நாள் 1, தியானம் 2, சிருஷ்டிகளின் கதி, அதாவது சிருஷ்டிகளிருப்பதின் காரணம். - முதல் பாகம்.

நம்மைச் சுற்றிலும், நமக்கு மேலும் இருக்கும் கோடானுகோடி சிருஷ்டிகளை யார் உண்டாக்கி உலகத்தில் வைத்தார்? இவைகள் தங்களாலேயே உண்டானதோ அல்லது மனிதர்களில் எவனாயினும் இவைகளை உண்டாக்கினானோ? தானாய் ஒரு சிறு புல்லும் உண்டாகாது. மனிதரில் எவனும் ஓர் பசும் புல்லையும் சிருஷ்டிக்க சக்தி அற்றவன். சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஒரு பொருள் அல்லது உயிரும், எவ்வளவு அறிவு சாமர்த்திய திறமை உள்ளதாயினும், ஒன்றை வேறொன்றாக மாற்ற மாத்திரம் கூடுமே அன்றி, ஒன்றுமில்லாமல் ஒன்றை உருவாக்குவது அளவுள்ள வல்லமையால் இயலும் தொழில் அல்ல. சர்வ வல்லப சர்வேசுரன் ஒருவரே ஒன்றுமில்லாத போதே ஒன்று உண்டாகும்படி செய்ய அவருடைய வாக்குக்கு வல்லமையுண்டு. ஆகையால் நம்மை எப்பக்கத்திலும் சூழ்ந்திருக்கும் ஜீவகோடிகள் யாவையும் சிருஷ்டித்தவர் சர்வேசுரன். அவரிடமிருந்தே சகலமும் வருகின்றன.

சகல சிருஷ்டியும் சர்வேசுரனிடமிருந்து வருவதால் இவை எல்லாம் சர்வேசுரனுக்குச் சொந்தம். சர்வேசுரன் இவற்றுக்கு எஜமான். எஜமானானதால் இவற்றின் பேரில் பூரண சுதந்தர உரிமை சர்வேசுரனுக்கு உண்டு. இந்த சுதந்தரத்தால் தமது இஷ்டம்போல் இவற்றை எவனுக்கும் கொடுக்கலாம், கொடுத்ததை எடுத்துக் கொள்ளலாம், அல்லது குறைக்கலாம். ஒருவனை செல்வந்தனாயும், வேறொருவனை தரித்திரனாயும் செய்வார். இவன் தேக செளக்கியமுள்ளவன், அவன் வியாதியஸ்தன். இவன் கொள்வான். அவனோ பரம ஏழை ; ஒருவன் புத்திமான், வேறொருவன் யான். இப்படியாய் சர்வேசுரன் தமது பிரியம் போல் செய்கிறார். ஓரிடத்தில் நிறையக் கொடுக்கிறார், வேறிடத்தில் குறையக் கொடுக்கிறார். இன்னோரிடத்தில் கொடுத்ததை எடுத்துக் கொள்கிறார். இதனால் மனிதனுடைய நிலை, கடலின் அலைபோல் பெருகியும் குறைந்தும் மாறியும் மங்கியும் வருகின்றது.

சர்வேசுரன் இப்படிச் செய்வதைப் பார்த்து, எவனும் எதிர்த்துப் பேசி ஏன் இப்படி மாறுபாடாய்ச் செய்கிறீர் என்று சர்வேசுரனைக் கேட்கலாமா? குயவன் வித்தியாசமுள்ள அளவிலும் நிறத்திலும் பல பாத்திரங்களைச் செய்கிறான். கோலமிட்ட குட்முமுண்டு, கோலமில்லாத வெறும் பானையுமுண்டு. பெரிதான குடமுமுண்டு, வெகு சிறிதான சட்டியுமுண்டு. கோலமில்லாப் பாத்திரம் ஏன் எனக்குக் கோலம் போடவில்லையென்றும், சிறிய குடம் ஏன் என்னைப் பெரிதாய் செய்யவில்லையென்றும் குயவனைப் பார்த்து முறையிட்டுக் கேட்குமோ? (உரோ. 9:20, 21). கேட்டால் குயவன் : என் இஷ்டம், என் மனம் போல் கோலமிடுவேன், சிறியதாய்ச் செய்வேன். ஏன் என்று, சீ மண்ணே ! என்னைக் கேட்க உனக்கும் வாயுண்டா? என்று சொல்வான். அப்படியே சர்வேசுரன் நிறையக் கொடுத்தாலும், குறையக் கொடுத்தாலும், அல்லது கொடுத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டாலும், யோபு என்கிற மகாத்துமாவைப் போல், ஆண்டவரே இவைகளை எனக்குக் கொடுத்தார்; அவர் கொடுத்ததை எடுத்துக் கொண்டார்; அவருடைய திருநாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (யோபு 1:21) என்று சொல்வது நமது கடமை.

இவ்விதம் சந்தோஷமாய் தேவசித்தத்துக்கு அமைந்து சொல் லும்படி காரணமேதெனில், நமக்கு எது வந்தாலும் அது சர்வேசுர னுடைய திவ்விய சித்தப்படியே வரும். அவருடைய பரிசுத்த சித்தப்படி வருவதெல்லாம் நம்முடைய நன்மைக்காகவே வரும் என்பது சத்தியம். அளவில்லா அன்போடு நம்மைச் சிநேகிக்கும் தகப்பன் சர்வேசுரனாதலால், அவர் நமக்கு அனுப்புவதெல்லாம் நம்முடைய பிரயோசனத்துக்காகவே அனுப்புவாரென்று நாம் திண்ணமாய் மனதில் எண்ண வேண்டும்.

