நாள் 1, தியானம் 3, ஆத்தும இரட்சணியம் மகா முக்கிய அலுவல் - இரண்டாம் பாகம்

ஆத்தும இரட்சணியமாகிற தொழில் தன் இயல்பிலே முக்கிய மானதாயிருப்பதுமன்றி, அதைச் செய்யும்படி மனிதனுக்கு விசேஷ கடமையும் உண்டு. அதெப்படியெனில்: சர்வேசுரன் மனிதனைச் சிருஷ்டித்தபோது அவனுக்குப் புத்தியறிவுள்ள ஆத்துமத்தைக் கொடுத் தார். இந்த ஆத்துமம் சர்வேசுரனிடமிருந்து வந்த ஆத்துமமானதால் சர்வேசுரனிடம் திரும்பவும் அது போய்ச் சேர வேண்டும். சர்வேசுர னிடத்தில் திரும்பவும் ஆத்துமத்தைச் சேர்க்கும் தொழிலைச் சர்வேசுரன் ஒவ்வொருவனுக்கும் கடமையாய் நிரூபித்திருக்கிறார். கடலிலிருந்து தண்ணீர் ஆவியாய் எழும்பி மேகமாய் மேலே போனா லும், அது திரும்பவும் பூமிமேல் மழையாய் விழுந்து தானிருந்து போன கடலிலே மறுபடியும் விழும். அப்படி விழுவது இயற்கை ஒழுங்கின் முறை. அது போலவே மனிதனும் சர்வேசுரனிடமிருந்து வந்த ஆத்துமத்தை சர்வேசுரனிடம் திரும்பவும் சேர்ப்பது அவனு டைய கடமை. இதற்காகவே அவன் உலகத்திலிருக்கிறான். எந்தெந்த வேலைகள் செய்தாலும், என்ன அந்தஸ்திலிருந்தாலும், ஆத்தும் இரட்சணிய வேலை அவன் கண்முன் எப்போதுமிருக்க வேண்டிய வேலை. இரத்தினமிழைத்த பொன்மயமான சிம்மாசன் மீதிருந்து தேசங்களை ஆளும் அரசன் முதல், கையில் ஓடெடுத்து வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து பிழைத்துவரும் எளியவன் வரை, சகலரும் எந்த அலுவலை இஷ்டம்போல் செய்தாலும், இந்த ஆத்தும இரட்சணிய அலுவலை அவசியம் செய்வது அவர்கள் மேல் பொறுத்த கடன். உலகில் அவர்கள் மனிதராயிருப்பதற்கு அதுவே காரணம்.

ஆனால் ஆத்தும இரட்சணிய அலுவல் எல்லா அலுவலிலும் முக்கியமானதென்று நாம் சொல்லும்போது, மற்ற அலுவல்களைக் கவனிக்கத் தேவையில்லை என்பது நமது கருத்தல்ல. வேதவல்லுன் ரான அர்ச். அகுஸ்தீன் சொல்வது போல், சர்வேசுரனைச் சார்ந்த அலுவலாகிற ஆத்தும் இரட்சணிய அலுவலை முந்தி கவனித்து, மற்ற உலக சம்பந்தமான வேலைகளை இந்த மேலான அலுவலுக்குச் சார்புள்ளவைகளாகச் செய்து, எல்லா அலுவல்களையும் சர்வேசுர னுக்காகச் செய்வதுதான் முறை. சர்வேசுரனுக்கு ஒன்று உலகத்துக்கு ஒன்று என்று உன் வேலைகளைப் பாகம் செய்து பிரிக்காமல், எல்லா வற்றையும் சர்வேசுரனைப் பற்றி உன் ஆத்தும இரட்சணிய அலுவலின் அநுகூலத்துக்காகச் செய்வதே ஒழுங்கு. நீ செய்யும் பல வேலைகளில் ஏதாவது ஒன்று ஆத்தும் இரட்சணியமாகிற முதல் முக்கிய வேலைக்கு விரோதமானால் அதை முழுதும் நீக்கி வைப்பது உன் கடமையாகும். அந்த வேலை உனக்கு எவ்வளவு லாபமுள்ளதாயினும், அதை விட்டு நீங்குவது கஷ்டமாயினும், இதெல்லாம் கவனியாமல், ஆத்தும் இரட்சணியத்துக்காக அதை நீக்கிவிட வேண்டும். ஆத்தும் இரட் சணியம் ஒன்றே மகா கடமையான அலுவல், இத்துடன் இசைந்து வராத வேறெந்த அலுவலும் தகாத அலுவல்.

வேதசாட்சிகள் இந்த சத்தியத்தை நன்றாய் அறிந்ததால்தான், சர்வேசுரனுக்குத் துரோகம் செய்து தங்கள் ஆத்துமத்தை இழந்து போவதைவிட, துன்ப வேதனைப்பட்டு, இரத்தத்தைச் சிந்தி, உயிரைக் கொடுப்பது உத்தமம் என்று எண்ணி துணிவோடு மரித்து வேதசாட்சிய முடி பெற்றார்கள்.

