ரோஜா மலர் 13. பரலோக மந்திரம் (தொடர்ச்சி)

கர்த்தர் கற்பித்த ஜெபத்தின் ஒவ்வொரு வார்த்தையைக் கொண்டும், நாம் சர்வேசுரனுடைய குண இலட்சணங்களை வாழ்த்துகிறோம்.

பிதா என்ற பெயரால் அவரை அழைத்து அவருடைய தந்தைத் தன்மையைப் பாராட்டுகிறோம்.

தந்தாய், நித்திய காலமாக நீர் சுதனை ஜெனிப்பிக்கின்றீர். உம்மைப் போல் அவரும் சர்வேசுரனாயிருக்கிறார். நித்தியராகவும் உம்முடன் ஒரே பொருளாகவும் இருக்கிறார். தேவ தன்மையில் இருவரும் ஒரே ஒன்றாயிருக்கின்றீர்கள்.

உம்முடன் ஒரே வல்லமையும் நன்மைத் தனமும் ஞானமும் உம்மைப் போலவே உம்மோடு ஒன்றாகக் கொண்டிருக்கின்றார். பிதாவும் சுதனும் ஒருவரையொருவர் நேசிக்கும் அன்பால் பரிசுத்த ஆவி புறப்படுகின்றார். பரிசுத்த ஆவியும் உம்மைப் போலவே சர்வேசுரனாயிருக்கின்றார்! மூன்று ஆட்கள் - ஆயினும் சர்வேசுரன் ஒருவரே!

'எங்கள் பிதாவே' என்கிறோம். மனுக்குலத்தின் தந்தை சர்வேசுரனே, ஏனென்றால் அவரே நம்மைப் படைத்தார். தொடர்ந்து நம்மை நிலை நிறுத்தித் கொண்டிருக்கிறார். நம்மை மீட்டவரும் அவரே. பாவிகளின் இரக்கமிகு தந்தை அவரே. நீதியுள்ளவர்களின் நண்பன் - மோட்சத்தி லுள்ளவர்களின் மாட்சிமிகு தந்தையாயிருப்பவர் அவரே.

பரலோகத்தில் 'இருக்கிற' என்று கூறுகிறோம். கடவுளின் இருத்தல்' என்பது அளவற்றது - கட்டுக்கடங்காதது - முழு நிறைவு பெற்றது. இந்த இலட்சணங்களை 'இருக்கிற' என்கிற சொல்லால் நாம் வாழ்த்துகிறோம். இருக்கிறவர் என்று சர்வேசுரனைச் சொல்வது சரியே. (யாத் 3.14) அதாவது சர்வேசுரன் இருப்பது அவசியம். அவருடைய தன்மை இருத்தலேயாகும். அவர் நித்தியராயுமிருக்கிறார். ஏனென்றால் இருப்பவைகளின் இருப்பு அவர்தான். இருக்கின்ற யாவற்றினுடைய குணநலன்கள் அனைத்தையும் சர்வேசுரன் உன்னத முறையாய்த் தம்மில் கொண்டுள்ளார். தம் இருத்தல் என்னும் பண்பால் அவை யாவற்றிலும் சர்வேசுரன் இருக்கின்றார். தம்முடைய பிரசன்னத்தாலும் சக்தியாலும் அவற்றில் அவர் உள்ளார். ஆயினும் அவற்றின் குறைபாடுகள் எதனாலும் அவர் பாதிக்கப்படுவதில்லை . அவருடைய உயர்வையும் மகிமையையும் மகத்துவத்தையும் 'பரலோகத்திலிருக்கிற என்ற சொல்லால் நாம் புகழ்கிறோம் அதாவது 'உமது நீதியால் மானிடர் அனைவர் மீதும் அரசு செலுத்தி அரியணையில் அமர்ந்திருப்பவர் நீரே என்று வாழ்த்துகிறோம்.

'உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக என்று நாம் கூறும்போது அவருடைய தூய தன்மையைப் போற்றுகிறோம்

'உம்முடைய இராச்சியம் வருக என்னும் போது மோட்சத்தில் சம்மனசுக்கள் அவருக்குக் கீழ்ப்படிவது போல பூமியில் மானிடர் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கேட்டு இறைவனின் கட்டளைகளின் நீதிக்குப் பணிகிறோம். அவருடைய அரசுரிமைக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

'அனுதின உணவைக் கேட்பதால் அவருடைய பராமரிப்பில் நம்பிக்கையைக் காட்டுகிறோம்.

'பாவங்களைப் பொறுத்தருளும் என்ற வேண்டுதலால் அவருடைய இரக்கத்தை மன்றாடுகிறோம்.

'சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைஞ்சுவ தால் சர்வேகரனுடைய மாபெரும் சக்தியைத் தேடுகிறோம்.

"தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்' என்று கேட்டு அவர் அவ்விதமே செய்வார் என அவருடைய நன்மைத்தனத்தில் நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்.

தேவ சுதன் எப்பொழுதும் தம் செயல்களால் தம் பிதாவை மகிமைப்படுத்தினார். மாந்தரும் தம் பிதாவுக்கு மகிமை செலுத்த வேண்டுமென்று படிப்பிக்க உலகிற்கு வந்தார். தமது சொந்த வாயால் நமக்கு அவர் கற்றுத் தந்த இந்த ஜெபத்தினால் சர்வேசுரனை எவ்வாறு போற்ற வேண்டும் என்று காட்டினார். ஆதலால் இச்செபத்தை அடிக்கடி சொல்வது நமது கடமை. நாம் இச்செபத்தை எப்படி கவனத்தோடும் வணக்கத்தோடும் சொல்ல வேண்டும் என்று அவர் கற்பித்தாரோ அந்த உணர்வோடு இதை ஜெபிக்க வேண்டும்.