இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாள் 1, தியானம் 4, ஆத்தும இரட்சணிய அலுவலில் காலதாமதம் மகா மோசம் - மூன்றாம் பாகம்

பாவத்தைவிட்டு மனந்திரும்பி சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய இப்போது உனக்கு இருக்கும் சமயமே தகுந்த சமயமாயிருக்க, அதை நீ தப்பவிட்டு இனிமேல் ஆகட்டுமென்று சொல்லுதல் எவ்வளவு மதியீனமான செய்கை. இனிமேல் மனந்திரும்புவேனென்றால், மனந்திரும்ப நேரம் அவசியம். அந்த நேரம் உனக்கு இருக்குமோ இராதோவென்பது வெகு சந்தேகமென்று முதற்பாகத்தில் விவரித்தோம். நேரமிருந்தாலும் தேவாநுக்கிரக உதவி தேவையென்றும், அதுவும் நீ நினைத்த சமயத்தில் வருமோ வராதோ என்பது வெகு நிச்சயமில்லையென்றும் இரண்டாம் பாகத்தில் சொல்லிக் காட்டினோம். அப்படி தேவ அநுக்கிரகம் இருந்தாலும் இன்னும் மூன்றாம் இலட்சணமாகிற மனம் உனக்கு வேண்டும். இந்த மனசு இப்போது உனக்குத் தியான காலத்தில் எளிதாய் வரலாம். அதைக் கவனியாமல் இனிமேலும் உனக்கு மனது இருக்குமென்று நீ எண்ணி இன்று செய்ய வேண்டியதை இனிமேல் செய்வேனென்றால் மோசம் போவாய்.

இதன் காரணமே தெனில் மனிதனுடைய மனசு வெகு நிலை யற்றது. பாசிபோல் என்றும் தளம்பும். ஒரே நிலையில் நில்லாது. வேண்டும், வேண்டாம் என்பதும், சந்தோஷமும் துக்கமும், வெறுப்பும் விருப்பமும், ஆவலும் அருவருப்பும், சலிப்பும் உற்சாகமும், இவையெல்லாம் சக்கரம் போல் சுற்றிச் சுழன்று மாறி மயங்கி வரும். மனிதன் மனது ஒரு நாளையில் ஏழு முறையாவது மாறி வருமென்று வேதவாக்கியம் முறையிடுகின்றது. நாமும் அநுபவ வாயிலால் நாள்தோறும் இது மெய் என்று கண்டு வருகிறோம். மனிதன் மனது காற்றாடி போல், மாறி மயங்கி, அற்ப விஷயத்தாலும் அலைந்து சுழல்வதை யார் அறியார்?

ஒரு நிலையும் அற்ற மனது; இப்படி நிலையற்ற மனதை, நீ நிலையுள்ள மனமாக எண்ணி இன்று செய்ய மனமில்லாததை இனிமேல் செய்வேனென்று சொல்லுகிறாய். கெட்ட பழக்கமும், துர்க்குணங்களும், பாவ நாட்டமும் உன்னிடத்தில் இன்னும் பலங்கொள்ளாமல் இப்போது தான் துவக்கி இருக்கும்போது, அவைகளை முழுவதும் நீக்கி, உன் ஆத்தும் இரட்சணிய அலுவலைக் கவனிக்க தைரியமில்லாத நீ, இனி இவை நன்றாய் பலங்கொண்டு, மனதில் ஆழமாய் இறங்கி, ஆணிவேர் பாய்ந்து, நாலு பக்கமும் உன்னைச் சேர்த்துக் கட்டி இறுக்கும் போதோ, மனந்திரும்பப் போகிறாய்?

ஆலமரம் இளங்கன்றாய் இருக்கையில் அதைப் பிடுங்கிப்போட துணிவில்லாதவன், அது பெரிய மரமாய் வளர்ந்து, நாலு திசையிலும் வேரோடி, ஒரு அடி மரத்துக்குச் சார்பாய் ஒன்பது அடி மரங்கள் விழுதுகளில் இறங்கி, பலப்பட்டு, கிளைகளும் கொம்புகளும் எங்கும் படர்ந்து, பெருஞ்சோலை போல் விரிந்து வளர்ந்த பிறகா, எளிதில் அதை வெட்டிவிடலாமென்று சொல்லுகிறாய்? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஒரு கால் மாத்திரம் கொஞ்சம் சேற்றுக்குள் பதிந்திருக்கும்போது அதை வெளியே இழுக்க மனமில்லாதவன், இரண்டு காலும் ஆழமாகச் சேற்றுக்குள் இடுப்பு மட்டும் புதைந்த பின்பு, எளிதாய் வெளியே இழுக்கப் போகிறானோ?

ஆனால் நான் கிறீஸ்துவனானதால் சர்வேசுரன் கிருபையால் நான் சாகும் போது பாவசங்கீர்த்தனம் செய்து அவஸ்தைப் பூசுதல் பெற்று சாவேனென்று எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது. குருவும் அந்த சமயத்தில் தப்பாமல் வருவார் என்று நீ சொல்வாயோ?