அன்றியும், சிருஷ்டிகள் எல்லாவற்றையும், மனிதன் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய கருவியாகவும், வழியாகவும் அவர் உண்டாக்கி இருந் தாலும், இவை ஒரே சீராய், எல்லார் கையிலும், எந்தக் காலத்திலும், எப்போதும், தக்க கருவியாகாது. ஆனதால் சிருஷ்டிகளைத் தகுந்த காலத்தில், தக்க வகையில், சீரான அளவில், அதனதன் சுபாவத்துக்கு இசைந்த முறையில் அவரவருக்கு ஏற்ற அளவில் பிரயோகிப்பது அவசியம். மனிதன் புத்தி, பாவத்தால் மங்கிப் போய், அவன் மனசு துர்க்குணத்துக்குச் சார்புள்ளதாயும் அவன் சுபாவமே பலவீனப்பட்டுப் போயும் இருப்பதால், சிருஷ்டி கர்த்தர் விதித்த அறநெறி மீறி ஒழுங்கை மீறி பிரபஞ்ச நன்மைகளை நாடுகிறான். பால் தன்னிலே அமிர்தமாயினும் காய்ச்சல் உள்ளவன் அதைச் சாப்பிட்டால் அது நஞ்சாகலாம். நெருப்பு பயனுள்ளதாயினும் அதில் நீ உன் கையை வைத்தால் உன் கை வெந்து போகும். ஆதலால் சிருஷ்டிகளின் பயனுக்கு ஏற்ற ஒழுங்கேதெனில்: எவ்வளவுக்கு ஓர் சிருஷ்டி, மனிதன் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வதற்கு அவனுக்கு உதவியாயிருக்குமோ அவ்வளவுக்கு அதைப் பிரயோகிப்பதும், எவ்வளவுக்கு அது தடையாயிருக்குமோ, அவ்வளவுக்கு அதை நீக்கி வைப்பதும் ஆகிய இதுவே தங்கமான ஒழுங்கு. அப்படிதான், தோட்டக்காரனும் தன் வேலைக்குத் தகுந்த ஆயுதங்களைக் கொண்டே வேலை செய்வானல்லாமல் அந்த வேலைக்கு உதவாத ஆயுதங்களைத் தொட மாட்டான். கோடாலி எடுத்து மரத்தை வெட்டுவதற்குப் பதில், மண்வெட்டியோடு வெட்டப்போனால் மரம் விழுமா? கலப்பை எடுத்து உழுவதற்குப் பதில் அரிவாள் எடுத்துப் போனால் பூமியை உழுவாயோ? வேஷத்துக்குத் தக்க ஆட்டமும், ஆட்டத்துக்குத் தகுந்த பாட்டும், கூலிக்குத் தகுந்த வேலையும், வேலைக்குத் தகுந்த ஆயுதமும் வேண்டும். சிருஷ்டிகளை உபயோகிப்பதிலும் இதே ஒழுங்கை அநுசரிப்பது புத்திசாலித்தனம். நீ உன் ஜீவனாம்சத்துக்காக ஓர் வேலையிலிருப்பதால் பணம் வந்தாலும், அது சர்வேசுரனுக்கு நீ ஊழியம் செய்வதற்கு தன்னிலே பெரும் தடையாயிருக்கின்றதா? அப்போது அந்த வேலை உன் ஆத்தும இரட்சணியத்துக்குத் தடையான வேலை. அதை நீக்கி வைப்பது உன் கடமை. நீ ஒருவன் வீட்டுக்குப் போவது உனக்குப் பிரியமாயினும், அங்கே போவதால் பாவம் எப்போதும் வருகின்றதென்று நீ கண்டால் அந்த வீட்டுக்கு நீ போகக் கூடாது.

மேலும் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்ய சிருஷ்டிகளை உபயோகிக்கும்போது, அது உன் சுபாவத்துக்குப் பிரியமானதோ, அல்லது உனக்கு வருத்தமுள்ளதோ என்று பாராமல், சர்வேசுரனுக்கு நீ பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்ய எது அநுகூலமுள்ளது, எது தடையானது என்பதொன்றையே கவனிக்க வேண்டும். வைத்தியன் வியாதியஸ்தனுக்கு மருந்து கற்பிக்கும்போது அவன் நாவுக்கு எது ருசியுள்ளதென்பதைக் கவனிப்பானோ, அல்லது எது குணம் கொடுக்கும் என்பதைக் கவனிப்பானோ? மருந்து கசந்தாலும், அது உன் வியாதியை நீக்கும் மருந்தானால் நீ அதைச் சாப்பிடுவாயே. அப்படியே சிருஷ்டிகளைப் பயன்படுத்துவதிலும், உன் சுபாவப் பிரியத்தையும் உனக்கு வரும் வெறுப்பு அருவருப்பையும் நீ பாராமல், சர்வேசுரனுடைய ஊழியம் ஒன்றை மாத்திரம் உன் கண்முன் வைக்க வேண்டும்.

இதுவரை இந்தப் புத்திப்படி நீ நடந்தாயா? இப்போதாவது சிருஷ்டிகளின் உபயோகத்தைப் பற்றிய இந்தப் புத்திமதியை நீ கண்டுபிடிக்கிறாயா? கண்டுபிடித்தால் இனி எவ்விதம் உன் நடத்தையை சீர்படுத்தலாமென்று யோசித்துப் பார்.