இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாள் 1, தியானம் 3, ஆத்தும இரட்சணியம் மகா முக்கிய அலுவல் - முதல் பாகம்.

ஆத்தும இரட்சணியம் மனிதனுடைய முக்கிய அலுவல். ஆனால் ஆத்துமத்தை இரட்சிக்கிறதென்றால் என்ன அர்த்தம்? கேளுங்கள் . சகோதரரே! ஆத்துமத்தை இரட்சிக்கிறதென்றால், சர்வேசுரன் உங்களை எந்தக் கருத்தோடு சிருஷ்டித்தாரோ, அந்தக் கருத்து வெற்றி பெறும்படி செய்வது. ஆத்துமத்தை இரட்சிப்பதென்றால், சர்வேசுர னுக்குப் பிரமாணிக்கத்துடன் ஊழியஞ் செய்து, அதற்குப்பின் வெகுமதியாக சர்வேசுரனையே நித்திய காலம் பார்த்து நேசித்து வாழ்வது. ஆத்துமத்தை இரட்சியாதவனோ அதை இழந்து போகிறான்.

ஆத்துமத்தை இழந்து போவதென்றால், சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியாமல் விரோதியாய் நடந்த பின்பு, நித்தியமானதுன்பங்கள் நிறைந்த நரகத்திலே நீடுழிகாலம் விழுந்து சகல தண்டனைகளையும் அனுபவிக்கிறது. இது இப்படியானால் தன் ஆத்துமத்தை இரட்சிப்பது எவ்வளவு முக்கியமான அலுவல்! நித்திய பாக்கியம் அல்லது நித்திய நிர்ப்பாக்கியம், இவ்விரண்டில் ஒன்றைத் தெரிந்து கொள்வது அற்பமான காரியமா?

இதன் முக்கியமும் அவசியமும் இவ்வளவென்று அறிய முக்கிய மான அலுவலுக்குள்ள மூன்று குணங்கள் எவையென்று கேளுங்கள்: யாதோர் அலுவல் தன் சுபாவ இயல்பிலே அவசியமுள்ளதாயும் அதைச் செய்யும்படி தடுக்க முடியாத கடமை உள்ளதாயும், அதைச் செய் யாமல் விடுவதால், உண்டாகும் நஷ்டம் எவ்வகையாலும் ஈடுசெய்ய முடியாத நஷ்டமுமானால் அந்த அலுவல் மகா முக்கிய அலுவ லென்று எவரும் அங்கீகரிக்க வேண்டும். ஆத்தும் இரட்சணிய அலுவலுக்கு இந்த மூன்று குணங்களும் பூரணமாய் உண்டு. எப்படி யெனில் ஆத்தும இரட்சணியம் தன் இயல்பிலே அவசியமானது. அதைத் தேடுதல் எல்லா மனிதருக்கும் தடுக்க முடியாத கடமையாக இருக்கிறது. இதைக் கவனியாதிருந்து நஷ்டம் அடைந்தால் வருவது ஈடு செய்ய முடியாத நஷ்டமாகும். இந்த மூன்று விஷயங்களையும் ஒவ்வொன்றாய் விளக்கிக் காட்டுவோம். கவனமாய்க் கேளுங்கள்.

ஆத்தும் இரட்சணிய அலுவல் தன்னிலேயே முக்கியமானது. சாலமோன் என்ற மகா ஞானியின் வாக்குப்படி : சர்வேசுரனுக்குப் பயந்து அவருடைய கட்டளைப்படி நடப்பது ஒன்றே சர்வ மனிதர் யாவர்மீதும் சுமந்த கடமை (சங்க. 12:13). இதின் பொருளேதெனில், ஒருவன் மனித னென்று எண்ணப்படும்படி அவன் சர்வேசுரனுடைய கட்டளை களை அறிந்து அனுசரிப்பது அவசியம். இதுவே மனிதனுக்கு இயல்பாயிருக்க வேண்டிய இலட்சணம். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவனே மனுஷன். ஆதலால் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து தன் ஆத்துமத்தை இரட்சிப்பது மனுஷ சுபாவத்துக்கு அவசியமான குணமாகும். இதுதான் உத்தம மனுஷகம் என்று சொல்லப்படுவது.

