யாத்திராகமம் - அதிகாரம் 15

மோயீசன் சங்கீதம் பாடியதும் - மாராவிலும் ஏலிமிலும் நடந்த சங்கதிகளும்.
1. அப்பொழுது மோயீசன் இஸ்றாயேல் புத்திரரோடே கூடக் கர்த்தரைப் புகழ்ந்து பாடிய சங்கீதமாவது: கர்த்தருக்குப் பாடல் பாடுவோம்; ஏனெனில் அவர் பிரபலியமாய் வெற்றியில் சிறந்தார்; புரவியையும் அதன் மேலேறியிராநின்ற வீரனையும் கடலிலே வீழ்த்தினார்.

* 1-ம் வசனம்: மோயீசன் பாடிய இந்தச் சங்கீதத்தைவிட அதிக அபூர்வ செய்யுள் உலகத்திலுண்டோ இல்லையோ என்பது சந்தேகம். ஆனால் சர்வேசுரனுடைய மகிமைப் பிரதாபத்தையும் அவருடைய கருணையின் உதாரத்தையும் காண்பிக்கும் விஷயத்தில், மோயீசன் ஒப்பாரும் மிக்காருமில்லாத கவிராயனென்று சொன்னாலும் சொல்லலாம்.

2. கர்த்தர் என் பெலனும் என் ஸ்துதிகளு க்குப் பாத்திரவானுமாயிருக்கின்றனர்; எனக்கு அவர் இரட்சணியந் தந்தனராயினர். அவர் என் தேவனானபடியால் அவரை நான் மேன் மைப் படுத்துவேன்; அவர் என் பிதாவின் தேவனென்று பாராட்டி மெச்சுவேன்.

3. ஆண்டவர் போர்வீரனைப் போலாம், சர்வ வல்லவரென்று எண்ணப்படுகின்றனர்.

4. அவர் பரவோனின் இரதங்களையும் படைகளையும் சாகரத்திலே விழத்தாட்டி னர்.

5. ஆழி அவர்களை மூடிக் கொண்டது, கல்லைப் போல ஆழத்தில் விழுந்தனர்.

6. கர்த்தாவே, உம்முடைய வலது கரத் தின் பலமே வெற்றி சிறந்தது; உமது வலது கை பகைவரை நொறுக்கியது.

7. உம்முடைய எதிரிகளை உமது மிகுந்த பிரதாபத்தினால் அதம்பண்ணினீரே; தேவ ரீர் உம்முடைய கோபாக்கினியை அனுப்ப, அது வந்து அவர்களைத் துரும்பெனப் பட்சித்தது.

8. உமது கடுங்கோபத்தின் பிரசண்டத் தினாலே ஜலங்கள் குவிந்தன; நீர் வெள்ளந் தடுக்கப்பட்டு நடுக்கடலில் ஆழப் பாதாளங்கள் அடுக்கப்பட்டன.

9. பகைவன்: அவர்களை நான் தொட ருவேன், பிடிப்பேன், கொள்ளையிடப்பட்ட வைகளைப் பங்கிடுவேன், என்னாசை திருப் தியாகச் செய்வேன். என் கத்தியை உருவி என் கையாலே அவர்களைக் குத்துவேன் என்று சொன்னமாத்திரத்தில்,

10. உமது காற்றை வீசப்பண்ணினீரே! அச்க்ஷணங் கடல் அவர்களை மூடிக் கொண் டதினால் அவர்கள் ஈயக்குண்டு போல் ஆர்ப்பரிக்கும் ஜலங்களில் அமிழ்ந்தனர்.

11. கர்த்தாவே! வல்லவர்களில் தேவரீ ருக்கு நிகரானவர் யார்? தேவரீரைப்போல் இருக்கிறது யார்? பரிசுத்தத்தில் மகத்துவ முள்ளவனும் பயங்கரத்துக்குரியவனும் ஸ்துதிக்கப் பாத்திரவானும் அற்புதங்களைச் செய்கிறவனும் தேவரீருக்கு ஒப்பானவ னுண்டோ?

12. உம்முடைய கரத்தை நீட்டினீர். நீட் டவே பூமி அவர்களை விழுங்கிற்று.

13. நீர் மீட்டிரட்சித்த பிரஜைகளுக்குத் தயவோடே வழிகாட்டியானீர். உம்முடைய வல்லமையுள்ள கையால் அவர்களைத் தூக்கி திருவாசஸ்தலத்தில் ஸ்தாபித்தீரே.

14. ஜனங்கள் எழும்பிச் சினந்தனர், பிலி ஸ்தீம் வாசிகளும் நொந்துபோயினர்.

15. அப்பொழுது ஏதோமின் பிரபுக்கள் மனங் கலங்கினர், மோவாபின் பராக்கிரம சாலிகள் நடுக்கமுற்றனர். கானான் தேசத்தின் குடிகளெல்லோரும் திகில்பட்டு வாடி வதங்கினர்.

