ரோஜா மலர் 12. பரலோக மந்திரம்

பரலோக மந்திரம் அல்லது கர்த்தர் கற்பித்த ஜெபம் மகிவும் விலையேறப் பெற்றது. இதற்குத் தலைசிறந்த காரணம், இச்செபத்தை இயற்றியது ஒரு மனிதனோ அல்லது சம்மனசோ அல்ல, சம்மனசுகளுக்கும் மனிதர்களுக்கும் அரசரான நமதாண்டவரும் இரட்சகருமான சேசு கிறிஸ்துவே அதை இயற்றியவர். வரப்பிரசாதம் வாழ்வுக்கு நம்மை மீண்டும் பிறப்பித்த நம் மீட்பரே நமக்கு ஆசிரியராயுமிருந்து நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று கற்றுத் தருவது பொருத்தமானது என அர்ச். சிப்ரியான் கூறியுள்ளார்.

இத்தெய்வீக ஜெபத்தில் நாம் காணும் அழகிய வரிசை முறை. அதன் கனிந்த வற்புறுத்தல், அதன் தெளிவு ஆகியவை நமதாண்டவரின் ஞானத்துக்கு ஒரு மதிப்புரையாக உள்ளன. இச்செபம் சுருக்கமானது. ஆனால் நமக்கு எவ்வளவோ கற்றுத்தரக் கூடியது. கல்வியறிவில்லா தவர்களும் கண்டுபிடிக்க கூடியது. கற்றவர்களுக்கு இச்ஜெபம் நம் திருமறையின் உண்மைகளை ஆழ்ந்து சிந்திக்க ஒரு நிரந்தர ஊற்றாக இருக்கின்றது.

கடவுளுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை யெல்லாம் தன்னுள் கொண்டிருக்கின்றது இச்செபம். எல்லா புண்ணிய கிரிகைகளையும் உட்பொதிந்துள்ளது. நமது ஆன்ம சரீரத் தேவைகளுக்கான எல்லா மன்றாட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டின் சுருக்கம் பரலோக மந்திரம் என்று கூறியுள்ளார் தெர்த் துல்லியன். தாமஸ் அகெம்பிள் என்பவர் கூறுகிறார்: பரலோக மந்திரம் எல்லா அர்சிஷ்டவர்களின் எல்லா விருப்பங்களையும் விட மேம்பட்டிருக்கின்றது. தாவீதரசனின் சங்கீதங்களிலும் உன்னத சங்கீதத்திலும் கூறப்படும் எல்லா அழகிய வாசகங்களும் சுருக்கமாக அமைந்துள்ளது. அதிலே நமக்கு அவசியமான எல்லாவற்றையும் இறைவனிடம் மன்றாடுகிறோம். அதை ஜெபிப்பதனால் ஆண்டவரை நாம் மிகவும் உயரிய முறையில் வாழ்த்துகிறோம். அதன் மூலமாக நாம் நம் ஆத்துமங்களை பரலோகத்தை நோக்கி எழுப்பி இறைவனுடன் ஒன்றிருக்கிறோம்.

நமது ஆண்டவரின் சீடர்களாயிருக்க வேண்டுமானால் அவர் எப்படி ஜெபித்தாரோ அப்படியே நாமும் ஜெபிக்க வேண்டும். அவர் ஜெபிப்பதற்கு எந்த வழியைக் கைக்கொண்டாரோ அதே வழியை நாமும் கைக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய சீடர்களாயிருக்க முடியாது என்று புனித கிறிசோஸ்தோம் அருளப்பர் உரைக்கின்றார். மேலும் குறைபாடுகளுடன் நம் சொந்த முறையில் நாம் செய்யும் ஜெபங்களை விட, தமது திருக்குமாரனிடம் நாம் கற்ற ஜெபத்தை பரம பிதா அதிக விருப்பத்தோடு கேட்கின்றார்.

நாம் பரலோக மந்திரத்தை ஜெபிக்கும்போது, நித்தியபிதா அதைக் கேட்கிறார் என்ற நிச்சயத்தோடு ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் அது இறைவன் எப்பொழுதும் செவிமடுக்கின்ற அவரது திருக்குமாரனின் ஜெபம். நாமோ அவருடைய அங்கங்களாயிருக்கிறோம். பரலோக மந்திரத்தை ஜெபித்து நாம் கேட்கிற மன்றாட்டுக்களை இறைவன் திட்டமாக நமக்கு அருள்வார். ஏனென்றால், இத்தகைய நல்ல பிதா இத்தனை தகுதியுள்ள தம் குமாரனின் சொந்த வார்த்தைகளில் செய்யப்படுகிறதும், அவருடைய பேறு பலன்களால் வலிமை பெற்றதும், அவருடைய பெயரால் செய்யப்படுவதுமாகிய மன்றாட்டை மறுப்பார் என்று நினைக்கக்கூட முடியாது.

