நாள் 1, தியானம் 2, சிருஷ்டிகளின் கதி, அதாவது சிருஷ்டிகளிருப்பதின் காரணம். - இரண்டாம் பாகம்.

சிருஷ்டிகள் எல்லாவற்றையும் சர்வேசுரனே உண்டாக்கினாரென் றும், அவைகள் யாவும் அவருக்கே சொந்தமென்றும், அவைகளை சர்வேசுரன் ஊழியத்துக்காக உபயோகிக்க வேண்டுமென்றும், அப்படி உபயோகம் செய்வதில், எது தக்கது எது தகாதது என்று சோதித்து புத்தியோடு நடக்க வேண்டுமென்றும் முதற்பாகத்தில் விவரித்துக் காண்பித்தோம். இதில் அடங்கியிருக்கும் விசேஷம் ஒன்றை இரண்டாம் பாகத்தில் விவரிக்கப் போகிறோம்.

சர்வேசுரன் கோடானு கோடி புதிதான சிருஷ்டிகளை மனிதனுக் காகவும் மனிதனைத் தமக்காகவும் சிருஷ்டித்திருக்கிறார். இந்தச் சிருஷ்டிகள், நாம் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யும்படி, நமக்கு கருவியாகவும், உதவியாகவும் கொடுக்கப்பட்டனவேயன்றி இவை நமக்கு ஆதிகாரணமான கதி அல்ல. கதி அல்லாத போதே இவற்றில் நமக்குத் திருப்தியும் பாக்கியமும் சந்தோஷமும் இருக்க மாட்டாது. தன் சொந்த தேசத்துக்குப் பிரயாணம் செய்கிறவன், போகிற வழியில் குளிர்ந்த நிழல் கொடுக்கும் பூஞ்சோலையும், அழகிய தோட்டங்களும், சிறந்த வீடும் அமிர்தமான தண்ணீரும் இருந்தாலும், அவை தன் ஊருக்குப் போகும் வழியின் தோற்றமே அன்றி தன் சொந்த ஊர் அல்லவென்பதால், இங்கே பாதையிலே சுகமாக இருக்கலாமென்று எண்ணி அங்கே தங்க மாட்டான். பாதை வழியாய் நடந்து போய், தான் பிறந்த ஊரில் பெற்றோர் சுற்றம் தாய் பிள்ளை இருக்கும் வீட்டில் சேர்ந்தால் மாத்திரம் அவனுக்குத் திருப்தியும் சந்தோஷமும் உண்டாகும். அதுபோல், இந்த உலகத்தில் பணம் காசு, மகிமை பெருமை, இன்ப சுகம் முதலியவை எவ்வளவு மன ரம்மியமாயத் தோன்றினாலும், இவற்றில் நமது மனது தங்கி நின்று, பாக்கிய சுகத்தைத் தேடும்படி விடக்கூடாது. ஏன் போகிற வழியிலே நிற்க வேண்டும்? மலையின் உச்சியிலிருந்து ஓடிவரும் ஆறானது தான் சேரவேண்டிய கடலை நோக்கி வழியில் நில்லாமல் ஓடுவது போல், சர்வேசுரனுக்காக சிருஷ்டிக்கப்பட்ட நாம், சர்வேசுரனைத் தேடிப் போய், அவரிடம் சேர்ந்து தங்கி இருக்கும் வரை, நடுவழியில் சிருஷ்டிகளிடம் தங்காமல் நடந்து செல்ல வேண்டும்.
இதில் கவனிக்கவேண்டிய இன்னும் ஓர் விஷயம் உண்டு. நாம் " சர்வேசுரனுக்காக மட்டும் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதால், சர்வேசுரனிடம் மட்டும் நமக்குப் பூரண திருப்தி கொடுக்கும் பாக்கிய சந்தோஷமிருக்குமே தவிர சிருஷ்டிக்கப்பட்ட எந்தப் பொருளிடமும் இருக்காது. அர்ச். அகுஸ்தீன் சர்வேசுரனைப் பார்த்து: ஆண்டவரே! எங்களை உமக்காகவே சிருஷ்டித்தீர். உம்மிடம் நாங்கள் வந்து தங்கும் வரை எங்கள் மனது கலங்கி அலையும் என்று பிரார்த்திப்பார். இதன் காரணமாக, சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யாமல், சிருஷ்டிகளைத் தேடிப் போய் அவற்றை அனுபவித்தால் தனக்குப் பாக்கியமும் திருப்தியும் உண்டாகுமென்று எண்ணுவது முதிர்ந்த பைத்தியம். உலகத்தில் மகிமையும், பெருமையும் தனக்கு வர வேண்டுமென்றும், தன் பெயரும் கீர்த்தியும் எங்கும் பிரபல்லியமாக வேண்டுமென்றும், எல்லாரும் தன்னைக் கனமாய் எண்ணி மதிக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டு அதற்காகத் தன் ஜீவிய நாட்களைச் செலவழித்து திரிவது முதிர்ந்த பைத்தியம். ஆஸ்தி திரவிய செல்வமுள்ளவனே பாக்கியவான், பணமில்லாதவன் பிணம் போலாவான் என்று எண்ணி, இராப்பகலாய் பணத்துக்காக உழைத்து, திரைகடலோடியும் திரவியம் தேடி வருவதும் முதிர்ந்த பைத்தியம். இன்பசுக சந்தோஷங்களைத்தேடி காம வெறியனாய் சிற்றின்பத்தில் அமிழ்ந்தி சரீர சுகபோகத்தில் பாக்கியமும், திருப்தியும் உண்டென் றெண்ணி தன் வாழ்நாட்களைச் செலவழிப்பதும் முதிர்ந்த பைத்தியம்.

