இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 09

மிருகங்களின் மேல் வந்த வாதையும் - கொள்ளைநோயும் - கல்மழையும்

1. பிறகு கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ பரவோனிடத்திற்குப் போய் அவனுக்குச் சொல்லுவாய்: எபிறேயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதேதெனில், நமது பிரஜையை நமக்குப் பலியிடும்படிப் போகவிடு.

2. நீ அவர்களைப் போகவிடேனென்று இன்னும் நிறுத்திவைப்பாயாகில்,

3. உன் வயல்களின்மேலும், உன் குதிரைகளின் மேலும், வேசரிகளின்மேலும், ஒட்டகங்களின்மேலும், ஆடுமாடுகளின் மேலும் மிகக் கொடியதோர் கொள்ளைநோய் உண்டாகும்.

4. அப்பொழுது ஆண்டவர் இஸ்றாயேல் சொத்துக்களுக்கும், எஜிப்த்தியரின் சொத்துக்களுக்கும், (வித்தியாசம் விளங்கும்படி) ஒரு புதுமையைச் செய்வார். இஸ்றாயேல் புத்திரர்களுக்கு உரியவைகளில் ஒன்றாகிலும் நஷ்டமாய்ப் போகாது.

5. மேலும் கர்த்தர் கெடுவைத்து: நாளைக்குத்தான் ஆண்டவர் அந்தக் கிரியையைச் செய்து முடிப்பார் என்றாரே.

6. அவ்விதமே கர்த்தர் மறுநாளிலே அந்த வார்த்தையின்படி செய்து முடித்தார். அப்பொழுது எஜிப்த்தியருக்குச் சொந்தமாயிருந்த ஜீவஜந்துக்கள் யாவுமே மடிந்தன, இஸ்றாயேல் புத்திரருக்கு உண்டானவைகளிலோ யாதொன்றுஞ் சாகவில்லை.

* 6-ம் வசனம். பரவோனுடைய மனக்கடினத்தையும் அவன் ஆலோசனைக் காரருடைய துஷ்டத்தனத்தையும் கண்டிக்கும்படி கர்த்தர் இந்த ஐந்தாம் வாதையை விதித்தார்.

7. பரவோன் விசாரிக்க அனுப்பினான், இஸ்றாயேலுக்கு உரியவைகளில் ஒன்றாகிலும் சாகவில்லை. பரவோனின் மனம் கடினமாகி விட்டது. அவன் பிரஜையைப் போக விடவில்லை.

* 7-ம் வசனம். இந்தக் கொள்ளைநோய் இஸ்றாயேலியரின் எல்லைகளுக்குள் காணப்படாதென்று கடவுள் மோயீசனைக் கொண்டு அறிவித்திருந்த போதிலும் பரவோன் தேவ வாக்கியத்தை நம்பினதில்லை. பிறகு விசாரித்து அது நிறைவேறிற்றென்று கண்டும் அவன் தன் மனக் கொடுமையை விட்டதில்லை. இக்காலத்துக் கள்ள சாஸ்திரிகளும் அவ்வாறே நடந்து வருகிறார்கள் என்பது யாவரும் சுயானுபோகத்தினால் அறியலாம்.

8. அப்பொழுது கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் அடுப்பிலி ருந்து இருகை நிறைய சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள். மோயீசன் அதைப் பரவோ னுடைய சமூகத்திலே ஆகாயத்தில் இறைக்கக்கடவான்.

9. அது எஜிப்த்து தேசத்தின்மேல் எவ்வி டத்தும் விழக்கடவது. அதினால் எஜிப் த்து தேசமெங்கும் மனிதர்களிலும் மிருகங் களிலும் புண்ணுஞ் சீழ்க்கட்டிக் கொப்பு ளங்களும் உண்டாகுமென்றார்.

10. அப்படியே அவர்கள் அடுப்பங்கரை யில் சாம்பலை அள்ளிப் பரவோனுக்கு முன் பாகப்போய் இருக்கும்போது மோயீசன் அதை ஆகாயத்தில் இறைத்தான். இறைக்கவே, மனிதர்களிலும் மிருகங்களிலும் புண் ணுஞ் சீழ்க்கட்டிக் கொப்புளங்களும் உண்டாயின.

