நாள் 1, தியானம் 4, ஆத்தும இரட்சணிய அலுவலில் காலதாமதம் மகா மோசம் - இரண்டாம் பாகம்

சர்வேசுரன் கொடுக்கும் உதவியாகிற தேவாநுக்கிரகம் எந்த நல்ல காரியமும் செய்யும்படி மகா அவசியம். அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் சொல்லுவது போல தேவாநுக்கிரக உதவியின்றி நாம் சேசுநாதருடைய திருநாமத்தை முதலாய் தக்க வகையாய் உச்சரிக்க முடியாது (1 கொரி. 12:3).

இது எப்படியெனில், உலக கவலையில் அமிழ்ந்தி, பாவ வலையில் சிக்கி, துர் இச்சைகளுக்கு அடிமையாய், துர்ப் பழக்கங்களென்னும் சங்கிலிகளால் கட்டப்பட்டு கிடக்கும் பாவி தன் பாவத்தை விட்டு மனந்திரும்புவதற்கு சர்வேசுரனுடைய உதவி , அதுவும் விசேஷித்த உதவி, அவசியமென்பது நிச்சயமான சத்தியம். நாமின்றி உங்களால் நன்மையானதெதுவும் செய்ய இயலாதென்று சேசுநாதரே சொல்லியிருக்கிறார் (அரு. 15:5). பறவை உயர எழும்பிப் பறப்பதற்கு எப்படி ஆகாயம் அவசியமோ, அப்படியே மனிதனும் இந்தப் பூலோக சம்பந்த கவலையிலிருந்து சர்வேசுரனிடம் எழுந்து செல்ல வேண்டுமானால் அவனுக்கு தேவாநுக்கிரக உதவி அவசியம்.

இவ்விதம் மனிதனுக்கு அவசியமான அநுக்கிரக உதவியைச் சர்வேசுரன் கொடுக்கச் சித்தமாயிருக்கிறாரென்பது மெய்தான். ஆனால் இந்த உதவியைச் சர்வேசுரன் தமது தேவ ஞானத்தின் கிரம் ஒழுங்குக்கு விரோதமாய்க் கொடுப்பாரோ? அப்படியானால், யாதொருவன் தனக்கு சர்வேசுரன் உதவி செய்வாரென்று நம்பி , பாவ வழியில் பயமின்றி நடப்பானாகில், அப்படிப் பாவஞ்செய்து தம்மை நிந்திக்கிறவனுக்குச் சர்வேசுரன் அநுகூலமாயிருக்கிறாரென்று சொல்வது போலாகும். இவ்வளவுதானோ? இன்னும் சர்வேசுரனே பாவத்துக்குத் துணையாயிருந்து மனிதனை அதற்குத் தூண்டி ஏவுகிறாரென்றும் சொல்ல வேண்டும்! ஓ! இப்படிச் சொல்வது தேவ தூஷணம்! அன்றியும் சர்வேசுரன், உன்னை இப்போது தமக்கு ஊழியம் செய்து உன் ஆத்துமத்தை இரட்சிக்கும்படியாகக் கூப்பிட்டு, அதற்கு வேண்டிய வரப்பிரசாத உதவியைக் கொடுக்கும்போது, நீ அதை அவமதித்து ஏற்றுக் கொள்ளாமல், இனிமேல் வயது வந்த பின் பார்க்கலாம் என்று சொல்வது, சர்வேசுரனுக்குப் பெரும் நிந்தை யென்று உனக்குத் தோன்றவில்லையா?

