றது.

சாலுபர் என்னுமிடத்தின் மேற்றிராணியார் லிஸில் மிக்கேல் என்பவர் முத் ஆலனின் சீடன், ஜெபமாலைப் பக்தியை மீண்டும் புதுப்பிக்க அவருடன் சேர்ந்து உழைத்தவர். இவர் கூறுகிறார். 'நாம் படும் எல்லா துன்பங்களுக்கும் தகுந்த மருந்து அருள் நிறை மந்திரமாகும். ஆனால் அதை அன்னையின் மகிமைக்காக பக்தியுடன் சொல்ல வேண்டும்.