16. உம்முடைய விசால புயத்தின் மகத் துவத்தால் அவர்களின் மேல் ஏக்கமும் திகி லும் வரக் கடவது; உம்முடைய ஜனங்கள் அக்கரை போய்ச் சேருமட்டும் அவர்கள் பாறைபோல் ஸ்தம்பித்து நிற்கக்கடவர். ஆம். உம்முடைய பிரஜைகள் கடந்துபோகும் வரைக்கும் அவர்கள் அசையாதிருக்கக் கடவர். 

17. நீர் அவர்களைக் கொண்டுபோய் உம் முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும் கர்த்தராகிய தேவரீர் நிருமித்த அசையாத வாசஸ்தலத்திலும் அவர்களைக் நாட்டுவீர். அது தேவரீருடைய கையாலே நிலையிடப் பட்ட உம்முடைய திரு வாசஸ்தலமாம்.

18. ஆண்டவர் நித்தியத்திலும் நித்திய மாய்ச் செங்கோலோங்குக!

19. ஏனெனில் பரவோன் தன் இரதங்க ளோடும் குதிரை வீரரோடும் குதிரை வீர னாய்ச் சாகரத்திற் பிரவேசித்தனன். கர்த் தரோ அவர்களின்மேல் கடற்றிரைகளைத் திரும்பச் செய்தார். இஸ்றாயேல் புத்திர ரோ கடலின் நடுவில் கால் நனையாமல் நடந்து போயினரே.

20. அதற்குள்ளே ஆரோனுடைய சகோ தரியான மரியாய் என்னும் தீர்க்கத்தரிசியா னவள் தன் கையிலே மத்தளம் பிடித்துக் கொண்டாள். அதைக் கண்டு மற்றுமுள்ள ஸ்திரீகளெல்லாந் தங்கள் மத்தளங்களையும் எடுத்துப் பாடியுமாடியும் வெளியே போ னார்கள்.

21. மரியாய் இராகமெடுத்து: கர்த்தரைப் புகழ்ந்து சங்கீதம் பாடக்கடவோம்; ஏனெ னில் அவர் பிரபலியமாய் வெற்றி சிறந்தனர். புரவியையும் அதன் மேலேறியிரா நின்ற வீரனையும் கடலிலே வீழ்த்தினாரென்று பாட்டுப் பாடினாள்.

22. மோயீசன் இஸ்றாயேல் புத்திரர்க ளைச் செங்கடலிலிருந்து பிரயாணப்படுத்தி னபோது அவர்கள் சூரென்னும் வனாந்தரத்தில் பிரவேசித்து மூன்றுநாளளவும் நிர்மா னுஷியமான வழியில் நடந்து தண்ணீர் அகப்படாமற்போயிற்று.

23. அவர்கள் மாராவிலே சேர்ந்தார்கள். அவ்விடத்தில் ஜலங் கிடைத்ததும் அது கசப் பாயிருந்ததால் குடிக்க அவர்களுக்குக் கூடவில்லை. ஆனபடியால் மோயீசன் அவ் விடத்திற்குத் தக்காப்போல மாரா அதா வது கசப்பு என்று பெயரிட்டனன்.

24. ஜனங்கள் மோயீசனுக்கு விரோத மாய் முறுமுறுத்து, என்னத்தைக் குடிப் போமென்று முறையிட,

25. மோயீசன் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டான். அவர் ஒரு மரத்தை அவனுக்கு காண்பித்தார். மோயீசன் அதைத் தண்ணீரில் போட்டவுடனே அது மதுரமான நன்னீ ராயிற்று. கர்த்தர் அவ்விடத்திலே சிற்சில கற்பனைகளையும் நீதிச் சட்டங் களையும் அவனுக்குக் கொடுத்து, அங்கே ஜனங்களைச் சோதித்து,

* 25-ம் வசனம். அவ்விருட்சமானது அர்ச்சியசிஷ்ட சிலுவைமரத்துக்கு முன்னடையாளம் என்று அர்ச். அகுஸ்தீனும் இன்னும் பற்பல வேதபாரகர்களும் அனுமானித்து எழுதியிருக்கி றார்கள். உள்ளபடி சிலுவையில் அறையப்பட்ட சேசுநாதரை எவன் பக்தி பட்சத்தோடு நோக்கி தியானம் பண்ணுவானோ அவனுக்கு எத்தனை துன்பதுரிதந்தான் வந்தாலும் அவன் அதைப் பெரிய கஷ்டமாக எண்ணாமல் வெகு சாமானியமென்று பொறுமையுடன் சகித்து வருவானல்லவா?

26. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்த ரின் வாக்கியத்துக்குச் செவிகொடுத்து அவ ருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்து, அவரின் கற்பனைகளுக்கெல்லாம் கீழ்ப்பட்டு, அவருடைய கட்டளை யாவை யும் அனுசரிப்பீர்களாகில், எஜிப்த்தியருக்கு நாம் வரப்பண்ணின வாதைகளில் ஒன்றையும் உங்கள் மேல் வரச்செய்யமாட்டோம். ஏனெ னில் நாம் உங்கள் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

27. இஸ்றாயேல் புத்திரர்கள் ஏலிமில் வந்து சேர்ந்தார்கள். அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பனைமரங்களும் இருந்தன; அவர்கள் கலங்களின் சமீபத்திலே பாளையம் இறங்கினார்கள்.