கர்த்தர் கற்பித்த ஜெபத்தை நாம் பற்றுதலுடன் சொல்லும் போதெல்லாம் நம் அற்ப பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று அர்ச். அகுஸ்தீன் கூறுகிறார். நீதிமான் ஒரு நாளில் ஏழு முறை தவறுகிறான். ஆனால் அவன் பரலோக மந்திரத்தில் ஏழு விண்ணப்பங்களை காண்கிறான். இவை அவன் தவறி விழாதிருக்கும்படி உதவுகின்றன என்பதையும், அவனுடைய ஆன்ம எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன என்பதையும் உணர்கின்றான். நாம் எவ்வளவு பலமற்றவர்கள் என்றும் எத்தனை இடையூறுகளில் சிக்குகிறோம் என்றும் அறிந்து நமதாண்டவர், தாம் கற்பித்த இச்செபத்தை சொல்வதற்கு எளிதாகவும் சுருக்கமானதாகவும் இயற்றி, நாம் அதைப் பக்தியுடனும் அடிக்கடியும் சொல்வோமானால் எல்லாம் வல்ல இறைவன் விரைவாக நம் உதவிக்கு வருவார் என்பதில் நிச்சயமாயிருக்குமாறு செய்துள்ளார்.

தேவகுமாரனே நமக்குக் கற்றுத்த தந்து ஜெபிக்கும்படி கூறிய பரலோக மந்திரத்தில் கவனஞ் செலுத்தாத பக்தியுள்ள மக்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் உங்கள் கருத்தை உடனே திருத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் மனிதர்களால் இயற்றப்பட்ட ஜெபங்களைத் தான் விரும்புகிறீர்கள். உலகத்தில் ஞான உணர்வு பெற்ற எந்த மனிதனும் நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று, ஆண்டவரான சேசு கிறிஸ்துவை விட அதிகம் அறிந்திருக்க முடியும் என்பது போலல்லவா நீங்கள் நினைக்கிறீர்கள் ! மனிதர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில் நீங்கள் ஜெபங்களைத் தேடுகிறீர்கள். இது எப்படியிருக்கிற தென்றால், நம் ஆண்டவர் சொல்லித் தந்த ஜெபத்தைக் கண்டு நீங்கள் கொஞ்சம் வெட்கப்படுவதைப் போலல்லவா தோன்றுகிறது.
இப்படி, மனிதரால் எழுதப்பட்ட ஜெபங்கள் கற்றவர்களுக்கும் உயர்குல் செல்வந்தர்களுக்கும் உரிய தென்றும் ஜெபமாலை பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும்தான் உரியது என்றும் நீங்கள் எப்படியோ உங்களுக்கே நிச்சயித்து விட்டீர்கள்.

நீங்கள் இப்புத்தகங்களில் வாசிக்கிற ஜெபங்களும் புகழ் மாலைகளும் ஆண்டவர் கற்பித்த ஜெபங்களை விட அதிக அழகாயும் இறைவனுக்கு விருப்பமாயும் இருக்க முடியும் போலும்! நமதாண்டவர் நமக்குத் தந்த ஜெபத்தில் பிடிப்பு இழந்து மனிதர் எழுதியுள்ள ஜெபங்களில் பற்றுக் கொள்வது மிக ஆபத்துள்ள ஒரு சோதனையாகும்.

