நாள் 1, தியானம் 4, ஆத்தும இரட்சணிய அலுவலில் காலதாமதம் மகா மோசம்.

போர்க்களத்தில் மகா பராக்கிரம வீரனும் இயல்பான குணமுள்ளவனுமான படைத்தலைவன் ஒருவன் இருந்தான். ''எதார்த்தவாதி பொதுமக்களின் விரோதி” என்ற பழமொழிக்கிணங்க, சிலர் இவனை வஞ்சத் துரோகமாய்க் கொல்லும்படி சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் விருந்துண்டு சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டிருக்கையில், ஓர் அந்நியன் துரிதமாய் அங்கே வந்து, இரகசியத்தில் தளபதிக்கு ஒரு கடிதம் கொடுத்து அதில் முக்கியமான செய்தி இருக்கிறதென்றும், உடனே தாமதமின்றி வாசிக்க வேண்டுமென்றும் சொல்லிப் போய்விட்டான். சேனாதிபதி நல்லது என்று வாங்கி, உடனே வாசிக்காமல் பிற்பாடு எல்லாரும் போன பின் சாவகாசமாய் வாசிக்கலாமென்று சும்மா இருந்து விட்டான்.

வீட்டை விட்டு வெளியே போகுமுன், அவன் விரோதிகள் சதி துரோகமாய் அவனைக் கொன்று போட்டார்கள். வந்த கடிதத்தைத் தாமதமின்றி உடனே வாசித்திருந்தால் கொலைக்குத் தப்பித்திருப்பான். இதனால் முக்கியமான எந்த அலுவலையும் செய்ய சமயம் வாய்க்கும் போது உடனே செய்யாமல் காலதாமதம் செய்வது எவ்வளவு மோசமான காரியம் என்று அறியலாம்.

ஆத்தும இரட்சணிய அலுவல் எந்த அலுவலிலும் மகா முக்கியமான அலுவல். இது ஒன்றே மகா கடமையான அலுவல். இது ஒன்றைச் செய்யும்படியாகவே நாம் உலகத்தில் மனிதராயிருக் கிறோம்.

இதைச் செய்வதில் நஷ்டம் வந்தால் அது சரிசெய்து கொள்ள முடியாத பெரும் நஷ்டமென்று இவை முதலிய செய்திகளை முந்தின பிரசங்கத்தில் விவரித்தோம். இதைக் கேட்டவர்களில் சிலர் நினைப்பதேதென்றால்: இங்கே சொன்னதெல்லாம் நியாயந்தான்.

என் ஆத்துமத்தை நான் கவனிக்க வேண்டியது மெய்தான். ஆனால் இப்போது என்ன அவசரம்? அதற்கு நல்ல சமயம் வரும். இது தக்க காலமல்ல. மேலும் நான் இன்றைக்காசாகப் போகிறேன்?

இப்போது எனக்கு வாலிப வயது. இனி வயது வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தங்கள் மனதுக்குச் சமாதானம் சொல்லி, உடனே துவக்காமல் காலம் போகட்டுமென்று காலதாமதம் செய்வார்கள்.

இவ்விதம் சமயம் உடனே வாய்த்த போது மனந்திரும்பாமல் காலதாமதம் செய்வது எவ்வளவு மோசமானதும் ஆபத்துள்ளது மென்று இப்போது உங்களுக்கு விவரித்துக் காட்டப் போகிறோம்.

நீங்கள் கவனமாய் நாம் சொல்வதைக் கேளுங்கள். தேவதாய் உங்கள் புத்திக்குத் தெளிவும் மனசுக்கு உறுதியும் தமது திவ்விய குமாரன் சேசுநாதரிடம் பெற்றுக் கொடுப்பார்களாக.