ரோஜா மலர் 11. விசுவாசப் பிரமாணம்

ஜபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில் விசுவாச மந்திரம் அல்லது அப்போஸ்தலர்களின் விசுவாச உச்சாரணம் சொல்லப்படுகிறது. இது எல்லா கிறிஸ்தவ உண்மைகளின் சுருக்கமாகும். விசுவாச மந்திரம் ஒரு ஜெபம்; மிகவும் பலனுள்ள ஜெபம். ஏனென்றால் கிறிஸ்தவப் புண்ணியங்கள் யாவற்றிற்கும் இறைவனுக்குப் பிரியமான எல்லா மன்றாட்டுகளுக்கும் வேரும் அடித்தளமும் ஆரம்பமும் அதுவே. கடவுளிடம் வருகிறவன். 'விசுவசிக்க வேண்டும். (எபி. 11:6) யார் யார் கடவுளிடம் வர விரும்புகிறார்களோ அவர்கள் முதன் முதலாக விசுவாசம் கொள்ள வேண்டும். ஒருவனுடைய விசுவாசம் எவ்வளவிற்கு அதிகமாக உள்ளதோ அவ்வளவிற்கு அவனுடைய ஜெபங்களின் பலனும், அந்த ஜெபங்களின் வலிமையும் இருக்கும். அந்த விசுவாசத்தின் அளவிற்கு அவனுடைய ஜெபம் சர்வேசுரனுக்கு மகிமையாயிருக்கும்.

விசுவாச மந்திரத்தை வார்த்தை வார்த்தையாக எடுத்து இங்கு நான் விளக்கப் போவதில்லை . ஆனால் 'சர்வேசுரனை விசுவசிக்கிறேன்' என்று அதன் ஆரம்பத்தில் சொல்கிறோமே, அந்த ஓரிரு வார்த்தைகள் நம் ஆபத்தை அர்ச்சிக்கவும் அலகையை விரட்டவும் ஆச்சரியமான வலிமை பெற்றுள்ளன என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் இவ்விரு வார்த்தைகளும் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்னும் தேவ சம்பந்தமான புண்ணியங்கள் மூன்றையும் தம்முள் கொண்டிருக்கின்றன.

'சர்வேசுரனை விசுவசிக்கிறேன்' என்று கூறித்தான் அர்ச்சிஷ்டவர்கள் சோதனைகளை வென்றார்கள். குறிப்பாக விசுவாசம், நம்பிக்கை , தேவசிநேகம் இவற்றிற்கு எதிராய் அவர்களுடைய வாழ்விலோ அல்லது மரண சமயத்திலோ ஏற்பட்ட சோதனைகளை அவர்கள் வென்றார்கள். வேதசாட்சியான அர்ச். வெரொனா இராயப்பரின் இறுதி வார்த்தைகள் 'சர்வேசுரனை விசுவசிக்கிறேன்' என்பவைதான். ஒரு கொடிய பதிதன் தன் வாளால் அவருடைய தலையை இரண்டாய் வெட்டி விட்டான். தம் இறுதி மூச்சை விடுமுன் இவர் எப்படியோ சமாளித்து இவ்வார்த்தைகளை மண்ணில் தம் விரலால் எழுதி விட்டு இறந்தார்.

சேசுவையும் மாதாவையும் பற்றிய அநேக பரம இரகசியங்கள் ஜெபமாலையில் உள்ளன. இவற்றை நமக்குத் திறந்து தருவது விசுவாசமேயாம்! விசுவாச மந்திரத்தை மிகப் பக்தியுடன் சொல்லி ஜெபமாலையை நாம் ஆரம்பிக்க வேண்டும். நம் விசுவாசம் எவ்வளவு உறுதியுள்ளதாயிருக் கிறதோ அவ்வளவிறகு ஜெபமாலை பயனுள்ளதாகும்.

இந்த விசுவாசம் உயிருள்ளதாகவும் தேவ அன்பினால் தூண்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். வேறு வகையாய் சொன்னால், ஜெபமாலையைத் தகுந்த முறையில் சொல்வதற்கு தேவ வரப்பிரசாதமிருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் அவ்வருளை நாடும் நிலையிலாவது இருக்க வேண்டும். இவ்விசுவாசம் வலுவுள்ளதாயும் நீங்காததாயும் இருக்க வேண்டும். அதாவது, நாம் பக்தி உணர்ச்சியையும் ஞான ஆறுதலையும் ஜெபமாலையில் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. மனதில் நம் சம்மதம் இல்லாமல் தவிர்க்க முடியாத எண்ணற்ற பராக்குகள் நேரிடுவதைக் கண்டு ஜெபமாலையை விட்டு விடவும் கூடாது. ஆன்மாவில் ஒரு விநோதமான எரிச்சலும் உடலில் ஏறக்குறைய எப்போதும் ஒருவித நெருக்கிடைதரும் சோர்வும் ஏற்பட்டாலும் ஜெபமாலை சொல்வதை விட்டுவிடலாகாது. ஜெபமாலை செய்வதற்கு உணர்ச்சி வசப்படுதலோ, ஆறுதலோ, பெருமூச்சோ, ஞான பரவசமோ, ஒருக்காலும் மாறுபடாத மன ஒருமைப்பாடோ தேவையில்லை. விசுவாசமும் நல்ல நோக்கமுமே போதும். 'விசுவாசமே போதுமானது.