ஓ! கிறீஸ்தவர்களே! நாம் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். ஒருவனுக்கு எவ்வளவுதான் திரண்ட செல்வமும், மகிமை பெருமையும், இன்பசுகமும் இருந்தாலும், இவற்றால் அவனுக்கு ஒருபோதும் திருப்தி என்பதே வராது. எவனும் இவற்றை நான் அநுபவித்ததில் திருப்தி அடைந்தேன்; இவ்வளவு எனக்குப் போதும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டான். அக்கினி தனக்கு இரையாய்ப் போட்ட விறகுக் கட்டைகள் போதும் என்று சொல்லுமோ? சாலமோன் என்ற மகா ஞானியைப் போல், திரண்ட செல்வமுள்ளவன் யார்? பொன்னும், வெள்ளியும், நவரத்தின மணிகளும் இவர் அரண்மனையில் அளவற்ற அம்பாரமாய்க் குவிந்திருந்தன. அவருக்கிருந்த புத்தியும், மதியூகமும், விவேக விளக்கமும் மனிதன் புத்தி எல்லையைக் கடந்தது. அவருடைய சாமர்த்தியத் திறமையும், பரந்த கல்வியறிவும் உலகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு புகழ்பெற்ற மகா ஞானி மதி தப்பி சிற்றின்ப சுகபோகத்தையும் நுகர வேண்டுமென்று தன்னை மறந்து, தன்னைச் சிருஷ்டித்த சர்வேசுரனை மறந்து, மிருக சுபாவத்துக்கியல்பான நீச சுகபோகத்தை அனுபவித்துப் பார்த்தார். இவையெல்லாம் இஷ்டம் போல் அநுபவித்த பின், தன் மனதில் திருப்தியான சந்தோஷம் காணவில்லை . சலிப்பும், கவலையும், துயரமும், மனக்குத்தும் கடல் போல் பெருகிக் கொதித்தது. பகலில் மதிமயக் கமும், இரவில் கண் மயக்கமும் உண்டாக செய்வது இன்னதென்று அறியாமல் திணறினார். கடைசியில் சாகுமுன் புத்தி தெளிந்து, தானே பட்டு அறிந்த புத்தியை உலகமெல்லாம் அறியும்படி எழுதி வைத்ததாவது: எல்லாம் வீணிலும் வீண், எல்லாம் விழலிலும் விழல் (சங்க. 1:2). இதுதான் மதிநுட்பம் பெற்ற அதிவிவேகி சாலமோன் ஞானியின் அநுபவ வாக்கியம்.

சாலமோன் தன் மட்டில் அறிந்த இந்த விஷயத்தை உலகத்திலுள்ள மனிதரெல்லோரும் தங்களிடத்திலும் பிறரிடத் திலும் பலமுறை கண் கூடாய்க் கண்டிருக்கிறார்கள். சகோதரனே கேள். நீ உலகத்துக்கெல்லாம் அதிபதி இராஜாவாயிருந்தாலும், சாலமோனிடமிருந்த திரவிய செல்வங்களிலும் பதின்மடங்கு அதிகம் உன் கையிலிருந்தாலும் உன் மனசுக்கு இவைகளால் திருப்தி வருமா? வராது. சலிப்பும் கவலையும் தான் உண்டாகும். இதற்குக் காரணமென்ன? இதின் காரணம் இன்னதென்று மூன்றாம் பாகத்தில் விவரிப்போம். கவனமாய்க் கேள்.