இறைவனைப் புகழும்படி விசுவாசிகளை ஊக்கப்படுத்துவதற்காக புனிதர்கள் எழுதித் தந்த ஜெபங்களை நான் ஆதரிக்கவில்லை என்றல்ல தேவ ஞானத்தின் அவதாரமானவரே உச்சரித்த ஜெபத்தைவிட அவைகளைப் பெரிதாகக் கொள்வது அனுமதிக்க முடியாத ஒன்று. கர்த்தர் படிப்பித்த ஜெபத்தை அவர்கள் புறத்தே ஒதுக்குவார்களானால் தண்ணீர் சுரக்கும் ஊற்றை விட்டு விட்டு, ஓடை நீரைத் தேடுவது போலும் சுத்த நீரைப் பருகாமல் அசுத்த நீரைப் பருகுவது போலும் இருக்கும்! ஏனென்றால் ஆண்டவரின் ஜெபத்தாலும் சம்மனசு கூறிய மங்கள வார்த்தையாலும் ஆக்கப்பட்ட ஜெபமாலை அருட் சுனையிலிருந்து பொங்கி வரும் தெள்ளிய நீராயிருக்கின்றது. இதர புத்தகங்களிலிருந்து மக்கள் தேடும் ஜெபங்கள் அந்த சுனையிலிருந்து புறப்படும் சிறு நீரோடைகளாக இருக்கின்றன.

பரலோக மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்து சிந்தித்து ஜெபிக்கிறவர்கள் தங்களையே பாக்கியவான்கள் என்று கூறலாம். ஏனென்றால் அதிலே அவர்கள் தங்களுக்குத் தேவையுள்ள யாவற்றையும் தாங்கள் விரும்பும் எல்லாவற்றையும் கண்டு கொள்வார்கள்.

இவ்வசதியான ஜெபத்தைச் சொல்லத் துவக்கும் போதே தந்தை என்னும் இனிய பெயரால் இறைவனை எங்கள் பிதாவே என்று அழைத்து அவருடைய இருதயத்தை தொட்டு விடுகிறோம். அவரே எல்லாத் தகப்பன்மாரையும் விட அதிக அன்புள்ள தந்தை. சிருஷ்டிப்பிலே அவர் சர்வ வல்லவர். உலகை நடத்தி வருவதில் மிக்க வியப்புக்குரியவர். அவருடைய தெய்வீக பராமரிப்பைப் பார்க்கையில் முற்றும் நேசத்திற்குரியவர். எப்போதும் நல்லவர். இரட்சிப்பிலே அவர் அளவற்ற நன்மைத்தனம் உள்ளவர். கடவுளை நாம் நம் தந்தையாக கொண்டிருக்கிறோம். எனவே ஒருவருக்கொருவர் நாம் சகோதரர்களாயிருக்கிறோம். மோட்சமே நம் சொந்த வீடு, உரிமைச் சொத்து. இந்த உண்மைகளே நாம் கடவுளை நேசிக்கவும், பிறரை நேசிக்கவும், இவ்வுலக பொருட்களிலிருந்து விடுபடவும் நமக்குக் கற்றுத்தர போதுமானவை.

ஆதலால் நாம் நம் பரலோக தந்தையை நேசிக்க வேண்டும். அவரிடம் திரும்பவும், திரும்பவும் இவ்வாறு கூற வேண்டும்.

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே! 

உம்முடைய மட்டற்ற மாபெரும் இருத்தலினால் பரலோகத்தையும் பூலோகத்தையும் நிரப்பியிருப்பவரே! எங்கும் பிரசன்னமாயிருப்பவரே! உமது மகிமையினால் அர்ச்சிஷ்டவர்களில் இருக்கின்றீர். உமது நீதியினால் தீர்ப்பிடப்பட்டவர்களில் இருக்கின்றீர். உமது அருளினால் நல்லவர்களிலும் உமது பொறுமையினால் பாவிகளிடத்திலும் இருக்கிறீர்.

பொறுமையினால் அவர்களைச் சகித்துக் கொள்கின்றீர். உம்மிடமிருந்தே நாங்கள் வருகிறோம் என்பதை எப்பொழுதும் எங்கள் நினைவில் கொண்டிருக்க எங்களுக்கு அளுமாறு உம்மை வேண்டுகிறோம். உம்முடைய உண்மையான பிள்ளைகள் எப்படி வாழ வேண்டுமோ அப்படி நாங்கள் வாழச் செய்தருளும். நாங்கள் நடக்கும் பாதை உம்மை நோக்கியதாயிருக்கச் செய்யும். அதிலிருந்து ஒருபோதும் வழுவாதிருக்கச் செய்வீராக. எங்கள் எல்லா சக்திகளையும் எங்கள் இருதயம் ஆன்மா எங்கள் பலம் யாவற்றையும் உம்மை நோக்கியிருக்கச் செய்தருளும். அவை உம்மை மட்டுமே நோக்கியிருக்கச் செய்வீராக.

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக!

