இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாள் 1, தியானம் 3, ஆத்தும இரட்சணியம் மகா முக்கிய அலுவல்.

அமெரிக்கா தேசத்துக்குச் சமீபத்தில் பல தீவுகள் இருக்கின்றன. அங்கே ஒரு காலத்திலிருந்த குடிகள் எல்லாரும் அஞ்ஞானிகள். இவர்களுக்குச் சத்திய வேதத்தைப் பிரசங்கிக்க ஓர் குரு போனார். தேவ உதவியால் ஒரு தீவாரும் அவர்களுடைய சிற்றரசனும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று பக்தி விசுவாசமுள்ள கிறிஸ்துவர்களானார்கள்.

இவர்களை வேதத்தில் உறுதிப்படுத்திய பின், குருவானவர் இந்தத் தீவை விட்டு வேறொரு தீவுக்குப் போனார். இவர் போன சமயம் பார்த்து, ஒரு புரோட்டஸ்டாண்டு பாதிரி நல்ல பயிரிலே திருடன் களைகளை விதைத்தது போல, இந்தத் தீவில் நுழைந்து, புதிதாய் ஞானஸ்நானம் பெற்ற தீவாரை எளிதில் மயக்கி பதிதர்களாக்கலாமென்று எண்ணித் துணிந்தார்.

துணிந்த பாதிரியார் அரசனிடம் நேரே போய், தன் மதமே கிறீஸ்து மதமென்றும், கத்தோலிக்க வேதமோ தவறி விழுந்த பொய் வேத மென்றும் இப்படியாய், தன் வாயில் வந்ததெல்லாம், பதிதர்கள் எந்த நாளிலும் பிதற்றுவது போல் பிதற்றினார். தீவரசன் புதுக்கிறீஸ்தவனாயினும் புத்திசாலி. சத்திய வேதத்தின் உண்மை யைத் தெளிவாய் அறிந்தவன். பாதிரியார் சொன்ன குருட்டு நியாயங்களை இவன் மறுத்துப் பேசினான்.

பாதிரியார் எல்லா நியாயத்துக்கு மேலாய், பண ஆசையாகிய நியாயத்தை தமக்குக் கடைசி ஆதாரமாக வைத்திருந்தார். ஆகையால் அரசனை நோக்கி: பிரபு! நீங்கள் புரோட்டஸ்டாண்டு வேதத்தில் சேர்ந்தால் எங்கள் மிஷன் சங்கத்தாருக்குச் சொல்லி உங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கோவில் தர்ம விஷயமாய்க் கொடுக்கும்படிச் செய்வேன். சம்மதமோ? என்று கேட்டார். அரசன் புன்னகை காட்டி அது போதாது என்றான். அதற்குப் பாதிரியார்: பிரபு, ஈராயிரம் ரூபாய் கொடுத்தால் சம்மதிப் பீரோ? என்று கேட்க, அதுவும் போதாதென்று அரசன் சொல்ல, பாதிரியார் கலங்கி இரண்டாயிரம் ரூபாய்க்குச் சம்மதியாதவன் எதற்கு சம்மதிப்பானோவென்று சந்தேகப்பட்டு : அரசே! கடைசி வார்த்தையாய் எவ்வளவுதான் நீங்கள் கேட்கிறீர்கள்? என, அரசன் சொல்வான்.

ஓ பாதிரியாரே கேளும். நான் இப்போது சத்திய வேத கத்தோலிக்க கிறிஸ்தவன். நான் இதை மறுத்து புரோட்டெஸ் டாண்டு ஆகும்படி எனக்கு எத்தனை ரூபாய் தேவையென்றா கேட் கிறீர்? நீர் கேட்கும் இந்தக் கேள்விக்கு, எங்கள் உள்ளூர் பாஷையில் அர்த்தமேதென்றால்: என் ஆத்துமத்தை உமக்கு நான் எந்த விலைக்கு விற்க சம்மதிக்கிறேன் என்பது போலாயிற்று. என் ஆத்துமத்தின் விலையா? கேளும் பாதிரியாரே! சேசுநாதர் சுவாமி தமது இரத்தத்தை விலையாய்க் கொடுத்து என் ஆத்துமத்தை வாங்கியிருக்கிறார்.

ஆகவே சர்வேசுரனுடைய இரத்தம்தான் என் ஆத்துமத்தின் விலை. நீர் இதிலும் மேலான விலை கொடுத்தால் மாத்திரம் நான் என் ஆத்துமத்தை உமக்கு விற்பேன். இல்லாவிடில் நீர் வந்த வழியைப் பார்த்துக் கொண்டு வாயை மூடி சீக்கிரம் போய்விடும் என்ற சிற்றரசன் இப்படிப் பேசினதைக் கேட்ட பாதிரியார், தலையைக் கவிழ்ந்து, வாய்க்குள் முனகிக்கொண்டு, மறுமொழி பேசாமல் போய்விட்டார்.

புதுக்கிறீஸ்தவனான இந்த அரசன், ஆத்துமம் எவ்வளவு மேலான தென்றும், அதை எப்படியாகிலும் இரட்சிப்பது எவ்வளவு அவசிய மென்றும் நன்றாய்க் கண்டுபிடித்திருந்தான். அப்படியே நீங்களும் ஆத்துமத்தை இரட்சிப்பது எவ்வளவு அவசியமென்று கண்டு பிடிக்கும்படியாய் இந்தத் தியானப் பிரசங்கம் செய்வோம்.

இதற்கு முன் செய்த இரண்டு தியானப் பிரசங்கத்தில், சர்வேசுரன், மனிதன் தமக்கு ஊழியம் செய்து, தன் ஆத்துமத்தை இரட்சிக்கும்படி, அவனைச் சிருஷ்டித்தாரென்றும், சிருஷ்டிகள் யாவும், அந்த ஊழியம் நன்றாய் மனிதன் செய்வதற்கு ஏதுவான கருவிகளாக உண்டாக்கப்பட்டனவென்றும் விவரித்துக் காண்பித்தோம்.

இந்தப் பிரசங்கத்தில் மனிதன் தன் ஆத்துமத்தை இரட்சிப்பது எவ்வளவு முக்கியமும் அவசியமுமான அலுவல் என்று விவரிக்கப் போகிறோம். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதும் தன் ஆத்துமத்தை இரட்சிப்பதும் ஒன்றுதான்.

இவ்விரண்டும் இணைபிரியாமல் சேர்ந்து ஒன்று ஒன்றுக்கு ஆதாரமாயிருக்கின்றது. தேவதாய் நாம் இந்த சத்தியத்தை உங்களுக்கு நன்றாய் விவரித்துக் காட்டும்படி நமக்குத் துணை செய்வார்களாக!