இதற்கு முந்திய இரண்டு பாகங்களில் ஆத்தும் இரட்சணியமாகிற அலுவல் தன் இயல்பிலே அவசியமுள்ளதென்றும் அதை அநுகூல் மாய்ச் செய்யும்படி விசேஷகடமை உண்டென்றும் விரிவாய் விவரித் தோம். இனி இதைக் கவனியாது அசட்டை செய்வதால் வரும் நஷ்டம் எம்மாத்திரமென்று காண்பிக்கப் போகிறோம்.
இதில் நாம் சொல்லும் விஷயம் உங்கள் மனதில் உறுதியாய்ப் பதியுமானால், வெகு கவனத்துடன் உங்கள் ஆத்துமத்தை எவ்வகையிலாயினும் இரட்சித்துக் காப்பாற்றும்படி துணிவீர்கள்.
ஆத்தும இரட்சணியத்தை மனிதன் ஒரே ஒரு தடவை மாத்திரம் இழந்து போவானாகில், இதனால் அவனுக்கு வரும் நஷ்டமோ, முழு நஷ்டம், சர்வ நஷ்டம், எவ்வகையாலாயினும் ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும். இது ஏன் என்பீர்களோ? உங்கள் ஆத்துமத்தை நீங்கள் ஒருமுறை இழந்து அது நரகத்தில் வீழ்ந்தால், நித்தியமாய் சர்வேசு ரனை இழந்து போகிறீர்கள். சர்வேசுரனை இழப்பவன் சகல நன்மை பாக்கியத்தையும் இழக்கிறான். இது எப்படி என்று நீங்கள் இப்போது சில முறை நன்றாய் கண்டுபிடிப்பதில்லை.
இந்த உலகத்தில் எங்கும் அடர்ந்திருக்கும் மாயையின் மயக்கத்தால் சர்வேசுரனை இழப்பது மகா அற்பக் காரியம்போல் உங்களுக்குத் தோன்றுகிறது. உங்களைச் சூழ்ந்திருக்கும் மாய சுகபோக வஞ்சனைகளின் மத்தியில் சர்வேசுரன் யாரென்றும் அவரை இழந்து போவது எவ்வளவு நிர்ப்பாக்கியம் என்றும் நீங்கள் கண்டுபிடிக்கிறதில்லை .
ஆ! நரகத்திலிருக்கும் அந்த பாவ ஆத்துமாக்களைக் கேளுங்கள். ஏன் இவ்வளவு கண்ணீர்? ஏன் இத்தனை துயரம்? ஏன் இப்படிக் கூக்குரலிட்டு அழுகிறார்கள்? ஏனென்றால் சகல நன்மை சுரூபியாகிய சர்வேசுரனை இழந்துபோனார்கள். சர்வேசுரனை இழந்ததால் சர்வ பாக்கிய ஆனந்தத்தையும் இழந்தார்கள். நரகத்தில் விழுந்த பின்புதான் இந்த நிர்ப்பாக்கியர் சர்வேசுரனை இழப்பது எவ்வளவு நிர்ப்பாக்கியமென்று கண்டு பிடித்தார்கள்.
ஆனால் ஆபத்து வருமுன் அதை தடுக்கப் பாடுபடுவதல்லவா புத்தி? வருமுன் காப்பவனே அறிவாளி , வந்தபின் காப்பவன் அறிவீனன். ஏரியின் தண்ணீர் கரையை உடைத்து நாலா பக்கத்திலும் வெள்ளமாய் ஓடும்போது, ஐயோ! ஐயோவென்று வாயில் அடித்துக் கொண்டால், ஓடுகிற தண்ணீர் நிற்குமோ? தண்ணீர் வருமுன் கரையை பலப்படுத்துவதே புத்திமான் தொழில். அப்படி நீயும் உன் ஆத்தும விஷயத்தில் நடப்பாயாக.\
ஆத்துமத்தை இழந்து போவது பெரிய நஷ்டம். அதுவும் எவ்வகையாலாயினும் ஈடுசெய்ய முடியாத நஷ்டம். இந்த நஷ்டத்தை மாற்றவாகிலும் குறைக்கக் கூட முடியாது. ஒரு காரியத்தை நீ செய்யும்போது ஓரிடத்தில் நீ தோல்வி அடைந்தால் வேறோரிடத்தில் அல்லது இன்னொரு முறையில் வெற்றி பெறலாம். அப்படி வெற்றி பெறாவிட்டாலும் வேறே வகையால் வந்த நஷ்டத்தை ஈடுகட்டலாம்.
விவசாய வேலை செய்பவர்கள் ஒரு வருஷம் நல்ல விளைவு இல்லாமல் போனால் இன்னொரு வருஷம் நல்ல விளைவு உண்டாக, நஷ்ட ஈடு பெறுவார்கள். நீ செய்யும் வியாபாரத்தில் ஒரு முறை உனக்கு மோசம் வந்தால் மறு முறை லாபம் அடையும்படி வழி தேடுவாய். அதற்கு ஆயிரம் வழிகள் உண்டு.
