நாள் 1, தியானம் 4, ஆத்தும இரட்சணிய அலுவலில் காலதாமதம் மகா மோசம் - முதல் பாகம்

ஆத்தும இரட்சணிய அலுவலைச் செய்யும்படி மனசு சர்வேசுரன் பக்கம் திரும்புவது இன்றியமையாத முதல் காரியம். இப்படி மனந்திரும்ப உண்டாகும் முதல் யோசனை சர்வேசுரனுடைய குரல் சத்தம். இந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், இன்னும் காலம் போகட்டுமென்று தாமதமின்றி உடனே துவக்குவதுதான் புத்திமானுக்கு அடையாளம். இந்தச் சமயம், சர்வேசுரன் குறித்தனுப்பும் தகுந்த சமயமாதலால், உடனே துவக்கினால் வெற்றியாயும் சுலபமாயும் முடியும். அப்படியின்றி இந்த நல்ல சமயம் வீணிலே கடந்து போகும்படி விட்டால் இனி இப்படிப்பட்ட தகுந்த சமயம் வருமா என்பது வெகு சந்தேகம்.

ஏனென்றால் சர்வேசுரனிடம் மனது திரும்பும்படி மூன்று காரியங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து கூட வேண்டும். காலமும், தேவ உதவியும், மனதும் ஆகிய இம்மூன்றும், மனந்திரும்ப இன்றியமையாத சாதனங்கள். இம்மூன்றில் ஒன்று மாத்திரம் குறையுமானால் மனந்திரும்புவது முடியாத காரியம். எப்படியெனில்: நீ மனந்திரும்ப நேரம் இல்லாவிடில், அல்லது காலமிருந்தாலும் தேவ உதவி இல்லாவிடில், அல்லது தேவ உதவியிருந்தாலும் உனக்கு மனது வராமல் போனால் நீ மனந்திரும்ப முடியாது. அன்றியும் இம்மூன்று காரியங்களும் உன் கையில் இல்லாததால் இவற்றை உன் இஷ்டம் போல் எந்தக் காலத்திலும் நீ சேர்த்துப் பயன்படுத்த உன்னால் முடியாது.

இதை நீ நன்றாய் அறியும்படி நாம் சொல்லும் உவமையைக் கேள். நகைகளும் தங்க நாணயங்களுமுள்ள இருப்புப் பெட்டியைத் திறக்கும்படி மூன்று வித்தியாசமுள்ள திறவுகோல், மூன்று பேர் கையில் இருக்கிறதென்று வைத்துக்கொள். இந்த மூன்று பேரும் பற்பல பட்டணங்களில் பற்பல அலுவல் பார்த்து வருகிறவர்கள். இப்படியிருக்கப் பணப் பெட்டியை நீ எந்த நாளிலும் உன் இஷ்டப்படி திறக்க உன்னால் முடியுமா? முடியாது. ஏன்? ஏனென்றால் மூன்று திறவுகோல்களை வைத்திருக்கும் மூன்று பேரும் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் வந்து கூடினால் மாத்திரம் பெட்டியைத் திறக்கலாம். மூன்று பேரில் ஒருவன் மாத்திரம் வராமல் போனால், இரண்டு திறவுகோல் போதாது. அது போல் சர்வேசுரனிடம் மனந்திரும்ப, நாம் முன் சொன்ன மூன்று காரியங்களும், நம்மிடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றாய் வந்து இருக்கும் சமயம் எதுவோ அதுவே தகுந்த சமயம். அப்படிப்பட்ட சமயம் நீங்கள் தியானம் செய்ய வந்திருக்கும் இந்த அதிர்ஷ்ட சமயம். இது தப்பினால் வேறு உகந்த சமயம் நினைத்தாற்போல வருமா? வராது. ஏனென்றால் இந்த மூன்று விஷயங்களில் ஒன்றாவது உங்கள் கையிலிருக்கிறதென்று சொல்லக் கூடாது.