11. எஜிப்த்து தேசமெங்கும் காணப்பட்ட புண்கள் மந்திரவாதிகளிடத்திலும் உண் டானதினாலே அவர்கள் மோயீசனுக்கு முன்பாக வந்து நிற்கக் கூடாமல் போயிற்று.

* 11-ம் வசனம். இதோ தேவ திருவுளத்தால் பேயின் வல்லமை நீங்கிற்று!

12. ஆனாலும் கர்த்தர் பரவோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவர் மோயீசனோடே சொல்லியிருந்தபடி பரவோன் அவர்களுக்குச் செவி கொடுக்க வில்லை.

13. பின்னரும் கர்த்தர் மோயீசனை நோ க்கி: நீ நாளை காலமே எழுந்து பரவோனு க்கு முன்பாகப் போய் நின்றுகொண்டு: எபிறேயருடைய தேவனாகிய கர்த்தர் சொல் லுகிறதேதெனில்: நம்முடைய பிரஜையை நமக்குப் பலியிடும்படிப் போகவிடு.

14. விடாதேபோனால் பூமி எங்கே பார்த் தாலும் நமக்கு நிகரானவரில்லை என்பதை நீ அறியும் பொருட்டு இந்த முறை நாம் சகல வித வாதைகளையும் உன் இருதயத்தின் மேலும் உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்களின்மேலும் வரப் பண்ணுவோம்.

15. எவ்வாறெனில், நீ பூமியிலிராமல் நாசமாய்ப்போகத்தக்கதாக, நாம் கையை நீட்டிக் கொள்ளை நோயினால் அடித்து வாதிப்போம்.

16. நமது வல்லமை உம்மிடத்தில் விளங்கும்படியாகவும் நமது நாமம் எவ்விடங்களிலும் பிரஸ்தாபமாகும்படி யாகவுமல்லோ நாம் உன்னை நிலைநிறுத்தி வைத்தோம்.

17. நீ நம்முடைய பிரஜையை இன்னும் நிறுத்திப் போகவொட்டாமல் இருக்கிறாயன்றோ?

18. பார், எஜிப்த்து தோன்றிய நாள் முதல் இந்நாள்வரையிலும் அதில் ஒருக்காலும் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளைக்கு இந்நேரமே பெய்விப்போம.

19. ஆகையால் நீ இந்நேரமே ஆளனுப்பி உன் மிருகங்களையும் வெளியில் உனக்கிருக் கிற யாவையுஞ் சேர்த்துக்கொண்டு பத்திரமாய் வைக்கச் சொல்லு. ஏனெனில் வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியில் இருக்கும் மனிதர்களும் மிருக முதலிய யாவும் கல் மழை பட்டால் செத்துப்போகுமென்று சொன்னார்.

20. பரவோனுடைய ஊழியர்களிலே எவன் தேவ வாக்கியத்திற்கு அஞ்சியிருந்தானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீடுகளுக்கு ஓட்டிவரக் கட்டளையிட்டான்.

21. ஆனால் கர்த்தரது வாக்கியத்தைச் சட்டைப்பண்ணாதவன் எவனோ அவன் ஆட்களையும் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.

* 20,21-ம் வசனம். தேவ வாக்கியத்தை நம்பி அனுசரிப்பவன் எவனோ அவன் மோசம் போகமாட்டான்; அதைப் புறக்கணிப்பவன் எவனோ அவன் தப்பாது கெடுவான்.

22. பிறகு கர்த்தர் மோயீசனை நோக்கி: எஜிப்த்து தேசமெங்கும் மனிதர்களின் மே லும் மிருகங்களின் மேலும் எஜிப்த்திலுள்ள எல்லாப் பயிர்வகைகளின்மேலும் ஆலங் கட்டி மழை பெய்யும்படிக்கு உன் கையை வானமுகத்தே நீட்டென்றார்.