தீர்க்கதரிசியான தாவீதரசன் கூறினார்: ஆண்டவரின் திருநாமம் புனிதமானதும் அச்சம் விளைவிப்பதும் என்று. தளங்களின் ஆண்டவரான கடவுளின் பரிசுத்தத்னத்தை செராபிம் வானவர்கள் இடைவிடாமல் புகழும் புகழ் ஒலியால் வானுலகம் எப்பொழுதும் எதிரொலிப்பதாக என்று இசையாஸ் உரைத்தார். இத்தனை பெரிய பரிசுத்தரான நம் இறைவனின் குண இலட்சணங்களை எல்லா உலகமும் அறிந்து ஆராதிக்க வேண்டுமென்று நாம் இவ்விடத்தில் மன்றாடுகிறோம். உண்மைக் கடவுளை அறியாத அனைவராலும் அவர் அறிந்து நேசிக்கப்பட வேண்டுமென்று கேட்கிறோம். எல்லா மாந்தரும் தவறான கொள்கைகளை விட்டு விட்டு உயிருள்ள விசுவாசத்தோடும் திடமுள்ள நம்பிக்கையோடும் பற்றி எரியும் அன்போடும் அவருக்குப் பணி புரிந்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று மன்றாடுகிறோம். மொத்தத்தில் நம் இறைவன் பரிசுத்தராயிருப்பதால் எல்லா மனிதர்களும் பரிசுத்தர்களாயிருக்கும்படி வேண்டுகிறோம்.

உம்முடைய இராச்சியம் வருக!

மரணத்துக்குப்பின் முடிவற்ற உத்தம பேரின்பத்தில் உமது அரசில் உம்முடன் நாங்களும் ஆட்சி புரியத் தகுதியுடையவர்கள் ஆகுமாறு உமது அருளால் எங்கள் ஆன்மாக்களில் நீர் ஆட்சி புரிவீராக! ஆண்டவரே! வரவிருக்கும் இப்பேரின்பத்தை நாங்கள் விசுவசித்து ஏற்கிறோம். அதை நம்பி எதிர் பார்த்திருக்கிறோம் ஏனென்றால் பிதாவான சர்வேசுரன் தமது பெரும் நன்மைத்தனத்தால் அதை எங்களுக்கு வாக்களித்துள்ளார். சுதனாகிய சர்வேசுரன் அதை எங்களுக்கு வாங்கித் தந்துள்ளார். ஒளியாயிருக்கும் பரிசுத்த ஆவியான சர்வேசுரன் அதை எங்களுக்கு வெளிப்படுத்தினார்.

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக!

தெர்த் துல்லியன் சொல்வது போல் இவ்வாக்கியத்தினால் கடவுளுடைய திட்டங்களை யாரும் உடைத்து விடுவார்களோ என்று நாம் பயப்படுவதாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் கடவுளின் பராமரிப்பால் முன்னறியப்பட்டு அவருடைய திட்டங்களுக்குள் முன் கூட்டியே பொருத்தப்படாத எதுவும் நடைபெறவே முடியாது. இறைவனின் சித்தம் நிறைவேறப்படாமல் தடை செய்ய உலகில் எதனாலும் முடியாது.

எனவே, உம்முடைய சித்தம் நடைபெறும் என்னும் போது, இவ்வாழ்வில் இறைவன் நமக்கு என்னென்ன அனுப்பத்தகும் என்று சித்தம் கொண்டுள்ளாரோ அவற்றையெல்லாம் நாம் தாழ்மையுடன் அமைந்த மனதோடு ஏற்றுக் கொள்ளும்படி அவர் அருள் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். மேலும் இறைவனின் திருச்சித்தத்தை எப்பொழுதும் எல்லாவற்றிலும் செய்ய உதவியையும் கேட்கின்றோம். அவருடைய சித்தம் அவருடைய கட்டளைகளில் வெளியாக்கப்பட்டுள்ளது. அச்சித்தத்தைப் பிரமாணிக்கத்துடனும், தாமதமின்றியும், அன்புடனும் விண்ணுலக சம்ம மனசுக்களும் அர்ச்சிஷ்டவர்களும் நிறைவேற்றுகிறது போல நாமும் நிறைவேற்ற மன்றாடுகிறோம்.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்

ஞானத் துறையிலும் லெளகீகத் துறையிலும் நமக்கு வேண்டிய யாவற்றையும் நாம் கடவுளிடம் கேட்க வேண்டும் என்று நமதாண்டவர் நமக்கு கற்றுத் தந்துள்ளார். நம் அனுதின உணவை அவரிடம் கேட்கிறோம். இதனால் நமது வறுமையையும் போதாத் தன்மையையும் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு கடவுளுக்கு மகிமையளிக்கிறோம். அவருடைய தெய்வீக பராமரிப்பினால் இவ்வுலக நலன்கள் யாவும் வருகின்றன என்று அறிந்து அவரை வாழ்த்துகிறோம்.

