நாள் 1, தியானம் 2, சிருஷ்டிகளின் கதி, அதாவது சிருஷ்டிகளிருப்பதின் காரணம். - மூன்றாம் பாகம்.

அளவற்ற ஞான சுரூபியான சர்வேசுரன் சிருஷ்டிகளை உண்டாக்கும்போதே, ஒவ்வொன்றுக்கும் உரிய சுபாவ இயல்பு இன்னதென்றும், அந்த இயல்புக்குத் தகுந்தது இது, தகாதது இதுவென்றும் ஆதியிலேயே திட்டஞ் செய்தார். அந்த ஒழுங்குப்படி ஒவ்வொரு உயிரியும் தன் சுபாவ இயல்புக்கு உரியவைகளைத் தேடி அநுபவித் தால், அதற்கு சர்வேசுரன் குறித்த பாக்கிய ஆனந்தத்தை அனுபவிக்கலாமேயன்றி, சுபாவ இயல்புக்கு சர்வேசுரன் நியமிக் காதவைகளைத் தேடினால், பாக்கியம் அதில் தோன்றாது. இந்த ஏற்பாட்டால், தாகக் கொடுமையால் வருந்தி நா வறண்டு இருக்கும் போது தாகம் தீர பரந்து பெருகி இருக்கும் கடலின் நீரை கையால் அள்ளி எவ்வளவு நீ குடித்தாலும் உன் தாகம் தீருமோ? தீராததுமன்றி தாகம் முன்னிலும் அதிகமாகும். இதற்குக் காரணமென்ன? நீ அள்ளிச் சாப்பிட்டது தண்ணீரல்லவா? தண்ணீராயினும் சர்வேசுரன் ஆதியிலே மனிதன் தாகத்தைத் தீர்க்கும் குணத்தைக் கடல் தண்ணீ ராகிய உப்புத் தண்ணீருக்குக் கொடாமல், தெளிந்த ஊற்றின் தண்ணீருக்குக் கொடுத்திருக்கிறார். இந்த விதிப்படி தாகமுள்ளவன் தாகம் தணிய ஒரு கைநிறைய நல்ல தண்ணீர் சாப்பிட்டாலும் அவன் தாகம் அதனால் தணியும். புலி பசித்தாலும் புல்லைத் தின்காதாம். பசுவோ புல்லைத் தின்று பசியை ஆற்றும். ஏன் இந்த வித்தியாசம்? ஏனெனில் சர்வேசுரன் ஆதியிலே அந்தந்தப் பிராணிக்கு குறித்த பொருளே அதற்குச் செல்லுமேயன்றி அவர் குறியாதது செல்லாது.

இதுபோலவே சர்வேசுரன் ஆதியிலே உருவமற்ற ஆத்துமத்தைத் தமது சாயலாய்ச் சிருஷ்டித்து சரீரத்தோடு சேர்த்து மனுஷனாகச் செய்த போது, தமக்கு எது பாக்கிய ஆனந்த திருப்தி கொடுக்குமோ அதுவே தமது சாயல் பெற்ற மனிதனுக்கும் திருப்தி தருமென்று தீர்மானித்தார். அதனால் சர்வேசுரனுக்குப் பாக்கிய ஆனந்தம் கொடுக்கக்கூடியது எதுவோ அதுவே மனிதனுக்கும் பாக்கியம் கொடுக்கும். சர்வேசுரன் பிற பொருட்களில் தங்காமல் தாமே தமக்குப் போதுமான பாக்கிய ஆனந்தமாயிருப்பது போல, மனிதனும் சிருஷ்டிகளில் தங்காமல், சர்வேசுரனிடத்தில் தங்கி நின்றால் மாத்திரம் தனக்குத் திருப்தியான பாக்கியம் அடைவான். இதைக் காட்டும்படி சர்வேசுரன் வேதாகமத்தில்: நாமே உன் ஆசை அளவுக்கு மேலான வெகுமானமாய் உனக்கு இருப்போம் என்று சொல்கிறார் (ஆதி.15:1).