இம்மூன்றில் ஒன்றும் உங்களுக்குச் சொந்தமல்ல. அப்படியே முதல் விஷயமாகிற காலம் யாருக்குச் சொந்தம்? காலத்துக்கு யார் எஜமான்? ஒரு நிமிஷமுதலாய் நமக்குச் சொந்தமல்ல. சர்வேசுரனுக்கு எப்போது சித்தம் வந்ததோ அப்போது நாம் உலகத்தில் வந்தோம். இனி அவருக்கு எப்போது சித்தம் வருமோ அப்போதுதான் நாம் இதை விட்டுப் போவோம். நமது காலத்தின் நிலைமை இப்படியிருக்கையில் பிற்பாடு பார்க் கலாமென்று சொல்லுவது புத்தியோ? இன்னும் நாம் சொல்லப் போவதைக் கவனமாய்க் கேள். காலத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று பாகங்களுண்டு. இம்மூன்று பாகங்களில் நீ மனந்திரும்பும்படி உனக்கு உரியது நிகழ்காலமாத்திரம்தான். நிகழ்காலமென்றால், இன்று, இந்த நாள், என்று சொல்லும் இந்த நிமிஷமாத்திரம் உனக்குச் சொந்தம். ஆனால் நீ அவசியம் செய்ய வேண்டிய வேலையை உனக்குச் சொந்தமாய் உன் கையிலிருக்கும் நிகழ்காலமாகிற இந்த நேரத்தில் நீ செய்யாமல், உனக்குச் சொந்த மில்லாத இனிமேல் என்ற எதிர்காலத்தில் செய்வேனென்றால்: கையிலிருக்கும் நெல்லைக் காற்றில் தூற்றிவிட்டு, இனிமேல் காட்டை வெட்டி, உழுது பயிர் செய்து நெல் சேர்ப்பேன் என்று சொல்லும் பேதைமைக்குச் சமானம். கைக்கு எட்டினதும் சில சமயம் வாய்க்கு எட்டாமல் தப்பிப் போயிருக்க, எப்படி நீ இப்போது உன்னால் செய்யக்கூடியதை இனிமேல் என்ற நிச்சயமற்ற காலத்தில் செய்வேன் என்று சொல்லலாம்?

ஓ! மனந்திரும்பும் பாவிக்குச் சர்வேசுரன் பொறுத்தல் கொடுப் பதாய் வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று நீ சொல்வாயோ? மெய் தான். ஆனால் பொறுத்தல் கொடுக்க வாக்குத் தந்த சர்வேசுரன் அந்தப் பொறுத்தலை பாவி கேட்பதற்கு நேரம் அவனுக்குக் கொடுப்பதாக ஓரிடத்திலும் சொல்லவில்லையே. ஓ! இனிமேலாகட்டும். அடுத்த திருநாள் வரும்போது பாவத்தை விட்டு மனந்திரும்புவேன் என்று செல்லும் கிறீஸ்துவனே கேள். அடுத்த திருநாள் வரும், ஆனால் உனக்கு அது வருமோ? இன்றைக்கு உயிரோடிருப்பதே நிச்சயமில்லாமல் இருக்க அடுத்த நாளைப் பற்றி யோசிப்பது ஏன்? எத்தனையோ பேர் அடுத்த திருநாளில் மனந்திரும்பி பாவ சங்கீர்த்தனம் செய்வேனென்று கால தாமதம் செய்து வந்தவர்கள் அடுத்த நாளைப் பாராமல் பாவத்தில் மரித்தார்கள்!

உலக சம்பந்த விஷயங்களில் வெகு புத்தி மதியூக யோசனை யோடு, முன்பின் பார்த்து நடக்கும் மனிதர்கள் ஆத்தும் விஷயத்தில் மாத்திரம் அந்தப் புத்தியைக் காலால் மிதித்து, சற்றும் யோசனை யின்றி நடக்கிறார்கள். நீ குடியிருக்கும் வீட்டுக்குள் விஷமுள்ள நாகப்பாம்பு நுழைந்தால், அல்லது அந்தப் பாம்பே உன்னைத் தீண்டினால், நாளை பார்ப்போமென்று பாம்பைக் கொல்லாமலும், அதன் விஷத்தை முறிக்கும் மருந்தைச் சாப்பிடாமலும் நீ இருப் பாயோ? தன் பிள்ளைக்குக் கொடிய காய்ச்சல் வந்தால், நாளை வைத்தியனைக் கூட்டி வந்து மருந்து கொடுப்பேனென்று, கையைக் கட்டிக்கொண்டு இன்றைக்கு சும்மா இருப்பவன் எங்கும் உண்டா? சுய அறிவில்லாமல் பித்துக் கொண்டவன் இப்படிச் செய்வானேயன்றி, புத்தியுள்ள எவனும் செய்யமாட்டான். உலக விஷயங்களில் செய்யும் யோசனை ஆத்தும விஷயத்தில் செய்ய வேண்டாமா?

சகோதரரே! சர்வேசுரன் உலகத்துக்கு இரட்சணியமான தமது திவ்விய மகனை தாம் குறித்த காலத்தில் அனுப்பினது போல், உங்களுக்கும் இரட்சணியமாக அவர் தெரிந்து அனுப்பும் இந்தக் காலத்தில்தான் நீங்களும் இரட்சணியம் பெறலாம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி அல்லவா? எப்போது சாதகமான சமயம் வாய்க்குமோ அப்போது அதைப் பிரயோகிப்பது புத்திமான் கடமை. அந்த நல்ல சமயம் இதுதான். சர்வேசுரன் இன்று உன்னைக் கூப்பிடும்போது உன் மனதைக் கல்லாக்கி, இனிமேலாகட்டுமென்று சொல்லாதே. நீ மனந்திரும்ப இப்போது நேரமிருக்கிறது. ஆனால் நேரமாத்திரம் போதாது. நேரத்தோடு தேவ உதவியும் அவசியம். அது எப்படி என்று இரண்டாம் பாகத்தில் விவரிக்கப் போகிறோம். கவனமாய்க் கேளுங்கள்.