23. மோயீசன் அவ்விதமே செய்திருக்கக் கர்த்தர் நாட்டின்மீது இடிமுழக்கங்களையும், ஆலங்கட்டிகளையும் தரையின்மேல் இங்கும் அங்கும் ஓடி மின்னும் மின்னல்களையும் கட்டளையிட்டார்; அன்றியுங் கர்த்தர் எஜிப்த்து தேசத்தின்மேல் ஆலங்கட்டியைப் பெய்யப் பண்ணினார்.

24. அக்கினியும் ஆலங்கட்டியும் கலந்தே விழும். அவைகள் எப்படிப்பட்ட பருமனுள் ளவையென்றால் எஜிப்த்தியர் தோன்றிய நாள் முதல் அதுக்குச் சமானமான கல்மழை ஒருபோதும் உண்டானதில்லை.

25. எஜிப்த்து தேசமெவ்விடங்களிலும் பெய்த ஆலங்கட்டிகளாலே மனுஷனாகி ஜீவஜெந்துக்களீறாக வெளியிலே இருந்தவை யாவும் அழிக்கப் பட்டது. கல்மழையினாலே கொல்லைகளிலே கிடக்கும் சகவித பயிர்க ளும் நாசமாயினதொழிய நாட்டிலுள்ள மரங்களும் முறிந்தன.

26. இஸ்றாயேல் புத்திரர் இருந்த ஜே சேன் நாட்டிலே மாத்திரம் ஆலங்கட்டி மழை பெய்யாதிருந்தது.

27. அப்போது பரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: நான் இந்த முறையும் பாவஞ் செய்தேன்! ஆண்டவர் நீதியுள்ளவர், நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.

28. நீங்கள் இனிமேல் இத்தேசத்திலிரா தபடிக்கு நான் உங்களைப் போகவிடத் தக்க தாக இடிமுழக்கங்களும் ஆலங்கட்டிகளும் ஒழியவேணுமென்று ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள் என்றான்.

29. அதற்கு மோயீசன்: பூமி ஆண்டவருடையதென்று நீர் அறியும்படி நான் நகரத்தினின்று புறப்பட்டவுடனே ஆண்டவரிடம் என் கரங்களை நீட்டுவேன், அதினால் இடிமுழக்கங்களும் ஒழியும், ஆலங்கட்டி மழையும் நின்றுபோகும்;

30. ஆனால் தாங்களும் தங்கள் ஊழியக்காரரும் தேவனாகிய கர்த்தருக்கு இன்னும் அஞ்சுகிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன் என்றான்.

31. ஆகையால் ஆளிவிரைப் பயிரும் வாற் கோதும்பைப் பயிரும் சேதப்பட்டன. ஏனெனில் வாற்கோதும்பை அக்காலத்தி லே கதிர்ப்பயிராயிருந்தது. ஆளிவிதைப் பூண்டோ முதல் துளிர்விட்டது.

32. ஆனால் கோதும்பை முதலிய தவச தானியங்களுக்கு நஷ்டமொன்றும் ஆக வில்லை. ஏனெனில், அவைகள் பின் பருவத்துப் பயிர்கள்.

33. மோயீசன் பரவோனைவிட்டு நகரத் திலிருந்து புறப்பட்டுக் கர்த்தரின் முகத்தே கரங்களை நீட்டினான். அக்ஷணமே இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் ஒழிந்தன. மழையும் நின்று போய் விட்டது.

34. பரவோன் மழையும் ஆலங்கட்டி மழையும் இடிமுழக்கமும் ஒழிந்ததைக் கண்ட போது முன்னை விட அதிகப் பாவியானான்.

35. அவனுடைய மனதும் அவனூழியருடைய இருதயமும் இறுகி அதிகக் கடினமாய்ப் போனதொழிய கர்த்தர் மோயீசனைக் கொண்டு திருவுளம்பற்றியிருந்தபடி அவன் இஸ்றாயேல் புத்திரர்களைப் போகவிட்டானில்லை.

* 35-ம் வசனம். பரவோன் தேவ அருளைப் புறக்கணித்தமையால் அதிகப் பாவியுந் தேவத்துரோகியுமானான்.