இது ஒன்று நீங்க, மற்ற எந்த அலுவலும், அதிலிருந்து உண்டாகும் பயன் காரணமாக அவசியமாகுமே அன்றி, தன் சுய இயல்பிலே அவசிய மாகாது. அப்படியே கலைநூல் கற்பதும், உத்தியோகம் வகிப்பதும், வியாபாரம் செய்வதும், வயலை உழுது விதைப்பதும், இவை முதலிய பல வேலைகளெல்லாம், அவைகளால் உண்டாகும் பலனின் நிமித்தம், அதைச் செய்பவர்க்கு அவசியமாகுமே அன்றி, எல்லாருக்கும் ஒரே சீராய் தன் இயல்பிலே அவசியமாகாது. ஆத்தும் இரட்சணியமாகிற அலுவலோ, மனிதனாய்ப் பிறந்த சகலருக்கும் மகா முக்கிய அவசிய மான தொழில். இதை மறந்து கவனியாது நடப்பவன் மதிகெட்டுத் தன் சுபாவ முறை தப்பி நடக்கிறவனென்று சொல்ல வேண்டும்.

மனிதருக்குள் அநேகம் பேர், அந்தந்தப் பொருட்களின் சுபாவத் தையும் அவைகளின் கூறு , குணங்களையும் அறிவதில் தாங்கள் அறிஞர்களென்றும், பல வேலைகளை சாமர்த்திய திறமையோடு நடத்தி அநுகூலமாய் முடிப்பதில் திறமைசாலிகளென்றும், பெருமை பேசித் தங்களை மெச்சிப் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். இவர்கள் ஆத்தும் இரட்சணியத்தின் விஷயத்திலேயோ, அற்பமும் அறிவின்றி மூட ஆத்துமாக்களாயிருக்கிறார்கள். இவ்வகை மதியீன ரைக் குறித்து பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் வேதாகமத்தில் கேட் பதேதெனில்: ஓ மானிடப் பிறவிகளே! எத்தனை காலம் இப்படி மதிகெட்டு அலைந்து, உங்கள் ஆத்துமத்தைக் கவனியாமல் அற்ப சுகங்களைத் தேடுவீர்கள்? நீங்கள் சிறு பிள்ளைகளைப் போல், விளையாட்டுப் புத்தியாய் இன்னும் எவ்வளவு காலம் நடப்பீர்கள்? சிறு பிள்ளை மண்ணால் வீடு கட்டி விளையாடும்போது, இன்னொருவன் அந்த மண் வீட்டைக் காலால் அழித்தால், அல்லது பிள்ளை கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பறித்தால், குழந்தை அலறி அழுது கூக்குரலிடும். ஆனால் திருடன் வீட்டில் புகுந்து நகை நாணயங்களைத் திருடிக் கொண்டு ஓடிப் போனால், அல்லது குடியிருக்கும் வீடு இடிந்து விழுந்து குட்டிச் சுவரானால் பிள்ளை அழாது. அப்படியே, மனிதர்கள் அற்பப் பொருளை இழந்து போனால் அல்லது தங்கள் வேலையில் யாதொரு நஷ்டம் வந்தால், துக்கப்பட்டு கண்ணீர் சிந்தி, உடனே தக்க பரிகாரம் தேடு வார்கள். வந்த நஷ்டத்தை எவ்வகையாலும் பரிகரிக்க வழி பார்ப் பார்கள். ஆனால் ஆத்துமம் கெட்டுப் போனாலோ, சர்வேசுர னுடைய இஷ்டப்பிரசாதத்தை இழந்தாலோ, இவர்கள் கண் கலங் காது, இவர்கள் மனதில் துக்கமிராது. இந்த நஷ்டத்தைப் பரிகரிக்க, எவ்வித முயற்சியும் செய்யார்கள். இந்த வித்தியாசத்துக்குக் காரண மென்ன? இவர்களுக்கு ஆத்தும் இரட்சணியம் எவ்வளவு மேலான தென்று அற்பமும் தெரியாது. இவர்கள் மதிப்புப் பிரகாரம் ஆத்தும் இரட்சணிய அலுவல் எல்லா அலுவலிலும் கடைசி ; ஓர் அற்பக் காரியம். இதைச் செய்யலாம், செய்யாமல் விடலாம்; மோசம் ஒன்றுமில்லை. இதில் மோசம் இருந்தாலும் கவலையில்லை, இதைச் செய்யவும் கடமையில்லை என்று எண்ணுவார்கள்.

சகோதரா! உன் ஆன்ம இரட்சணிய அலுவலைச் செய்ய உனக்குக் கடமை இல்லையா? யார் இதை உனக்குச் சொன்னவன்? நாம் இரண்டாம் பாகத்தில் சொல்லப் போவதைக் கவனமாய்க் கேள்.