ஆத்தும இரட்சணிய அலுவலிலோ, ஒரு முறை நஷ்டம் அடைந்து உன் ஆத்துமம் நரகத்துக்குப் போனால், இந்த நஷ்டம் எந்த வகையாலாகிலும் சரிசெய்து கொள்ள முடியாத நஷ்டமாகும். இதற்கு ஈடாக யாதொன்றும் கொடுக்க உன்னாலும் முடியாது, எந்த சிருஷ்டியாலும் முடியாது. அன்றியும் உனக்கு ஒரே ஆத்துமம் மாத்திரம் இருப்பதால், அது கெட்டு சேதமானால் எல்லாம் கெட்டு சேதமாய்ப் போகும். ஒரு கண் போனால் இன்னொரு கண்ணால் பார்க்கலாம். ஆனால் ஒரே ஒரு கண்மாத்திரமிருக்கிறவனுக்கு ஒரு கண் போனால், பார்வை முழுதும் அற்றுப்போகும்.
கிறீஸ்தவர்களே! இந்த சத்தியத்தை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்களா? இப்போது கண்டுபிடியாமல் போனால் இனி எப்போது கண்டு பிடிப்பீர்கள்? ஐயோ! கிறீஸ்தவர்களுக்குள் எத்தனையோ பேர் அவசியமான இந்த ஒரே அலுவலைக் கவனியாமலும், இதில் வெற்றி பெறும்படி வேண்டிய வழிமுறைகளைத் தேடாமலும், கவலையற்று இருக்கிறார்கள்! எத்தனை கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ஆத்துமமே இல்லை என்பது போல் அதைப்பற்றி நினையாமல் அஞ்ஞானிகளிலும் கடையராய் காலம் போக்குகிறார்கள்.
சகோதரரே! உலக வியாபாரத்துக்காக நீங்கள் செய்யும் முயற்சிகளையும் உங்களுடைய சொந்த ஆத்தும் இரட்சணியத்துக்காக நீங்கள் செய்யும் முயற்சி களையும் சீர்தூக்கி ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுடைய ஆத்துமத் துக்காக நீங்கள் செய்வது எவ்வளவோ கொஞ்சம்! இந்தக் கொஞ்ச மும், எவ்வளவோ அசமந்தத்தோடும், வலுவந்தத்தோடும், அரை குறையான மனதோடும் செய்து வருகிறீர்கள்?
இதென்ன காலாகோலம்! இதென்ன புத்தியீனம்! உங்கள் ஆத்துமத்தை ஈடேற்றினால் வரும் பலனும் பாக்கியமும் உங்களுக்கல்லவா நித்திய காலமிருக்கும்? உங்கள் ஆத்துமத்தை இழந்து போனால் நீங்கள்தானே நித்தியமான துன்பம் அனுபவிக்க வேண்டும். லாபமும் நஷ்டமும் எல்லாம் உங்களை அல்லவா சாரும்? இதோ நல்ல சமயம்! அதிர்ஷ்ட காலம்! சமயம் வாய்க்கும்போதே அதை வீணில் இழந்து போகாமல் நல்ல மனதோடு துணிந்து, என் ஆத்துமத்தை எவ்விதமாகிலும் நான் இரட்சிப்பே னென்று துவக்குங்கள்.
எவன் எப்படி நடந்தாலும், எப்படிப் பேசினாலும் நீ கவனிக்காதே. பேசுகிறவன் பேசட்டும். சிரிக்கிறவன் சிரிக்கட்டும். உன் ஆத்துமம் உனக்குச் சொந்தம். அதை இரட்சிக்க நீயே முயல வேண்டும். நீ முயலாவிட்டால் வேறெவனும் உனக்காக அந்த வேலையைச் செய்ய வரமாட்டான். செய்ய மனமிருந்தாலும் அவனால் கூடாது. அவனவன் ஆத்துமத்துக்கு அவனவனே பொறுப்பாளி.
ஓ! சர்வேசுரா! என் ஆத்துமத்தை நானே இரட்சிக்கும்படி என்னை மனிதனாய் சிருஷ்டித்தீர், உமது சாயலான ஆத்துமத்தை எனக்குக் கொடுத்தீர். தேவதூதரை எனக்குக் காவல் சம்மனசாக நியமித்தீர். நீரே என்னைத் தேடிவந்து எனக்காக மனிதனாய்ப் பிறந்தீர். உமது திரு இரத்தத்தை என் ஆத்துமத்தின் விலையாய்த் தந்தீர். என்னைச் சூழ்ந்திருக்கும் சகல சிருஷ்டிகளும், நான் உமக்கு ஊழியம் செய்து என் ஆத்துமத்தை இரட்சிக்கும்படி இடைவிடாமல் எனக்குப் புத்தி போதிக்கின்றன.
ஆனால் ஐயோ! இதுமட்டும் நான் இந்த உன்னத அலுவலை மறந்து, மற்றதெல்லாம் செய்து வந்தேன். ஓ! அக்கிரமமாய் நடந்தேன். இனிமேல் சுவாமி இப்படி நடக்க மாட்டேன். எனக்கு இன்னும் மீதியாயிருக்கும் நாட்களை உமக்கு ஊழியஞ் செய்து என் ஆத்துமத்தை ஈடேற்றுவதில் செலவழிப்பேன். இது என் உறுதியான மனது. இதுவே என் மாறாத ஆசை.
அர்ச். மரியாயே, பாவிகளின் தஞ்சமான தாயே! என் தீர்மானத்தை ஆசீர்வதித்தருளும். என் ஆசையை ஏற்றுக்கொள்ளும். என் மனதை பலப்படுத்தும் தாயே.
ஆமென் சேசு.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