திருச்சபையின் ஆதிகால சரித்திரத்தில் ஓர் வாலிபனைப் பற்றி சொல்லியிருக்கும் நிகழ்ச்சியைக் கேளுங்கள். கொடுங்கோலனான அரசன், மேல்குலத்தில் பிறந்த ஓர் கிறீஸ்தவ வாலிபனைப் பிடித்து, அவன் வேதத்தை விடும்படி தன்னால் முடிந்த முயற்சியெல்லாம் செய்தான். வாலிபன் மனம் அசையவில்லை. அரசன் கேட்ட பல கேள்விக்கெல்லாம் வாலிபன் ஒரே மறுமொழியாக : நான் கிறீஸ் தவன், என் ஆத்துமத்தை நான் இரட்சிக்க வேண்டும் என்றே சொல்வான். அரசன் கோபங்கொண்டு கூராணிகள் நிறைந்த சக்கரத்தில் இளைஞனைச் சேர்த்துக் கட்டி உருளையை விசையுடன் சுற்றிச் சுழற்றும்படி செய்தான். இரத்தம் தெறித்துப் பாய்ந்தது. சதைகள் துண்டு துண்டாய்க் கீழே விழுந்தது. கல்நெஞ்சனான அரசன் கிறீஸ்துவனை நோக்கி: ஆ ஆ உறைக்குதா? இனியாகிலும் புத்தி வருமா? உன் வேதத்தை விடமாட்டாயா? என்று கேட்கையில், கிறீஸ்துவ வாலிபன் அரசனைப் பார்த்து நகைத்து : ஓ! ஓ! இதற் கெல்லாம் பயந்தவனா? என் ஆத்துமத்தை நான் இழந்து நரகத்தில் விழவோ? வேண்டுமானால் இன்னும் மீதியாயிருக்கும் இரத்தத் தையும் தாராளமாய் சிந்து. என் ஆத்தும் இரட்சணியத்துக்குத் துரோகம் செய்யமாட்டேனென்று துணிவாய்ச் சொன்னான். இதைக் கேட்ட கொடுங்கோலன், கோபம் மனதில் பொங்க: அப்படியா! நல்லது நல்லது. நீ உன் ஆத்துமத்துக்குத் துரோகம் செய்து அதைக் கட்டாயமாய் நீ இழந்து போகும்படி நான் செய்வேன் பார் என்று சபதம் கூறி, வாலிபக் கிறீஸ்துவனை பாவத்தில் விழும்படி செய்ய ஒரு கெட்ட ஸ்திரீயை இவனிடம் ஏவிவிட்டான். வெட்கமும் நாண மும் இழந்த கெட்ட ஸ்திரீ தன் கிட்ட வருவதை வாலிபன் பார்த்து, கட்டப்பட்டிருந்ததினால் அவளை அடித்துத் துரத்தவும் அல்லது தப்பித்து ஓடவும் முடியாதென்று கண்டு, அவள் தன் சமீபம் வந்த வுடன் தன் நாக்கை கண்டதுண்டமாய் கடித்து அந்தத் துண்டுகளை அவள் முகத்தில் துப்பி, பாதி நாக்கோடு அவளைப் பார்த்து : சீ , நரகப் பிசாசே! கிட்ட வராதே. நான் சர்வேசுரனுடைய பிள்ளை , அப்பாலே போ என்று அவளை விரட்டினான். அவளும் இவ்வளவு மனத் துணிவைக் கண்டு வெட்கி நாணி ஓடிப்போய் விட்டாள். கிறீஸ்துவர்களே! இந்த வாலிபன் செய்ததைக் கேட்டு ஆச்சரியப்படாதவர் யார்? தன் ஆத்துமத்தை எப்படியாகிலும் இரட்சிக்க வேண்டுமென்று இவன் துணிந்திருந்தான். இந்தத் துணிவு, சகோதரா! உனக்கு இருக்கின்றதா? கேள். நீயே உன் ஆத்துமத்தை இரட்சியா விடில் உன் தாயும், தகப்பனும், சுற்றத்தார் சிநேகிதரும், குருவும் உபதேசியும் இரட்சிக்கமாட்டார்கள். சர்வேசுரன் முதலாய், உன் சம்மதமின்றி உன்னை சிருஷ்டித்தாலும், உன் சம்மதமின்றி உன்னை இரட்சிக்க மாட்டார். உன் ஆத்துமத்துக்கு நீயே உத்தரவாதி. அதன் லாபமும் நஷ்டமும் உன்னையே சார்ந்தது. இந்த சத்தியத்தை இப்போதாகிலும் கண்டுபிடிக்கிறாயா? இதைத் துணிந்து செய்ய உனக்கு மனம் வந்ததா? இன்னும் நாம் மூன்றாம் பாகத்தில் சொல்லப் போவதைக் கவனமாய்க் கேள்.