இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நாள் 1, தியானம் 2, சிருஷ்டிகளின் கதி, அதாவது சிருஷ்டிகளிருப்பதின் காரணம்.

யாதோர் எஜமான் தன் தோட்டத்தில் வேலை செய்யும்படி வேலையாளை அமர்த்தினால் அவன் வேலை செய்வதற்கு தேவை யான ஆயுதங்களும் தளவாட சாமான்களும் எஜமான் கொடுப்பான். தோட்டக்காரனும் தன் எஜமான் கருத்துப்போல் ஆயுதங்களைப் பிரயோகித்து எஜமானுக்காக வேலை செய்வது அவன் கடமை.

அப்படியே சர்வேசுரன் மனிதர்களைச் சிருஷ்டித்து அவர்கள் தமக்கு ஊழியம் செய்யும்படியாக இந்த உலகில் அவர்களை வைத்திருக்கும் இந்த முதன்மையான அடிப்படை சத்தியத்தின் பேரில் முதல் தியானம் காலையில் செய்தோம். அதிலே, நாம் எல்லாரும் சர்வேசுரனிடமிருந்து வருகிறோமென்றும், சர்வேசுரனே நமக்கு எஜமான் என்றும், சர்வேசுரனுக்காகவே நாமிருக்கிறோமென்றும் விவரித்ததைக் கேட்டீர்கள்.

சர்வேசுரன் தமக்கு ஊழியஞ் செய்ய மனிதனைச் சிருஷ்டித்த பின்பு, இந்த ஊழியத்துக்கு உதவியான பல சிருஷ்டிகளையும் உண்டாக்கி உலகத்தில் வைத்திருக்கிறார். இதற்காகவே பலவகையான சிருஷ்டிகளை, நாம் வான மண்டலத்திலும் இந்தப் பூமியிலும் பார்க்கிறோம்.

சூரிய சந்திர நட்சத்திரங்களும், புல், பூண்டு, செடி, மரம், மிருக ஜாதிகள் முதலிய உயிருள்ளதும் உயிரற்றதுமானவைகளும், பொன்மணி, திரவியம், பெருமை, மகிமை, பெயர், கீர்த்தி, வியாதி, துன்பம், செல்வம், வறுமை முதலிய சகல வகை பொருட்களும், நிலைமைகளும், சம்பவங்களும், எல்லாம் சிருஷ்டிகள் என்ற பொது மொழியில் அடங்கியுள்ளன.

இவைகள் எல்லாம் எங்கேயிருந்து வருகின்றன, இவைகளுக்கு யார் எஜமான், எதற்காக இவைகள் இருக்கின்றன என்று முன் மனிதனைப் பற்றிக் கேட்ட இம்மூன்று கேள்விகளையும் சிருஷ்டிகளைப்பற்றி, அவைகளின் கதி இன்னதென்றறிய கேட்கப் போகிறோம்.

கேட்டால் மறுமொழி முன்போலவே சிருஷ்டிகள் எல்லாம் சர்வேசுரனிடமிருந்து வருகின்றனவென்றும், சர்வேசுரனே இவைகளுக்கு எஜமான் என்றும், சர்வேசுரனுக்காகவே இவை இருக்கின்றனவென்றும் அறிவோம். சிருஷ்டிகளிருக்கும் காரணத்தை அறிந்தால் அவைகளைத் தகுந்த வகையில் நாம் பிரயோகிக்கலாம். இதை அறியாததினால் அல்லவா அநேகம் பேர் சிருஷ்டிகளைக் ஒழுங்கீனமாக பயன்படுத்தி, மோசம் போய்க் கெட்டழிகிறார்கள்.

நாம் இங்கே விவரிக்கப்போகும் சத்தியம் அடிப்படை சத்தியத்தைச் சேர்ந்தது. இதை நீங்கள் நன்றாய்க் கண்டுபிடிக்கும்படி இஷ்டப் பிரசாதத்தின் மாதாவாகிற தேவதாய் கிருபை செய்வார்களாக!