இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 12

பிதாப்பிதாக்களையும் சேசுநாதரையும் போலவே துன்ப துரிதங்களை மனத்திடமாய்ச் சகித்துக்கொள்ளப் புத்திசொல்லுகிறார்.

1. ஆதலால் திரண்ட மேகம் போன்ற இம்மாத்திரம் சாட்சிகள் நம் மைச் சூழ்ந்திருக்க, நாம் எல்லாப் பாரத் தையும் நமதுமேல் சுமந்த பாவத்தையும் தள்ளிவிட்டு, (உரோ. 6:4.)

2. நமது விசுவாசத்தின் ஆதி கர்த்தாவும், அதைச் சம்பூரணமாக்குகிறவருமாகிய சேசுநாதரை எப்போதும் கண்முன்பாக வைத்துக்கொண்டு, நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்துக்குப் பொறுமையோடு ஓடக்கடவோம். அவர் சந்தோஷ ஜீவியம் தமக்குமுன் வைக்கப்பட்டிருக்க, அவமானத்துக்குக் கூச்சப்படாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டு, இப்பொழுது சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

3. அப்படியே நீங்களும் களைத்து உங்கள் ஆத்துமத்தில் சோர்ந்து போகாத படிக்குப் பாவிகளால் தமக்கு விரோத மாய்ச் செய்யப்பட்ட இவ்வித எதிரிடை யைச் சகித்த அவரையே நினைவு கூறுங்கள். (உரோ. 15:3.)

4. பாவத்துக்கு விரோதமாய்ப் போ ராடுவதில் நீங்கள் இன்னும் இரத்தஞ் சிந்துமட்டும் எதிர்த்து நிற்கவில்லையே.

5. பின்னும்: என் மகனே, ஆண்டவருடைய சிட்சையை அசட்டை பண்ணாதே; அவரால் கண்டிக்கப்படும் போது சோர்ந்துபோகாதே என்று அவர் தம் சொந்த மக்களுக்குச் சொல்லுகிறது போல் உங்களுக்குச் சொல்லுகிற ஆறுத லான வார்த்தைகளை மறந்து போனீர் கள். (பழ. 3:11; காட்சி. 3:19.)

6. ஏனெனில் ஆண்டவர் தாம் சிநேகிக்கிறவனைத் தண்டிக்கிறார். தாம் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுகிற எவனையும் பிரம்பால் அடிக்கிறார்.

7. அவர் தண்டிக்கும்போது பொறுமையில் நிலைகொள்ளுங்கள். சர்வேசுரன் உங்களைத் தம்முடைய புத்திரர்களைப்போல் நடத்துகிறார். தகப்பன் கண்டியாத பிள்ளை உண்டோ?

8. அன்றியும் (பிள்ளைகள்) எல்லோரும் சிட்சைக்குள்ளாயிருக்கையில், நீங்கள் அதற்குப் புறம்பாயிருந்தால், நீங்கள் சோர மக்களேயன்றிச் சுய மக்களல்லவே.

9. அல்லாமலும், மாம்சத்தின்படி நமக்குத் தந்தைகளானவர்கள் நம்மைச் சீர்படுத்தும்போது அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நமது ஞானாத்தும தந்தைக்கு எவ்வளவோ அதிகமாய்க் கீழ்ப்படிந்து பிழைக்கவேண்டியது?

10. அவர்களோ தங்களுக்கு இஷ்டமானபடி கொஞ்சகால மாத்திரம் நம்மைச் சீர்த்திருத்தினார்கள். இவரோவெனில் தம்முடைய பரிசுத்ததனத்தை நாம் பெற்றுக்கொள்வ தற்கு உதவுகிறவரையில் நம்மைச் சீர் திருத்துகிறார்.

11. ஆகிலும் எந்தத் தண்டனை யும் தற்காலத்தில் சந்தோஷமாகத் தோன்றாமல் துக்கமாகத் தோன்றும்.  ஆனால் அதில் பழகிப்போனவர்களுக்குப் பின்னால் அது மிகுந்த சமாதானத்துக் குரிய நீதிப்பலனைப் பெறுவிக்கும்.

* 11. துன்பங்களில் கிறீஸ்துவனுக்கு ஆறுதல் வருவிக்கக்கூடிய ஐந்து பிரதான முகாந் தரங்கள் உண்டு. 

1-வது. அந்தத் துன்பங்களுக்குச் சர்வேசுரன் தாம் பட்சமுள்ள தகப்பனைப்போல் காரணமாயிருக்கிறார்.

2-வது. சர்வேசுரன் நமக்கு அனுப்புகிற துன்பங்கள் அவருடைய பட்சத்தின் அத்தாட்சிகளாயிருக்கின்றன.

3-வது. சர்வேசுரனுக்குப் பிரியமான பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டோ மென்பதற்கு அவைகள் அத்தாட்சிகளாயிருக்கின்றன.

4-வது. நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாய் இருக்கிறபடியினாலே துன்பங்கள் அவசியமாய் நமக்கு வரவேண்டியது. இல்லாவிட்டால் சர்வேசுரனுக்கு நாம் பிள்ளைகளாய் இருக்கமாட்டோம். சர்வேசுரன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளாமல் நம்மை விபசாரத்தின் பிள்ளைகள்போல் எண்ணித் தள்ளுவார்.

