நாள் 1, தியானம் 1, அறநெறி அடிப்படை சத்தியம் - மூன்றாம் பாகம்.

சர்வேசுரன் நமது சிருஷ்டிகர் என்றும், எஜமான் என்றும் இதுவரை விவரித்தோம். இனி அவர் நமது கடைசிக் கதியென்பதை எடுத்துக் காட்டப்போகிறோம். புத்தியுள்ள எந்த ஜீவப் பிராணியும், எதைச் செய்தாலும், அதற்கு ஓர் கருத்து, காரணம், நிமித்தம், நோக்கம் அல்லது கதி இருக்க வேண்டும். குடியானவன் வயலை உழுகிறான். உழுவதில் அவன் கருத்தென்ன? பயிர் விளைவு உண்டாக்குவது. வர்த்தகன் வியாபாரம் செய்கிறான். எதின் நிமித்தம்? வியாபாரத்தில் அவன் தேடும் கதி என்ன? இலாபம் சம்பாதிக்க.

அப்படியே அளவற்ற ஞானமுள்ள சர்வேசுரன் மனிதனை உண்டாக்கும்போது, ஓர் காரணத்தை உத்தேசித்து, அவனை அந்தக் கதிக்காக சிருஷ்டித்தார். சர்வேசுரன் அளவில்லா உத்தமர்; ஆனதால் தாம் செய்யும் சகல கிரியைக்கும் தமது உத்தம மகிமையையே காரணமாக வைத்து சகலத்தையும் தமது மகிமைக்காக சிருஷ்டிக்கிறார். ஆதலால் மனிதனையும் சர்வேசுரன் தமது மகிமைக்காகவே சிருஷ்டித்து உலகில் வைத்திருக்கிறார். (இசை. 43:21)

சர்வேசுரனுடைய மகிமைக்காக நாம் இருக்கிறோமென்றால், நாம் சர்வேசுரனை அறிந்து ஸ்துதித்து, அவரை வணங்கி நேசித்து, அவருக்கு ஊழியஞ் செய்யும்படியாய் இருக்கிறோமென்று அர்த்த மாகும். இதுவே மனிதன் கதி. இதற்காகவே நாம் உலகத்தில் மனிதராயிருக்கிறோம்.

சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்வது நமது முக்கிய தொழில். ஆனால் ஊழியஞ் செய்யும்படி முதலில் நாம் அவரை அறிய வேண்டும். நமது ஊழியம் அவருக்குப் பிரியமாயிருக்க அவரைச் சிநேகிக்க வேண்டும். அறிவோடும், சிநேகத்தோடும் செய்யும் ஊழியமே சிறந்த ஊழியம்.

இந்த ஊழியம் செய்வது மனிதனுடைய முதல் கடமை. இதற்காகவே சர்வேசுரன் நம்மை மனிதர்களாய் சிருஷ்டித்தார். இந்த ஊழியத்தை நாம் சரியாய்ச் செய்ய, சர்வேசுரன் நமக்குப் புத்தி, மனது சரீர அவயவங்கள் எல்லாம் துணைக்கருவிகளாகக் கொடுத் திருக்கிறார். ஆகையால் புத்தியுள்ள மனிதன் சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யாதிருப்பது எதற்கு ஒப்பாகும் என்றால்: மரங்கள், இலை, பூ, காய்கனி கொடாமல் வெறுமனே கட்டையாய் நிற்பதற் கும், சரீரம் அசைவின்றிக் கிடப்பதற்கும் சமானமாகும். அன்றியும் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்வது மனிதனுக்கு நிகரற்ற பெருமை. ஏனென்றால் சர்வேசுரன் இராஜாக்களுக்கு இராஜா (1 திமோ. 6:15), அதி உன்னத தேவன், சர்வ வல்லமை அவருக்கு இயல்பு. இவ்வித மகத்துவ பெருமையுள்ள ஆண்டவருக்கு ஊழியம் செய்வது, இராஜாக்களைப் போல அரசாளுவதற்குச் சமானம் என்று வேத அறிஞர்கள் சொல்கிறார்கள்.

சர்வேசுரனுக்கு ஊழியம் செய்வது மனிதனுக்குப் பெருமை மாத்திரமல்ல. அதுவே அவனுக்கு உண்மையான பாக்கியம், பூரண திருப்தி, கலப்பில்லா சந்தோஷம். சர்வேசுரனுடைய மகிமையும், நமது ஊழியமும் இணை பிரியாமல் சேர்ந்திருப்பதால், அவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, அவர் மகிமையை நாம் தேடுகிறோம். சர்வேசுரனும் நமக்கு வெகுமதியாக பாக்கியானந்தம் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் கொடுக்கிறார்.

உலக அரசர்கள் தங்களுக்கு ஊழியம் செய்கிறவர்களை, கடைசி காலத்தில் சில சமயம் மறந்து போவார்கள், அல்லது அவர்கள் செய்த ஊழியத்துக்குத் தக்க வெகுமதி கொடுக்க இயலாதவர்களாயிருப் பார்கள். அப்படியே ஊல்ஸி (Wolsey) என்ற மந்திரி ஒருவர் ஆங்கிலேய அரசனுக்கு வெகு வருஷம் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்தாலும், கடைசியில் நன்றியில்லாத அரசன் அவரைக் கைவிட்டு பரதேசியாக்கி அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்தான். மந்திரி, கொடுங்கோலன் செய்த நன்றியில்லாச் செய்கையை சாகும் தருணத்தில் நினைத்து கண்ணீர் விட்டு : ஐயோ! இதென்ன காலக்கொடுமை! நான் என் இராஜாவுக்கு ஊழியம் செய்வதில் காண்பித்த அக்கறையில் பாதி மாத்திரம் என் சர்வேசுரன் ஊழியத் தில் காண்பித்திருந்தால், அவர் என்னை இந்த வயோதிக காலத்தில், நரைதிரை விழுந்து கஷ்டப்படும் காலத்தில், இப்படிக் கைவிட் டிருக்க மாட்டாரே! என்று இவ்விதமாய் அழுது புலம்பினார்.

சகோதரரே! இப்படி அழும் காலம் வருமுன்னே , சர்வேசுரனுக்கு ஊழியம் செய்யத் துவங்குங்கள். இதுவே உங்கள் வாழ்நாட்களின் முக்கிய வேலையாய் இருக்கக்கடவது.

ஓ! ஆண்டவரே! என் சர்வேசுரா! இதுவரை கண்ணில்லாக் குருடன் போல் உம்மை அறியாமலும் உம்மைத் தேடி வராமலும் அலைந்து திரிந்தேன். உமக்கு ஊழியம் செய்வதை மறந்து போய் கீழ்த்தரமான சுபாவமுள்ள எஜமான்களை அண்டி அவர்களுக்கு அடிமை போல் தொண்டு செய்தேன். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன். சுவாமி, தேவரீர்தான் என் ஆண்டவர், எனக்கு எஜமான். உமக்கு ஊழியம் செய்வதே இனி எனக்கு மகிமையாகவும், சந்தோஷ மாகவும், பாக்கியமாகவுமிருக்கும். என் உயிர் பிரியுமட்டும், உமக்கு நான் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்யும்படி எனக்கு உமது வரப்பிரசாதத்தின் உதவியைத் தருவீராக.

ஆமென் சேசு.