உன் சீவிய நாட்களில் நல்ல இளம் வயதைச் சர்வேசுரனுக்காகச் செலவழியாமலிருந்து, இனி முதிர்ந்த வயது வந்த பின்போ சர்வேசுரனைத் தேடிப் போவாய்? தோட்டத்திலிருக்கும் பூஞ்செடியில், புதிதாய் மலர்ந்து, சுகந்த பரிமள வாசனை வீசி, கண்ணுக்கு ரம்மியமாயிருக்கும் புஷ்பத்தை உன் தகப்பனுக்குக் கொடாமல், அது காய்ந்து வாடி வாசனையின்றி இதழ்கள் சுருங்கி விழப் போகும்போது அவருக்கு அதைக் கொடுப் பது பிள்ளைக்கு அழகோ? நன்றாய் ஊழியம் செய்ய ஏதுவான இளம் வயதை உன்னை சிருஷ்டித்தவருக்குக் கொடாமல், இனி வயதில் முதிர்ந்த கிழவனான பின், உடலில் உயிர் குறைந்து, புத்தி தடுமாற்றமாகி, கால் கை ஊன்றி நடக்கவும் இருக்கவும் சக்தியின்றி, அடியற்ற மரம் போல் விழுந்து கிடக்கும்போது, உலக சிற்றின்ப சுகங்களை நீ அநுபவிக்கக்கூடாததால், உலகமே உன்னை ஒன்றுக்கும் உதவாத வெறும் பதரென்று பகைத்து வெறுத்துத் துரத்த, அப்போதுதானா, உன் சிருஷ்டிகரான சர்வேசுரனுக்கு ஊழியம் செய்து உன் ஆத்துமத்தை இரட்சிக்கப் போகிறாய்? இவ்வித ஊழியம் சர்வேசுரனுக்கு மகிமையோ? உனக்கும் இது தகுதியா?

ஆனால் சர்வேசுரன் நல்லவர். மிகுந்த தயாளகுணமுள்ளவர். நான் கொடுப்பது அற்பமாயினும், அதை எப்போது கொடுத்தாலும் அவர் தயவாய் ஏற்றுக்கொள்ளுவார் என்று நீ இன்னும் சொல்வாயோ? ஆ! ஆ! சர்வேசுரன் நல்லவரானதால் நீ கெட்டவனாகவேயிருக்கலாமா? சர்வேசுரனுக்கு இரக்கம் மிகுதியாயிருக்கின்றதென்று நீ அவரை உன் பாவத்தால் நிந்திக்கவோ போகிறாய்? சர்வேசுரனுடைய உத்தம் அடையாளங்களை, நீ உன் பாவத்துக்கு ஆதாரமாக நிலைநிறுத்தவா எண்ணுகிறாய்? கிறீஸ்துவனே! ஆழமறியாமல் காலை விடாதே, அறியுமுன்னே குறி பாராதே.

சர்வேசுரன் இரக்கமுள்ளவர்: மெய் தான். ஆனால் நீதியும் உள்ளவர். அவர் நீதியோ அளவற்ற நீதி, பார பட்சமற்ற நீதி, கோணாத நீதி; ஆதலால் அவர் எவனும் தம்மைத் தன் இஷ்டம் போல் நிந்தித்துப் பழிக்கவிட மாட்டார். இன்று இரக்கம் காண்பித்தால் எப்போதும் இரக்கம் காண்பிப்பாரென்று எண்ணாதே. இதோ அவர் உன்னைக் கூப்பிட்டு, நீ மனந்திரும்பு வதற்கு ஏதுவான அநுக்கிரக உதவி செய்ய காத்திருக்கிற இந்தச் சமயமே உன் இரட்சணியத்துக்கு சாதகமான சமயமென்று நினைத்து அவருக்கு ஊழியஞ் செய்ய காலதாமதமின்றி இப்போதே துவக்கு (2கொரி. 6:2). என் ஆண்டவரே! இப்போதே, இதோ துவக்கு கிறேன் என்று சொல். ஆகிலும் நீ மனந்திரும்பும்படி நேரமும் காலமும், தேவ அநுக்கிரக உதவியும் இருந்தாலும் இன்னும் உனக்கு அவசியமான மூன்றாம் குணம் ஒன்றுண்டு. அதை பின்வரும் மூன்றாம் பாகத்தில் விவரிக்கப் போகிறோம். கவனமாய்க் கேள்.