'உணவை' என்கிறோம். அதாவது வாழ்வதற்குத் தேவையானதை அவ்வாறு குறிப்பிடுகிறோம். செல்வச் செழிப்பை அல்ல. இவ்வுணவை 'இன்று அளித்தருளும் என்கிறோம். அதாவது நாம் தற்சமயத்தைப் பற்றி மட்டுமே நினைக்கிறோம். மறுநாளைப் பற்றிய கவலையை அவருடைய பராமரிப்பில் விட்டுவிடுகிறோம்.

எங்கள் 'அனுதின உணவை என்று சொல்லும்போது நாம் கடவுளுடைய உதவியை ஒவ்வொரு நாளும் நாடியிருக்கிறோம் என்றும், நம் பாதுகாப்பையும் உதவியையும் முழுவதும் அவரிடமே தேடி அவரிலேயே ஊன்றி நிற்கிறோம் என்றும் ஒப்புக் கொள்கிறோம்.

எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

நாம் செய்யும் ஒவ்வொரு பாவமும் எல்லாம் வல்ல சரவேசுரனுக்கு நம்மை கடனாளியாக்குகிறது என்றும் அவரின் நீதிப்படி நாம் கடைசிக் காசு வரை உத்தரித்தே தீர வேண்டும் என்றும் அர்ச். அகுஸ்தீனும், தெர்த் துல்லியன் என்பவரும் கூறியுள்ளார்கள். நாம் எல்லாருமே இத்தகைய கடனாளியாக இருக்கிறோம். நம் கடன் எவ்வளவு இருந்தாலும் நாம் நம்பிக்கையுடனும் உண்மையான துக்கத்துடனும் சர்வேசுரனிடம் செல்ல வேண்டும். சென்று 'பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, எங்கள் நினைவாலும், சொல்லாலும் நாங்கள் புரிந்த பாவங்களையும் எங்கள் செயலாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டதாலும் நாங்கள் கட்டிக் கொண்ட பாவங்களையும் மன்னித்தருளும். இவைகள் எங்களை உம்முடைய பார்வையில் அளவற்ற முறையில் குற்றவாளிகளாக்குகின்றன என்று சொல்ல வேண்டும்.

எங்களை சோதனைகளுக்குள் விழவிடாதேயும்

இவ்வாறு உம்மிடம் நாங்கள் கேட்கத் துணிகிறோம். ஏனென்றால், நீர் அன்பும் இரக்கமுமுள்ள எங்கள் தந்தையாக இருக்கின்றீர். எங்களுக்கு தீமை செய்தவர்களை அன்பினாலும், உமக்குக் கீழ்ப்படியும் எண்ணத்தோடும் நாங்கள் மன்னித்து விட்டோம். உமது வரப்பிரசாதத்துக்கு நாங்கள் பிரமாணிக்கமற்றவர்களாயிருந்த போதிலும் எங்களை இவ்வுலகம், பசாசு, சரீரம் ஆகியவற்றினுடைய சோதனைகளுக்குள் விழவிடாதேயும்' என்று கூற வேண்டும்.

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்

பாவத்தின் தீமை அநித்திய தண்டனை, நித்திய தண்டனை, இவைகள் நமக்குத் தகும் என்று நாம் அறிவோம். இவற்றிலிருந்து விடுதலை பெறக் கேட்கிறோம்.

ஆமென் (அப்படியே ஆகும்)

பரலோக மந்திரத்தின் முடிவில் இந்த வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் ஆறுதலான ஒன்று. நம் மன்றாட்டுக்களைத் தாம் தருவதாக சர்வேசுரன் ஆமோதிப்பதன் ஒரு முத்திரை போல் அது உள்ளது என்று அர்ச். ஜெரோம் கூறுகிறார். எல்லாம் வல்ல சர்வேசுரனே இவ்வாறு கூறுவது போல் ஆமென். நீ கேட்டபடியே உனக்கு நடைபெறட்டும். நீ கேட்டவற்றை உண்மையாகவே நீ அடைந்து விட்டாய்' இதுவே ஆமென் என்பதின் அர்த்தம்.