இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 10

எஜிப்த்தில் வெட்டுக்கிளிகளின் வாதையும் - இருளின் வாதையும். 

1-2. பின்பு கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ பரவோனிடத்துக்குப் போ. ஏனெனில் நாம் அவன்மட்டிலே நமது வல்லபத்தின் அடையாளங்களைச் செய்யத்தக்கதாகவும் நாம் அத்தனை விசை எஜிப்த்தியரை நொறுங்கவடித்து அவர்களின் நடுவே நமது அற்புதாதிசயங்களை நடப்பித்த சரித்திரத்தை நீ உன் பிள்ளைகளுக்கும் உன் பேரப் பிள்ளைகளுக்கும் விவரித்துச் சொல்லத்தக்கதாகவும், நீங்கள் நம்மைக் கர்த்தரென்று கண்டுபிடிக்கத் தக்கதாகவுந்தானே, நாம் பரவோனுடைய மனதையும், அவன் ஊழியர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினோம் என்றருளினார்.

3. ஆகையால் மோயீசனும் ஆரோனும் பரவோனிடத்தில் போய் அவனை நோக்கி: எபிறேயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நீ எந்தமட்டும் நமக்குக் கீழ்ப்படியமாட்டாய்? நம் பிரஜையை நமக்குப் பலியிடும்படி போகவிடு.

4. நீ முரண்டி ஜனங்களை அனுப்பிவிட மாட்டேனென்பாயாகில், இதோ நாம் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக் கிளிகளை வரப்பண்ணுவோம். 

5. தரைகாணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய மீதியானவையெல்லாம் பட்சிக்கும்,  உள்ளபடி அவைகள் வெளியிலே தளிர்க்கிற தருக்களையெல்லாந் தின்றுபோடும். 

6. அன்றியும் உன் வீடுகளும் உன் ஊழியருடைய வீடுகளும் எஜிப்த்தியருடைய சகல வீடுகளும் அவைகளாலே நிரம்பும். உன் பிதாக்களும் முன்னோர்களும் பூமியில் தோ ன்றின நாள் முதல் இந்நாள் பரியந்தம் அப் படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று மோயீசன் சொல்லித் திரும்பிப் பரவோனை விட்டுப் புறப்பட்டான்.

7. அப்பொழுது பரவோனுடைய ஊழி யர்கள் அவனை நோக்கி: நாம் எந்தமட்டும் இந்தச் சல்லியஞ் சகிக்கவேண்டும்? அந்த மனிதர்களைத் தங்கள் தேவனாகிய கர்த்தருக் குப் பலியிடப் போகவிடும், எஜிப்த்து தேசம் நாசமாயிற்றென்று தாங்கள் இன்னும் கண்டறியவில்லையா என்றார்கள்.

8. பிறகு மோயீசனையும் ஆரோனையும் பரவோனிடத்திற்கு மீண்டும் வரவழைத் தார்கள். இவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுங்கள். (ஆனால்) போகவிருக்கிறவர் கள் யார்,யார் என்று சொல்லுங்கள் என்றான்.

9. அதற்கு மோயீசன்: எங்கள் இளைஞ ரோடும் முதியரோடுங் குமாரர் குமாரத்தி களோடும் எங்கள் ஆடு மாடுகளையும் கூட்டிக் கொண்டு போவோம். ஏனெனில் நாங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பண்டிகையைக் கொண்டாட வேண்டுமென்றான்.

10. பரவோன் இதற்கு மாறுத்தாரமாக: உங்களையும் உங்கள் சிறுபிள்ளைகளையும் நான் எவ்விதமாய் விடுவேனோ அவ்விதமே ஆண்டவர் உங்களோடிருப்பாராக! நீங்கள் மிகவும் கெட்ட எண்ணங்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்குச் சந்தேகப்படுவது யார்?

* 10-ம் வசனம். இங்கே பரவோன் அவர்களை இகழ்ந்து பேசுகிறான்.

11. அப்படியே நடவாது, ஆனால் புருஷராகிய நீங்கள் மட்டும் போய்க் கர்த்தருக்குப் பலியிடுங்கள், நீங்கள் விரும்பிக் கேட்டது இதுதான் அன்றோ? என்றான். அவர்கள் அக்ஷகணமே பரவோனின் சந்நிதியினின்று துரத்திவிடப்பட்டார்கள்.

12. அப்பொழுது ஆண்டவர் மோயீசனை நோக்கி: வெட்டுக்கிளிகள் எஜிப்த்து தேசத்தின் மேல் வந்து ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய மீதியான எவ்வகைப்பட்ட புல்லும் பயிரும் பட்சிக்கும்படிக்கு நீ எஜிப்த்து தேசத்தின்மேலே உன் கையை நீட்டென்றார்.