ஆனால் சகோதரா! நீ சாகும் சமயத்தில் குருவானவர் சமீபத்திலிருப்பாரென்று உனக்கு எந்த சம்மனசாவது வந்து சொன்னதுண்டா? நாம் அறிய எத்தனை பேர்கள், குரு வீட்டுக்கு வருமுன்னே இறந்து போனார்கள். நல்லது , நீ சொல்வது போலாகட்டும். குரு வந்தாலும், நீ அவஸ்தையில், பேச்சு மூச்சின்றி புத்தித் தெளிவின்றி இருந்தால், அது பாவசங்கீர்த்தனம் செய்ய நல்ல சமயமா? உனக்கு அப்போது மனது வருமா? நீ நன்றாய் தெளிந்த புத்தியோடு இருக்கும் இப்போது, மனந்திரும்பி பாவசங்கீர்த்தனம் செய்வது உனக்குப் பெரிய மலை போல் தோன்றுகிறதே. அந்தக் கடைசி நாளில் எப்படி நீ எளிதாய் வருத்தமின்றி பாவசங்கீர்த்தனம் செய்வாயென்று எண்ணுகிறாய்? அதற்குத் தகுந்த அறிவும் புத்தித் தெளிவும் அப்போது உனக்கு இருக்குமோ? இப்போது இல்லாத மனம் அப்போது எப்படி வரும்? நல்ல பாவசங்கீர்த்தனத்துக்கு அவசியமான குணங்கள் இன்னதென்று இப்போது அறியாத நீ, அவஸ்தை வேளையில் அறிவாயோ?

கடைசி நாளில் எல்லாம் சரியாய் முடியுமென்று வீணாய் இப்போது கற்பனை பண்ணாதே. மகா முக்கிய அலுவலை, செய்யக் கூடும்போது செய்ய மனமில்லாமல் கடைசி நாள் மட்டும் விடுவது புத்தியீனமான செய்கை. மனிதன் ஜீவிக்கும் நாட்கள் எப்படியோ, அப்படியே அவன் மரண நாளுமிருக்கும். வடபக்கம் சாய்ந்த மரம் வெட்டும்போது தென்பக்கம் விழமாட்டாது. வேப்பமரத்தில் விளாங்கனி பழுக்காது, அவரை விதைத்தால் துவரை விளையாது, சாமை விதைத்த வயலில் சம்பா முளையாது. நீ விதைத்ததெதுவோ அதுவே அறுப்பாய் (கலா. 6:7, 8). நீ உன் வாழ்நாளில் பாவ துர்நாற்றத்தை விதைத்தால் பாவத்தின் தண்டனையைப் பலனாக அறுப்பாய். ஓரிருவர் பாவிகளாய் வாழ்ந்தவர்கள் சாகும்போது மனந்திரும்பி நல்லவர்களாய் மரித்தால், இது ஓரோரிடத்தில் சர்வேசுரன் செய்யும் விசேஷ தயை. உன் மட்டிலும் இப்படிச் செய்வாரென்று நீ எண்ணி நடந்தால் மோசம் போவாய். மரத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்தவர்களில் ஒருவரிருவர் தேவசித்தத்தால் தப்பிப் பிழைத்தார்களென்று, நீயும் மரத்தின் உச்சியிலிருந்து விழுந்தால் தப்பிக்கலாமென்று விழுந்து பார்ப்பாயா?

கிறீஸ்தவனே! சர்வேசுரன் உன்னைக் கூப்பிடும் இந்த சமயம், இது தான் உனக்கு இரட்சணிய நாள். பாவத்தை விட்டு மனந்திரும்புவதற்கு இதுதான் தகுந்த நாள் (2கொரி. 6:2). எல்லாம் உனக்கு இப்போது சாதகமாயிருக்கிறது. காலமும், தேவ உதவியும் இப்போது உண்டு. மனம் ஒன்றுதான் வேண்டும். அந்த மனசும் இப்போது, உன் கையிலிருக்கிறது. ஆகையால் எனக்கு மனமிருக் கிறது. நான் என் ஆத்துமத்தை இரட்சிக்கும்படியாய் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வேன். இதோ நான் துவக்குகின்றேன் என்று துவக்கு. துணிந்து துவக்கி ஒரு காலெடுத்து வைத்தால், எல்லாம் எளிதாய் முடியும்.