புண்ணியவான்களும் புனிதர்களும் இந்த உண்மையை அறிந்ததினால் தான் உலகத்தின் ஆஸ்தி செல்வம், மகிமை பெருமை, இன்ப சுகம், எல்லாம் அறவே வெறுத்து, துறவறம் பூண்டு, வனாந்தரங்களிலும் மடங்களிலும் பிரவேசித்து, சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்வதால் உண்டாகும் பேரின்ப பாக்கியத்தை அனுபவித்து வருகிறார்கள்.

சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதால் இந்த உலகத்தில் முதலாய் இவர்கள் மனதில் அநுபவிக்கும் சமாதானம், ஆன்ம சந்தோஷத்தை ஆனந்தத்தை உலகத்துக்கு அடிமையாய் ஊழியம் செய்கிறவர்கள் அறியவே மாட்டார்கள். பரிசுத்தவான்களில் சிலர் இந்த ஞான ஆனந்த சந்தோஷத்தின் பெருக்கத்தைச் சில சமயங்களில் பொறுக்கமாட்டாமல், சுவாமி! போதும், இவ்வளவு போதும் என்பார்கள்.

கிறீஸ்தவர்களே ! சர்வேசுரன் உங்களுக்குக் கடைசி வெகுமதியாக நியமித்திருக்கும் பேரின்ப பாக்கியம் எத்தன்மையதென்று சற்று கவனித்துப் பாருங்கள். உங்களுக்கும் தமக்கும் ஒரே விதமான பாக்கி யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். உங்களைத் தம்மோடு ஒருவாறு ஒரே சமமான நிலையில் ஏற்படுத்தியிருக்கிறார். சர்வேசுரனுக்குத் திருப்தி யும் ஆனந்தமுமாயிருப்பதே உங்களுக்குத் திருப்தியும் ஆனந்தம் மாகும். சிருஷ்டிகளில் எந்தப் பொருளும் உங்களுக்கு மெய்யான பாக்கியம் தராது. அவை எல்லாம் உங்களுக்குத் தாழ்ந்தவைகள். நீங்களோ சர்வேசுரன் ஒருவருக்காகவே சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறீர்கள். அவர் ஒருவர் மட்டுமே உங்களுக்குத் திருப்தி தரும் பாக்கியம். இதுவெல்லாம் நன்றாய்க் கண்டுபிடிக்கிறீர்களோ? உங்களுடைய உயர்ந்த கதி இன்னதென்று இப்போது உங்களுக்குத் தெரியுமா?

ஓ! அன்பு நிறைந்த ஆண்டவரே! என்னை எவ்வளவோ மேன்மைப்படுத்தி, ஓர் வகையில் உமக்கு நான் சமானமுள்ளவன் போலாகச் செய்திருக்கிறீர்! சுவாமி உமக்குப் பாக்கியம் எதுவோ அதுவே எனக்கும் பாக்கியம். உமக்குத் திருப்தி தருவது எதுவோ அதுவே எனக்கும் திருப்தி தரும். உமக்கு இயல்பாயுள்ள கதியும், எனக்கு தேவரீர் குறித்த கதியும் ஒன்றுதான். ஆனால் ஐயோ! இது மட்டும் என்னுடைய உன்னத கதியை பொருட்களில் பாக்கியமும் திருப்தியும் தேடி அலைந்தேன். கடல் நீரைக் கையால் அள்ளி என் பாக்கிய ஆசையாகிய தாகம் தீருமென்று சாப்பிட்டேன். தேவா மிர்த நீரூற்றாகிய உம்மிடத்தில் வராமல் சாக்கடைத் தண்ணீரைச் சாப்பிட்டேன். ஆனால் என் தேவனே ! இன்று தேவரீர் உதவியால் பாக்கியம் உம்மிடத்தில்தான் இருக்கிறதென்று கண்டுபிடித்தேன். உம்மிடம்தான் முழுமையான பாக்கியம் எனக்கு இருக்கிறதென்று சிருஷ்டிகளெல்லாம் கூவி இரைந்து விடாமல் ஒலியெழுப்புகின்றன. இதோ இன்று நான் துவக்குகிறேன். உமது ஊழியமே எனது பாக்கியம். நான் ஜீவித்தாலும் மரித்தாலும் உமக்கு நான் சொந்தமானவன்.

ஆமென் சேசு.