5-வது. துன்பங்கள் தற்காலத்திலே கசப்பாய்த் தோன்றினாலும் பிற்பாடு நித்தியமான சந்தோஷத்துக்குக் காரணமாயிருக்கின்றன.

12. ஆகையால் சோர்ந்த கைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் திரும்ப நிமிர்த்தி, (இசை. 35:3.)

13. உங்களில் நொண்டுகிறவன் பிசகி நடவாமல், குணமாகும்படிக்கு உங்கள் கால்களைச் செவ்வழியாய் நடக்கப் பண்ணுங்கள்.

14. சமஸ்தரோடும் சமாதானத்தையும் பரிசுத்ததனத்தையும் நாடுங்கள். பரிசுத் தமில்லாமல் சர்வேசுரனை ஒருவனும் தரிசிக்கமாட்டான். (உரோ. 12:18.) 

15. எவனும் சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தை தவறவிடாதிருக்கவும், யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பி, தடை உண்டாக்குவதினால் அநேகர் மாசுபடாதிருக்கவும் கண்ணுண்டாயிருங்கள்.

* 15. யாதொரு வாக்குவாதமாவது, யாதொரு பொய்ப்போதகமாவது, யாதொரு துர்ப்புத்தி துர்மாதிரியாவது கசப்பான வேர்போலே உங்களுக்குள்ளே முளைத்து உங்கள் சமாதானத்தையாவது, உங்கள் விசுவாசத்தையாவது, உங்கள் புண்ணிய நடக்கையையாவது கெடுக்கத் துவக்குகிறதைக் கண்டால், அவைகளை உங்களிடத்தில் வளரவொட்டாமல் வேரோடு களைந்து, பிடுங்கி, எறிந்துபோடுங்கள் என்று அர்த்தமாம்.

16. எவனும் காமாதுரனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சிரேஷ்ட புத்திர பாத்தியத்தை விற்றுப் போட்ட ஏசாவைப்போல் இலெளகீக னாகவும் வேண்டாம். (ஆதி. 25:33.)

17. ஏனெனில் அவன் மறுபடியும் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், ஆகாதவனாகத் தள்ளுண்டு போனான் என்று அறிந்துகொள்ளுங்கள். அவன் அதை அழுகையோடு கேட்டுக் கொண்டபோதிலும், (தன் தகப்பன்) மனம் மாறுவதற்கு இடங் காணவில்லை. (ஆதி. 27:38.)

18. அல்லாமலும் ஸ்பரிசிக்கக்கூடிய மலையினிடத்திற்கும், பற்றியெரிகிற அக்கினியினிடத்திற்கும், மேக மந்தாரம், இருள், புயல் ஆகிய இவைகளிடத்திற் கும், (யாத். 19:12; 20:21.)

19. எக்காள முழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளின் சத்தத்தினிடத்திற்கும் நீங்கள் வந்து சேரவில்லை. அந்த முழக்கத்தைக் கேட்டவர்கள் அது தங்களை நோக்கிப் பேசாதபடிக்கு மிகவும் கெஞ்சினார்கள்.

20. ஏனெனில் ஒரு மிருகமாவது மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு சாகவேண்டும் என்று சொல்லப்பட்டதைத் தாங்கமாட்டாதிருந்தார்கள். (யாத். 19:12, 13.)

21. அந்தக் காட்சி அம்மாத்திரம் பயங்கரமுள்ளதாயிருந்தது. மோயீசனும்: நான் மிகவும் பயந்து நடுநடுங்குகிறேன் என்றார்.

22. நீங்களோ, சீயோன் மலையி னிடத்திற்கும், ஜீவந்தர கடவுளின் நகர மாகிய பரலோக ஜெருசலேமினிடத் திற்கும், அநேகம் ஆயிரம் ஆயிரமான தேவதூதர் கூட்டத்திற்கும், (கலாத். 4:26.)

23. முதற்பேறானவர்களாகப் பரலோகத்தில் பெயர் வரையப்பட்டவர்களின் கூட்டத்திற்கும், சமஸ்தருக்கும் நடுவராகிய கடவுளிடத்திற்கும், உத்தமரான நீதிமான்களுடைய ஆத்துமங்களிடத்திற்கும்,

* 22-23. சத்திய திருச்சபையின் இலட்சணங்கள் காணப்படுகின்றன. 1-வது. சீயோன் மலையின்மேலே கட்டப்பட்ட நகரத்துக்கு ஒப்பாய் எல்லோருடைய பார்வைக்கும் பிரசித்தமாய்க் காணப்படுகின்றது. 2-வது பரம ஜெருசலேமைப்போலே ஒன்றாகவும் பொதுவாகவும் இருக்கின்றது. 3-வது சகலமான அர்ச்சியசிஷ்டவர்களும் விளங்குகிறதால் பரிசுத்தமாயிருக்கின்றது. 4-வது மூத்தோராகிய அஸ்திவாரத்தின்மேல் ஸ்தாபிக்கப்பட் டிருக்கின்றது. 5-வது. சேசுநாதர் அதற்குத் தலைவருமாய்ப் பிரதான ஆசாரியருமாய்ப் பலியுமாயிருக்கிறார். அவருடைய இரத்தத்தினாலே திருச்சபை கழுவப்பட்டுக் கறைதிரை யில்லாததும் மாசற்றதுமான பத்தினியாகச் சர்வேசுரனுடைய சமுகத்தில் நிறுத்தப் பட்டிருக்கிறது.

24. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய சேசுவினிடத்திற்கும், ஆபே லினுடைய இரத்தத்தைப்பார்க்க அதிக நன்றாய்ப் பேசுகிற இரத்தத் தெளிப்பி னிடத்திற்கும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

25. (உங்களிடத்தில்) பேசுகிறவரை அலட்சியம்பண்ணாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே பேசினவரை அலட்சியம்பண்ணினவர்கள் தப்பிப்போகாதிருக்க, பரலோகத்தினின்று பேசுகிறவரை நாம் புறக்கணித்தால், எப்படித்தான் தப்பித்துக்கொள்வோம்?

26. அக்காலத்திலே தம்முடைய வாக்கால் பூமியை அசைத்தவர் இன்னும் ஒருதரம் பூமியைமாத்திரமல்ல, வானலோகத்தையும் அசைப்போம் என்று இப்போது வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். (ஆக். 2:7.)

27. இன்னும் ஒருதரம் என்பது அசையாப் பொருட்கள் (எந்நாளும்) நிலைபெற்றிருக்கும்படியாக, அசையும் பொருட்கள் (தற்காலத்துக்குச்) சிருஷ் டிக்கப்பட்டவைகளாகக்கொள்ள, மாறிப்போம் என்பதைக் குறிக்கின்றது.

28. ஆதலால் அசையாத இராச்சியத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் வரப்பிரசாதத்தை அடைந்து அதன் வழியாய்ப் பயத்தோடும் வணக்கத்தோடும் சர்வேசுரனுக்கு உகந்த ஊழியஞ் செய்வோமாக.

29. ஏனெனில் நம்முடைய சர்வேசுரன் சுட்டெரிக்கும் அக்கினியாயிருக்கிறார். (உபாக. 4:24.)

* 24-29. ஆபேலினுடைய இரத்தம் அதைச் சிந்தச்செய்த காயின்பேரிலே பழிவாங்க அபயமிட்டு நீதியுள்ள தண்டனையைக் கேட்டு நின்றது. ஆனால் சேசுநாதருடைய திரு இரத்தம் அதைச் சிந்துவதற்குக் காரணமாகிய சகல பாவிகளுக்காகவும் தமது பிதாவாகிய சர்வேசுரனுடைய சமுகத்தில் பொறுத்தலைக் கேட்டுக்கொண்டுவருகிறது. அத்தனை தயவாய் நமக்காக மனுப்பேசுகிற சேசுநாதருடைய திருஇரத்தத்தை நாம் புறக்கணியா திருக்கவும், அந்தத் திருச்சபையின் விசுவாசத்தை விடாதிருக்கவும் எச்சரிக்கையா யிருக்கக்கடவோம். ஏனெனில் பூவுலகத்தில் பேசினவனுடைய வார்த்தையைப் புறக் கணித்தவர்கள் சர்வேசுரனுடைய தண்டனைக்குத் தப்பவில்லையென்றால், நாம் அவருடைய திருக்குமாரனுக்குச் செவிகொடாதிருந்தால் அவருடைய கோபத்துக்கு எப்படித் தப்புவோம்? சீனாய் மலையிலே மோயீசனோடு பேசின சர்வேசுரனுடைய வாக்கு பூமியை அசையப்பண்ணினது. சேசுநாதர் நடுத்தீர்க்கவரும்போதோவெனில், அவருடைய வாக்கு பூலோகத்தையும் வானலோகத்தையும் அசைத்து இனி என்றென்றைக்கும் அசையப்படாத தம்முடைய இராச்சியத்தைப் பரலோகத்திலே ஸ்தாபிப்பார். என்றென்றைக்கும் அசையப்படாத சேசுநாதருடைய இராச்சியத்துக்குப் பங்காளிகளாயிருக்கிறதற்குத் தேவ இஷ்டப்பிரசாதத்தை அடைந்திருக்கிறோம். அதைக்கொண்டு நாம் பயத்தோடும் வணக்கத்தோடும் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ணக்கடவோம். ஏனெனில், நம்முடைய சர்வேசுரன் சுட்டெரிக்கிற அக்கினியாயிருக்கிறார். தம்முடைய கற்பனைகளை மீறத் துணிகிறவர்களை நரகாக்கினையில் அகோரமாய்த் தண்டித்து அதில் சுட்டெரிப்பார். தம்மைச் சிநேகித்துச் சேவிக்கிறவர்களைத் தம்முடைய சிநேக அக்கினிச் சூளையாகிய மோட்சத்தில் என்றென்றைக்கும் ஆனந்த அக்களிப்பால் எரியப்பண்ணுவார் என்றர்த்தமாம்.