நாள் 1, தியானம் 1, அறநெறி அடிப்படை சத்தியம் - இரண்டாம் பாகம்.

நாம் எல்லாரும் சர்வேசுரனுடைய கையிலிருந்து வருகிறோம். ஆகவே அவரே நமக்கு ஆதிகாரணமானவரென்று முதல் பாகத்தில் விரிவாய் காண்பித்தோம். இப்போது நாம் சர்வேசுரனுக்குச் சொந்தமானவர்கள்; ஆனதால் அவரே நமக்கு எஜமான் என்று விவரிக்கப் போகிறோம். கவனமாய்க் கேளுங்கள்.

நாம் சர்வேசுரனிடமிருந்து வருவது சாத்தியமானால் அவருக்கு நாம் சொந்தமாயிருக்கிறோம் என்பதும் சத்தியம். பட்டப்பகல் போல் தெளிவான இந்த சத்தியத்தை நியாயமான சாட்சியங்களால் ஒப்புவிப்பதும் அவசியமோ? தேசத்துக்கெல்லாம் அதிபதியாகிய இராஜாவுக்கு, அந்நாட்டின் குடிகள் எல்லாரும் பணியவேண்டும். அல்லவா? எஜமானனுக்கு ஊழியம் செய்யும்படி அமர்ந்திருக்கும் ஊழியர்கள் எஜமான் சொற்படி நடப்பது முறை. அல்லது, பிள்ளைகள் தங்களைப் பெற்று வளர்க்கும் தகப்பன் சொற்கேட்டு வணங்கி நடப்பது பிள்ளைகளின் கடமை அல்லவா? தச்சன் மரத்தை விலைக்கு வாங்கி பலகையாய் அறுத்து தன் கையால் ஓர் பெட்டி செய்தால் அந்தப் பெட்டிக்குத் தச்சன் அல்லோ சொந்தக்காரன்? குயவன் மண்ணால் பானை வனைந்து செய்து முடித்தால் அந்தப் பானை குயவனுக்கன்றி வேறு யாருக்குச் சொந்தம்?

அப்படியானால் சர்வேசுரன் தமது கையால் உன்னை உருவாக்கி சிருஷ்டித்து, உனக்குள்ள யாவற்றையும் தாமே கொடுத்து உன்னை உலகத்தில் வைத்தவராதலால் நீ அவருக்கு முழுவதும் சொந்த மானவன். அவரே உனக்கு ஒரே எஜமான். அரசனுக்கு அவன் குடிமக்களும் எஜமானனுக்கு அவன் ஊழியனும், தகப்பனுக்கு அவன் பிள்ளையும் சொந்தமாயிருப்பதைவிட, உன்னைச் சிருஷ் டித்துக் காப்பாற்றி வரும் சர்வேசுரனுக்கு நீ அதிக சொந்தமானவன். சர்வேசுரனுக்கு உன் பேரில் உள்ள சுதந்திர உரிமை மற்றெவருக்கு முள்ள சுதந்தர உரிமையை விட உயர்ந்ததும், உறுதியுள்ளதுமானது. கேள், சர்வேசுரனுக்குச் சொந்தமில்லாதது ஏதாவது உன்னிடமிருக் கிறதா? சர்வேசுரனிடமிருந்து நீ பெறாத ஓர் அணுவளவு பொருள் முதலாய் உன்னிடம் நீ காட்டுவாயா? சர்வேசுரன் உனக்குத் தந்தவை களை எல்லாம் திரும்பவும் அவர் எடுத்துக் கொள்வாரானால் உன்னிடம் ஏது மீதியாயிருக்கும்? உன் புத்தியை அவர் எடுத்துக் கொண்டால், நீ மிருகமாவாய். உன் உயிரை எடுத்தால் நீ மண் ணாவாய். அந்த மண்ணையும் எடுத்துக் கொண்டால் நீ ஒன்று மில்லாமை ஆவாய். ஆனதால் நம்மிடம் இருப்பதெல்லாம் சர்வேசுரனே நமக்குக் கொடுத்தார். அவருக்கே நாம் சொந்த மானவர்கள். அவரே நமக்கு எஜமான். நமது பேரில் அவருக்குப் பூரண உரிமையுண்டு.

இந்தப் பூரண சுதந்தர உரிமையின் பல அடையாளங்களை உங்க ளுக்கு எடுத்துக் காட்டுவோம். இன்னும் கவனமாய்க் கேளுங்கள். யாதொரு பொருள் எவனுக்குச் சொந்தமோ அவனுக்கு அதன் பேரில் சுதந்தர உரிமை உண்டென்பது சத்தியம். இந்தச் சுதந்தரம் சொத்தின் இயல்புக்குத் தகுந்தது போலவே குறைவாயும் நிறைவாயும் பூரணமாயும் இருக்கலாம். சர்வேசுரனுக்கு நமது மட்டிலுள்ள சுதந்தரமோ, இயல்பிலே அவசியமான சுதந்தரம். அதெப்படி யெனில்: ஒன்றுமில்லாமையினின்று நம்மை உண்டாக்கவும் அல்லது உண்டாக்காதிருக்கவும் சுதந்தரமுள்ள சர்வேசுரன், நம்மை ஒருமுறை உண்டாக்கிய பின், சிருஷ்டியின் பேரில் சிருஷ்டிகருக்கு அவசிய மான சுதந்தர உரிமை ஏற்படுகின்றது. அந்த உரிமையை எவ்வகையாலும் குறைக்கவும் நீக்கவும் சர்வேசுரனாலும் முடியாது. சர்வேசுரன் சர்வேசுரனாயிருக்கும் வரை அவர் நமக்கு ஆண்டவரும் எஜமானனுமாயிருப்பது அவசியம்.

