நாள் 1, தியானம் 1, அறநெறி அடிப்படை சத்தியம் - முதல் பாகம்.

உலகத்தில் மனிதனுடைய நோக்கம் இன்னதென்று தெளிவாய் நாம் அறியும்படியாக இதில் மூன்று விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஆதிமுதலில் நாம் அறிய வேண்டியது : நாம் எங்கே யிருந்து வருகிறோம்? அதன்பின் உலகில் நாம் இருக்கும் போது யாருக்கு சொந்தமானவர்கள்? மூன்றாவது நாம் எதற்காக இங்கே இருக்கிறோம்?

இந்த மூன்று கேள்விகளுக்கும் மறுமொழி ஏதென்றால் :

(1) நாம் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறோம்; ஆகவே சர்வேசுரனே ஆதிகாரணமானவர்.

(2) நாம் சர்வேசுர னுக்குச் சொந்தம்; ஆகவே சர்வேசுரனே நமக்கு எஜமான்.

(3) நாம் சர்வேசுரனுக்காக இருக்கிறோம்; ஆகவே சர்வேசுரனே நமக்கு கடைசிக்கதி.

சர்வேசுரனே நமக்கு ஆதியும் நடுவும் முடிவுமானவர். அவரிடத்திலிருந்து நாம் வந்து, அவருக்கு ஊழியம் செய்து, கடைசியில் அவரிடம் சேர வேண்டியவர்கள். சர்வேசுரனே நமக்கு ஆதிகாரணமான சிருஷ்டிகர். அவரே நம்மை நடத்தி ஆளும் ஆண்டவர். அவரே நமக்கு நித்திய பாக்கிய சம்பாவனையாயிருப்பவர்.

நாம் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறோம். அவரே நமக்கு ஆதிகாரணமான சிருஷ்டிகர் என்ற இந்த சத்தியத்தை யார் மறுப்பார்? இதற்கு நூறு வருஷங்களுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? இந்த விஸ்தாரமான பூமியும், வானத்தில் பிரகாசிக்கும் சூரிய சந்திர நட்சத் திரங்களும் அப்போது உண்டாயிருந்தன. நீங்களோ, எங்கே இருந் தீர்கள்? உங்களைப் பற்றி எவனும் பேசவுமில்லை , நினைக்கவும் மில்லை. உங்கள் ஊரும் பேரும் ஒருவருக்கும் தெரியாது. உங்கள் காலில் மிதிபடும் அந்த மண் நூறு வருஷங்களுக்கு முன்னே ஓர் பொருளாயிருந்தது. நீங்களோ, அது முதலாயில்லை . ஆ மனிதன் எவ்வளவு அற்பமான பொருள்!

இப்படி நூறு வருஷங்களுக்கு முன் சுத்த சூனியமாய் ஒன்று மில்லாதிருந்த நீங்கள் இப்போது உயிர் பெற்று இருக்கிறீர்கள். இருக்கிறீர்களென்றால், உங்கள் காலில் மிதிபடும் அசைவற்ற அந்த மண்ணைப் போலவோ? அல்லது உணர்வற்ற மரக்கட்டையைப் போலவோ? அல்லது புத்தியில்லாத மிருகத்தைப் போலவோ? அல்ல, அல்ல. உயிரும், உணர்ச்சியும், அறிவும், புத்தியும் உள்ள மனிதர் களாக நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். மனிதன், இந்த விஸ்தார மான் பூமியில், கண்ணுக்குப் புலப்படும் ஜீவகோடி ராசிகளுக்குள் மகா மேன்மை பெற்றவன். அதிசய மனோதத்துவ இலட்சணங் களோடு கூடிய வித்தியாசமும் புலன்கள் அமையப்பெற்ற மனிதப் பிறவி. கண் காது வாய் முதலிய ஐம்புலன்களால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் சக்தியுள்ளவன். பொருட்களின் இயல்பும் குணமும் ஒன்றுக்கொன்றுள்ள சம்பந்தமும் பகுத்தறியும் புத்தியையும், நுண் ணறிவையும், வேண்டும் வேண்டாம் என்று தன் இஷ்டப்படி நடக்க சக்தி வாய்ந்த மனச்சுதந்திரத்தையும் இயற்கையாகப் பெற்றவன்