இங்கே தியானம் செய்ய வந்திருப்பவர்களுக்குள், யாராவது இது வரை இரட்சணிய வழிதப்பி தவறி நடந்திருந்தால், பாவசங்கீர்த்தன மின்றி பலநாள் பாவத்தில் அமிழ்ந்திக் கிடந்தால், துர்நடத்தை, குடிவெறி, அநீதம், ஆங்காரம் என்னும் பாவங்களுக்கு அடிமையாய் நரக பாதாளத்தின் ஓரத்தில் நித்திரை செய்தால் ஒ! இக்கணமே எழுந்திருங்கள். காலதாமதம் செய்ய வேண்டாம். தாமதித்து, ஒரு அடி மாத்திரம் அப்பால் வைப்பீர்களேயாகில் நரகத்தில் விழவேண்டியிருக்கலாம். அப்படி விழுமுன்னே விழித்து எழுந்து, பாவத்தை விட்டு சர்வேசுரனிடம் வந்து சேருங்கள். நாளைக்கென்று சொல்லாமல் இன்றைக்கே இக்கணமே இதோ வருகிறேனென்று சேசுநாதர் சுவாமி பாதத்தில் வாருங்கள்.

காலதாமதம் எவ்வளவு மோசமான குறைபாடு என்று நீங்கள் உங்கள் மனதில் நன்கு உணரும்படி ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். மேன்குலத்தில் பிறந்த ஒரு வாலிபன் கெட்டவர்கள் தொடர்பால் தீயவழியில் சென்று கெட்டுப் போனான். அவன் தாய் புண்ணியவதி வெகு துக்கப்பட்டு பலமுறை அவனுக்குப் புத்தி சொல்லுவாள். நல்லதென்று சமயத்திற்கு இசைந்தாற்போல் மறுமொழி சொல்வானேயன்றி சொன்னது போல் செய்ய அவனுக்கு மனத் துணி வில்லை. அவனை அறிந்த ஒரு குரு அந்த ஊருக்கு வந்தார். வந்தவர் அவனைக் கூப்பிட்டு புத்தி சொல்லி, அன்றே பாவசங்கீர்த்தனம் செய்து தன் நடத்தையை சீர்ப்படுத்துவது நலமென்று வற்புறுத்தினார். வாலிபனும்: நல்லது சுவாமி, ஆனால் பாவசங்கீர்த்தனம் செய்யுமுன் சில காரியங்களை ஒழுங்குபடுத்துவது அவசியம். இன்று எல்லாம் முடித்து நாளை அதிகாலையே உங்களிடம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வருவேனென்று வாக்குக் கொடுத்து வீட்டுக்குப் போனான்.

அன்று இராத்திரியில் அவனுக்கு உடன் தோழனான ஒரு தீயவன் அவனிடம் வந்து, நயவஞ்சகம் காட்டி : சிநேகிதா! நாளையோடு நீ நல்லவனாகப் போகிறாயே. ஆனதால் இந்த இராத்திரி நாம் போகும் வீட்டுக்கு கடைசிமுறை போகலாம். அதோடு எல்லாம் முடிந்து போகும் என்று அவனை ஒரு கெட்ட பெண் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனான். அந்த இராத் திரியில் மின்னலும் இடிமுழக்கமும் அகோரமாயிருந்தது. நடுச்சாமத்தில் பார் என்று பயங்கரமான இடி அந்த ஊரில் விழுந்தது. ஊரெல்லாம் நடுங்கி அரண்டு போயிற்று. மறுநாள் காலையில் குரு பையன் வருவானென்று அவனுக்காக காத்திருந்தார். தாமதமானதால் ஆள் அனுப்பி விசாரித்த போது அவன் அந்த இராத்திரியே ஓர் கெட்ட ஸ்திரீ வீட்டில் இடி விழுந்து செத்துக் கிடக்கிறான் என்று சேதி வந்தது. நாளைக்கென்று தாமதம் செய்ததால் வந்த பலன் இதுதான்; நாளை வருமுன்னே அவலமாய்ச் செத்தான்.

ஓ தயையும் அன்பும் நிறைந்த என் சர்வேசுரா! எவ்வளவோ பொறுமையோடு இவ்வளவு காலம் எனக்காக காத்திருந்தீர்! ஆண்டவரே! இனிமேலும் காத்திருப்பீரென்று புத்தியில்லாமல் எண்ணி நான் பாவவழியில் செல்ல மாட்டேன். இதோ! நான் என் நிர்ப்பாக்கியத்தையும் எனக்கு வர இருக்கும் ஆபத்தையும் அறிந்து, தாமதமின்றி உம்மைத் தேடி வருகிறேன். சுவாமி என் மனதை உறுதிப்படுத்தும். உமது விசேஷ அநுக்கிரக உதவியைத் தந்தருளும். எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற நாட்களை எல்லாம் உமது ஊழியத்திலேயே நான் செலவழிப்பேன். ஓ மரியாயே! பாவிகளின் தஞ்சமே! இதோ உம்மைத் தேடி உமது அடைக்கலத்தில் வரும் இந்தப் பெரும் பாவியை கிருபையாய்ப் பார்த்து, நான் தாமதமின்றி மனந்திரும்பி சேசுநாதரிடத்தில் வந்து சேரும்படி எனக்காக உம்முடைய தேவ குமாரனிடம் மன்றாடுவீராக.

ஆமென் சேசு.