அன்றியும் சர்வேசுரனுக்குள்ள இந்தச் சுதந்தரம் மற்ற எந்த வகை சுதந்தரத்துக்கும் மேலானதும் பூரணம் பெற்றதுமான சுதந்தரம். உலகத்தில் மனிதருக்குள் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கக்கூடிய உரிமை எல்லாம் சர்வேசுரனிடத்தில் பூரணமாய் ஓர் குறைவுமின்றி இருக்கின்றது. தாய் தகப்பன் எஜமான் முதலியவர்களுக்கு நாம் சொந்தமாகு முன், சர்வேசுரனுக்குச் சொந்தம். மனிதருக்குள்ள சொந்தம் சுதந்தர உரிமை எல்லாம், சகலத்துக்கும் ஆதிகாரணரான சர்வேசுரனிடமிருந்தே வருகின்றது. அவர் எவ்வளவான சுதந்தர உரிமை மனிதருக்குக் கொடுப்பாரோ, அவ்வளவுதான் அவர் களுக்கும் உண்டு. ஆனதால் தாயும் தகப்பனும், சுற்றத்தார், சிநேகிதர், எவரும் சர்வேசுரனுக்கு நமது பேரிலுள்ள சுதந்தர உரிமையைத் தடுக்க முடியாது, குறைக்க முடியாது, நீக்க முடியாது.

இப்படி இயல்பாயிருக்கும் சுதந்தரம் சர்வேசுரனுக்கு நித்தியமா யிருக்கும் சுதந்தரம். ஒரு தடவை இது நம்மோடு துவக்கினபின், நாம் உயிரோடிருக்கும் வரை சற்றும் மாறாமல் நிலைத்திருக்கும். மரணம், மற்றெதற்கும் ஓர் முடிவு உண்டாக்குமானாலும், சர்வேசுரனுக்கு நமது பேரிலிருக்கும் சுதந்தர உரிமைக்கு ஒரு முடிவும் கட்டாது.

அன்றியும் இந்தப் பரிபூரணமான சுதந்தரத்தின் ஆளுகைக்குத் தப்பித்துக் கொள்ளலாமென்றாலோ, அதுவும் எவனாலும் முடியாது. உனக்கு இஷ்டமோ இல்லையோ, நீ அதற்கு உட்பட்டவன். உலகில் நீ உயிரோடிருக்கும் காலத்தில் அவருடைய சிநேகத்தின் ஆளுகைக்குள் அமைந்து இருக்க மனமுண்டானால் இருக்கலாம். பாக்கியமாய் சுகம் பெற்று வாழ்வாய். அப்படி இல்லையோ, சர்வேசுரனுடைய நீதி கோபத்தின் அரசாட்சியில் அடிமையாய்க் கீழ்ப்பட்டு அவர் விதிக்கும் நித்திய தண்டனைக்கு ஆளாய்க் கிடப்பாய்.

மனிதனுக்குள்ள இந்த நிலையைக் கவனித்து யோசித்தால், எவன் ஆங்காரம் பொங்கி, தன்னைப் பெரிதாய் எண்ணி, தலையை உயர்த்தி, ஆட்டி அசைத்து நடப்பான்? ஆ! அற்ப மனிதா! சர்வேசுரனால் உருவான உருவே! நீயா சர்வேசுரனை எதிர்த்து விரோதிக்கத் துணிகிறாய்? சர்வ வல்லப சர்வேசுரனை எதிர்க்க யார் தகுதியுள்ளவன்? சர்வேசுரன் கையில் தங்கி இருந்து கொண்டே அவரை விரோதிப்பது வெகு ஆபத்தான காரியம் என்பது உனக்குத் தெரி யாதா? ஆண்டவரே! நீரே என் சிருஷ்டிகர், நீரே என் எஜமான், நான் உமக்கு அடிமை. உமக்குத் தொண்டு செய்வது என் தொழில். அதுவே என் கடமை. உமக்குத்தான் மகிமையும் பெருமையும் பலமும் செல்லும். சகல சிருஷ்டிகளாலும் ஆராதித்து ஸ்துதிக்க பாத்திரம் உள்ளவர் நீர்தான். உமக்கு என்றும் நித்திய ஸ்தோத்திரம் உண்டாவதாக!