13. அப்படியே மோயீசன் எஜிப்த்து தேசத்தின்மீது தன் கோலை நீட்டினான். அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுவதுமே அதி உஷ்ணமான காற்றை அடிக்கச் செய்தார். விடியற்காலத்திலே அவ்விதக் காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.

14. அவைகள் எஜிப்த்து தேசமெங்கும் பரம்பி, எஜிப்த்தியருடைய எல்லைகளுக்குள் எவ்விடத்திலும் ஏராளமாய் வந்திறங்கின. அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் இதற்கு முன் இருந்ததுமில்லை. இனிமேல் இருக்கப் போவதுமில்லை.

15. அவைகள் பூமியின் முகம் முழுவ தையும் மூடி, எல்லாவற்றையும் அழித்துப் புல் பூண்டு பயிர்களையும், ஆலங்கட்டி மழைக்குத் தப்பி மிஞ்சிய மரங்களின் (கனிகளையும்) பட்சித்தன. எஜிப்த்து தேசமெங்குமுள்ள விருட்சங்களிலாவது நிலப் புல் பூண்டுகளிலாவது ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.

16. இதினிமித்தம் பரவோன் மோயீச னையும் ஆரோனையும் தீவிரமாய் வரவழை த்து: நான் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாய்ப் பாவஞ் செய்தேனே!

17. ஆனால் நீங்கள் இன்னும் இந்த முறை யிலும் என் குற்றத்தை மன்னித்துக் கொ ண்டு, இந்த மரண அவஸ்தையினின்று என்னை இரட்சிக்கும்படி உங்கள் தேவனாகிய ஆண்டவரைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்க ளென்றான்.

18. மோயீசன் பரவோனுடைய சந்நிதி யை விட்டும் புறப்பட்டு ஆண்டவரை மன் றாடினான்.

19. அவர் அதியுக்கிரமமான மேற்காற்றை வீசப்பண்ணினார்; அக்காற்றானது, வெட் டுக்கிளிகளை வாரி செங்கடலில் தள்ளிவிட்டது. எஜிப்த்தியருடைய எல்லா எல்லைகளிலும் ஒன்றாகிலும் நிற்கவில்லை.

20. ஆனால் கர்த்தர் பரவோனுடைய நெஞ்சைக் கடினப்படுத்தினதினாலே அவன் இஸ்றாயேல் புத்திரரை அனுப்பிவிட்டா னில்லை.

21. அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: உன் கையை வானத்தின் முகத் தே நீட்டுவாயாக. அதினால் ஸ்பரிசிக்கத் தக்கதான அந்தகாரம் எஜிப்த்துதேசத்திலே உண்டாகக் கடவது என்றருளினார்.

22. அவ்விதமாய் மோயீசன் வானத்தின் முகத்தே கையை நீட்ட எஜிப்த்து தேச முற்றிலும் மூன்று நாளாய் அகோரமான காரிருள் உண்டாயிற்று.

23. தன் சகோதரனை எந்தச் சகோதரனுங் கண்டதில்லை. தான் இருந்த இடத்தினின்று எவனும் அசையவில்லை: ஆனால் இஸ்றாயேல் புத்திரர் எவ்விடத்தில் குடியிருந்தார்களோ, அந்த வாசஸ்தலங்களிளெல்லாம் வெளிச்சமிருந்தது.

24. அப்போது பரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து, நீங்கள் போய்க் கர்த்தருக்குப் பலியிடுங்கள். உங்கள் ஆடு மாடுகள் மாத்திரம் நிற்கட்டும். உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாமென்று அவர்களுக்குச் சொல்ல,

25. மோயீசன்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலிகளாகவும் தகனங்களாகவும் படைக்கவேண்டிய ஜீவ ஜெந்துக்களையும் எங்கட்குத் தாங்கள் தரவேண்டும்.

26. சமஸ்த மந்தைகளும் எங்களோடே கூட வரும், அவைகளின் ஒரு குளம்பு முத லாய்ப் பிறகாலே நிற்காது. அவைகள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆராதனைக்கு அவசியமாம். அல்லாமலும் நாங்கள் அவ்விடத்தில் சேருமளவும் இன்னதைப் பலியிட வேண்டுமென்று அறியோம் என் றான்.

27. ஆனால் கர்த்தர் பரவோனுடைய நெஞ்சைக் கடினப்படுத்திவிட்டமையால், அவன் அவர்களைப் போகவிடச் சம்மதிக்க வில்லை.

28. அப்போது பரவோன் மோயீசனை நோக்கி: நீ என்னை விட்டகன்று போ; இனி என் முகத்தில் விழிக்காதபடி எச்சரிக்கையாயிரு. எந்நாளிலே நீ எனக்குத் தென் பட்டாயோ அந்நாளிலே சாவாயென்றான்.

29. மோயீசன்: நீர் சொல்லியபடியே ஆகும், இனி நான் உம் முகத்தைக் காண்பதில்லை என்றான்.