இவ்வித சிறந்த மனோதத்துவ இலட்சணங்களால் அலங்காரம் பெற்று, உலகத்தில் வாழும் சகல ஜீவகோடிகளுக்கெல்லாம் அதிபதியாய் நிமிர்ந்த முகத்தோடும், இராஜ கெளரவ மேன்மை யோடும் நடந்து சுதந்திரமாய்த் திரியும் மனிதனாகிற நீ எங்கே யிருந்து இவ்வித இலட்சணங்களை அலங்கார அணியாய்ப் பூண்டு வந்தாய்? தற்செயலாய் காட்டில் புல் முளைப்பது போல் நீயும் முளைத்துத் தோன்றினாயோ? அல்ல. தற்செயல் என்பது அர்த்த சாயமற்ற வார்த்தை. ஒரு புல்லும் தானே வித்தின்றி முளையாது வித்தில்லா நடைமுறை மேலுமில்லை கீழுமில்லை என்பது சாஸ்திரிய சத்திய வாக்கியம். உன் தாய் தந்தை உன்னை மனிதனாய் சிருஷ்டித்தார்களோ? சிருஷ்டிக்கும் தொழில் சர்வேசுரனைச் சார்ந்தது; மனிதனால் எதையும் சிருஷ்டிக்க இயலாது. உருவமற்ற ஆத்துமத்தை தாய் தகப்பன் உனக்குக் கொடுக்கவில்லை. அல்லது நீயே உன்னை உருவாக்கி உலகில் வந்தாயோ? ஒன்றுமில்லாமையா யிருந்த நீ, எப்படி உன்னை உருவாக்க முடியும்? ஒன்றுமில்லாமை யிலிருந்து ஒன்றும் உண்டாகாது என்பதும் சத்திய வாக்கியம்.

இவ்விதம் தற்செயலாய் நீ வராமலும், தாய் தந்தையால் மனித னாகாமலும், நீயே உன்னை உருவாக்கக் கூடாமலுமிருக்க, எப்படி நீ உலகத்தில் வந்திருக்கிறாய்? இதற்கு ஒரே ஒரு மறுமொழிதான் உண்டு. சர்வேசுரனே உனக்கு ஆதி துவக்கமானவர். அவரே உன்னை மனிதனாய் உருவாக்கி சிருஷ்டித்து உலகத்திலே அனுப்பினவர். சர்வேசுரன் ஒருவரே உனக்கும் உலகத்திலுள்ள சகல ஜீவப் பிராணிகளுக்கும் ஆதிகாரணம். சர்வேசுரன் அல்லாத சகலமும் சர்வேசுரனிடத்திலிருந்து வருகின்றன. சர்வேசுரன் ஒருவர் மாத்திரம் தம்மில் தாமாயிருப்பவர்.

இந்த அடிப்படை சத்தியத்தை மறுப்பது அபத்தத்திலும் அபத்தம். நான் சர்வேசுரனிடமிருந்து வருகிறதில்லையென்றும், சர்வேசுரனே இல்லையென்றும் சொல்லுவது முதிர்ந்த பைத்தியம். புத்தியில்லா பேதைதான் சர்வேசுரன் இல்லையென்று தன் மனசுக்குள் சொல்வான் என்ற வேத வாக்கியம் சொல்கிறது. (சங். 53:1)

ஆண்டவரே! நீர்தான் என்னைச் சிருஷ்டித்த சர்வேசுரனென்று நான் மனப்பூர்வமாய் அங்கீகரிக்கிறேன். ஒன்றுமில்லாமையினின்று என்னை உருவாக்கி மனிதனாய்ச் செய்தவர் நீர்தான். உமக்கு நித்திய ஸ்துதியும் நன்றியறிந்த ஸ்தோத்திரமும் உண்டாவதாக.

சர்வேசுரனே உன்னை உண்டாக்கி உலகத்தில் வைத்தாரென்று இப்போது நீ கண்டுபிடித்திருக்கிறாய். அவர் உன்னை சிருஷ்டித்தது தொடர்பான பல விஷயங்களை சற்று ஆராய்ந்து பார். சர்வேசுரன் உன்னை மனிதனாய் சிருஷ்டிக்க என்ன காரணம்? நீ சர்வேசுரனுக்குத் தேவையோ? சிருஷ்டி யாதொன்றும் இல்லாவிடில் சர்வேசுர னுடைய பாக்கியானந்தத்துக்கு ஏதும் குறை வருமோ? சர்வேசுரன் சர்வேசுரனாயிருக்க மாட்டாரோ? ஓ! அற்ப மனிதா, கேள். அளவற்ற ஞான சுரூபியாய், அளவில்லா வல்லமையுள்ள கர்த்தாவாய், சகல பாக்கிய நன்மை யாவும் சம்பூரணமாய்த் தம்மில் உள்ளவராய், தொடக்கமும் முடிவுமின்றி நித்தியம் தம்மில் தாமாயிருக்கும் சர்வலோக ஆண்டவருக்கு, நீயும் நானும், இவனும் எவனும், எந்தப் பிராணியும், சற்றும் அவசியமே இல்லை . உலகங்களெல்லாம் இருந் தாலும், கெட்டாலும், அழிந்தாலும், வாழ்ந்தாலும், சர்வேசுரனுக்கு இயல்பாயுள்ள பாக்கிய ஆனந்தத்தில் ஓர் அணுவளவும் குறைவிராது.

இவ்வித மகத்துவ பாக்கிய சம்பூரணரான சர்வேசுரன் உன்னைச் சிருஷ்டித்ததற்குக் காரணம், அவருடைய அணைகடந்த சிநேகமே அன்றி வேறொன்றுமில்லை. சகோதரனே! நாம் சொல்வதைக் கவனித்துக் கேள். நீ ஒன்றுமில்லாதபோதே, உன்னைப் பற்றி யாரும் நினையாத போதே, சர்வேசுரன் உன்னை நினைத்து உன்னைச் சிநேகித்தார். இந்த சிநேகம் நித்தியமான சிநேகம். நித்தியமான சிநேகத்தோடு உன்னைச் சிநேகித்து, நித்தியமான பாக்கியம் உனக்குக் கொடுக்கும்படி, தாம் தமது சர்வ வல்லமையால் உண்டாக்கக் கூடிய கோடானு கோடி மனுஷர்களிலிருந்து உன்னை விசேஷ அன்பால் தெரிந்து, தகுந்த காலத்தில் உன்னைச் சிருஷ்டித்து உலகில் வைத்தார். இவ்வளவு அன்பு உனக்குக் காட்டும்படி சர்வேசுரனுக்கு என்ன கடனிருந்தது? கடன் என்பது ஒன்றுமில்லை. இவ்வளவு சிநேகம் உனக்கு அவர் காட்ட சிநேகமே காரணமாயிருந்தது.

இன்னும் கேள். உன்னைச் சிருஷ்டிக்க சித்தமான சர்வேசுரன் உன்னை மிருகமாய் சிருஷ்டிக்கவில்லை. நொண்டியாய், முடமாய், ஊமையாய், செவிடனாய், அங்கவீனனாய்ச் சிருஷ்டியாமல், அவயவங்கள் பூரணமாய் அமையப்பெற்ற தேகமுள்ளவனாய் உன்னைச் சிருஷ்டித்தார். உன்னை மனிதனாய் உண்டாக்கிய பின்னும், நீ அஞ்ஞானியாகவோ துலுக்கனாகவோ, பதிதனாகவோ இருக்கும்படி விட்டிருக்கலாம். அப்படி ஒன்றும் செய்யாமல் நீ சத்திய வேதத்தில் கத்தோலிக்கு திருச்சபையில் கிறீஸ்துவனாய்ப் பிறக்கும்படி செய்தது கொஞ்சமான நன்மையோ ?

இது மாத்திரமோ சர்வேசுரன் உன்னைச் சிருஷ்டித்த சிநேகத்தின் அற்புத இலட்சணம்? உன்னை ஒருமுறை மனிதனாய்ச் சிருஷ்டித்தது போதாதென்று தமது சிருஷ்டிப்பின் அலுவலை கணத்துக்குக் கணம், எந்த நிமிஷத்திலும் புதுப்பித்து, தமது தேவ பராமரிப்பின் செயலால் உன்னைக் காப்பாற்றி வருகிறார். உன்னை முதல் முறை சிருஷ்டிக்கும்போது எவ்விதம் தமது சர்வ வல்லமையின் செயலைப் பிரயோகித்தாரோ, அவ்விதமே நீ உயிரோடிருக்கும் ஒவ்வொரு நிமிஷத்திலும் அதே சர்வ வல்லமையைப் பிரயோகித்து, நீ ஒன்று மில்லாமையாய்ப் போகாதபடி உன்னைத் தமது கையில் காப்பாற்றி வருகிறார். அதோ! உயர இருந்து கட்டித் தொங்கும் அந்தப் பளிங்கு விளக்கைப் பார். அது கீழே விழுந்து உடைந்து நொறுங்கிப் போகாத படி அதைத் தாங்கும் கம்பி எப்போதும் எந்த நிமிஷத்திலும் அவசியம். விளக்கை முதல் முறை உயரத் தூக்கித் தொங்கப் போடும்போது கம்பி அவசியமாயிருந்தது போல் எந்தக் கணத்திலும் அது விளக்குக்கு அவசியம். கம்பி அறுந்தால் விளக்கும் விழுந்து உடையும். அது போலவே சர்வேசுரனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் விழுந்து கெட்டழியாதபடி சர்வேசுரனுடைய விசேஷ பராமரிப்பு எந்த நிமிஷத்திலும் அவனுக்குத் தேவை.

சகோதரரே! நாம் இங்கே விவரித்துக் காட்டிய சத்தியம் உங்கள் மனதில் பதிந்ததோ? இது உண்மைதான் என்று நீங்கள் அங்கீகரிக் கிறீர்களோ? நல்லது. இப்போது சர்வ மகத்துவ சர்வேசுரன் சமுகமுன் சாஷ்டாங்கமாக விழுந்து சொல்லுங்கள் : சுவாமி! நான் ஒன்றுமில்லாமை, இதுதான் என் சுய அந்தஸ்து. தூசியிலும் நான் தாழ்ந்தவன். தேவரீர் என்னை ஓர் பொருளாக மதித்து, உமது கையால் என்னைப் புத்தியுள்ள மனிதனாய்ச் சிருஷ்டித்தீர். சிருஷ்டித்தபின் என்னை இதுமட்டும் காப்பாற்றி வந்தீர். இந்த நன்மைக்கெல்லாம் தேவரீருடைய சிநேகமே காரணம். உமக்கு நான் நன்றியறிந்திருக்கிறேன். உம்மை நான் என் சிருஷ்டிகராக அங்கீகரித்து சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை ஆராதிக்கிறேன்.