இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 09

பழைய ஏற்பாட்டின் குருத்துவமும் பலவித பலிகளும் கிறீஸ்துநாதருடைய குருத்துவத்துக்கும் ஏக பலிக்கும் எவ்வளவோ கீழ்த்தரமானவைகள் என்று விவரித்துக் காட்டுகிறார்.

1. அன்றியும் முந்தின உடன்படிக்கையானது ஆராதனைக்கடுத்த முறைமைகளையும், பூலோகத்துக்கான பரிசுத்த ஸ்தலத்தையும் கொண்டிருந்ததென்பது உள்ளதுதானே.

2. எப்படியெனில், முன் கூடாரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அதன் முதற்பாகத்தில் சுவர்க் குத்துவிளக்கும், மேசையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன. இது பரிசுத்த ஸ்தலம் என்னப் பட்டது. (யாத். 25:23-30; 26:1.)

3. இரண்டாந் திரைக்குப்பின் பரிசுத்தத்திலும் பரிசுத்தம் எனப்பட்ட கூடாரம் இருந்தது.

4. இதில் பொன் தூபக்கலசமும், எப் பக்கமும் தங்கத்தால் பொதியப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும், அதனுள் மன்னா அடங்கிய தங்கப் பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. (லேவி.16:12; யாத். 16:33; 25:10; எண். 17: 8; 3 அரச. 8:9.)

* 4. இவ்விடத்தில் சொல்லப்பட்ட தூபக்கலசம் பரிசுத்தமெனப்பட்ட இடத்துக்குமுன் எப்போதும் தூபம் எரிந்துகொண்டிருந்த தூபப்பீடத்தைக் குறிக்கிறதென்றார்கள். இது பரிசுத்தத்திலும் பரிசுத்தமெனப்பட்ட இடத்துக்கு அருகாமையிலிருந்ததால் அதைச் சேர்ந்ததாகவும் எண்ணலாம். அர்ச். சின்னப்பர் இவைகளைக் குறிப்பிட்டு பேசும்போது, அதில் இருந்தவைகளையும் அவைகளின் வெவ்வேறு உபயோகத்தையும் விசேஷவகையாய்ச் சொல்லுகிறாரொழிய, அவைகள் இருந்த இடத்தை நுணுக்கமாய்ச் சொல்லத் தேடுகிறதில்லை.

5. அதற்குமேலே கிருபாசனத்தை நிழலிடும் மகிமையுள்ள கெருபின் சம்மனசுக்கள் வைக்கப்பட்டிருந்தன. இவைகள் ஒவ்வொன்றையுங் குறித்துப் பேசுவதற்கு இது சமயமல்ல.

6. இவைகளெல்லாம் இவ்விதமாய் அமைக்கப்பட்டிருக்க, குருக்கள் பலிகளுக்கடுத்த முறைமைகளை நிறைவேற்றும்போது முன் கூடாரத்தில் எந்தக் காலத்திலும் பிரவேசிப்பார்கள்.

7. ஆனால் இரண்டாம் கூடாரத்தில் பிரதான குருப்பிரசாதி ஒருவர்மட்டும் வருஷத்தில் ஒருதரம் இரத்தத்தை ஏந்திக்கொண்டு பிரவேசித்து, தாமும் பிரஜைகளும் செய்த அறிவீனப் பிழைகளுக்காக அதை ஒப்புக்கொடுப்பார். (யாத். 30:10; லேவி. 16:2.)

8. இதனாலே அந்த முதல் கூடாரம் நிற்குந்தனையும் பரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்லும் வழி இன்னும் வெளியாக்கப் படவில்லையென்று இஸ்பிரீத்துசாந்து வானவர் குறிப்பாய்க் காண்பிக்கச் சித்த மானார்.

9. அந்தக் கூடாரம் இந்தக் காலத்துக்கு ஓர் உவமையாயிருக்கின்றது. அதன்படி ஒப்புக்கொடுக்கப்படுகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனை மனச்சாட்சியின் விஷயத்தில் உத்தமனாக்கக் கூடாதவைகளாயிருந்தன.

10. ஏனெனில் அவைகள் சீர்திருத்தமாகிற காலம்வரையில் கற்பிக்கப்பட்ட போஜனபானத்திலும், பலவித ஸ்நானங்களிலும், சரீர சுத்திகரிப்புகளிலும் அடங்கியிருந்தன.

11. கிறீஸ்துநாதரோவெனில் வரப்போகிற நன்மைகளின் பிரதான குருவாகத் தோன்றி, (பழைய கூடாரத்தைப்போல்) இவ்வுலக சிருஷ்டிப்பாகிய கைவேலையாயிராததும், விசாலமும், உன்னதமுமான கூடாரத்தின் வழியாய்,

12. வெள்ளாட்டுக்கிடாய்கள், கன்றுக்குட்டிகள் இவைகளின் இரத்தத்தோடல்ல, தமது சொந்த இரத்தத்தோடே பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, நித்திய இரட்சணியத்தை நமக்குப் பெறுவித்தார்.

13. வெள்ளாட்டுகிடாய்கள், காளைகள் இவைகளின் இரத்தமும், தீட்டுப் பட்டவர்களின்மேல் தெளிக்கப்படு கிற கிடாரியின் சாம்பலும், மாம்ச அசுத்தத்தை நீக்கி, அவர்களைச் சுத்தப்படுத்துமானால், (லேவி. 16:14-16)

14. நாம் ஜீவந்தர கடவுளைச் சேவிக்கும்படிக்கு இஸ்பிரீத்துசாந்துவினால் மாசில்லாத பலியாகத் தம்மைத் தாமே சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்த கிறீஸ்துநாதருடைய இரத்தம் எவ்வளவோ அதிகமாய் நம்முடைய மனச்சாட்சிகளைச் செத்த கிரியைகளினின்று சுத்திகரிக்கும்! (1 இரா.1:18; 1 அரு. 1:7; காட்சி. 1:5.)

15. (கடவுளால்) அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தைப் பெற் றுக்கொள்ளும்பொருட்டு முந்தின உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களைப் பரிகரிக்கும்படி தாம் அடைந்த மரணத்தால் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருக்கிறார். (கலாத். 3:15; 1 தீமோ. 2:5.)

16. எப்படியெனில், எப்போது மரணசாசனம் உண்டாயிருக்கிறதோ, அதைச் செய்தவனுடைய மரணமும் அவசியமாய் உண்டாயிருக்க வேணும்.

17. ஏனென்றால் மரணசாசனம் அதைச் செய்தவனுடைய மரணத்தால் உறுதிப்படுகிறது. மற்றப்படி அவன் உயிரோடிருக்குமளவும் அதற்குப் பலமிராது.

18. இதனிமித்தமே முந்தின உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை.

19. எவ்வாறெனில், மோயீசன் வேதப்பிரமாணத்தின் கட்டளைகள் யாவையும் சகல ஜனங்களுக்கும் வாசித்தபின்பு,

20. காளைக்கன்றுகள், வெள்ளாட்டுக்கிடாய்கள் இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து, சிவப்பு ஆட்டு உரோமத்தையும் ஈசோப்பையுங்கொண்டு அதைப் புஸ்தகத்தின் மேலும் சமஸ்த ஜனங்கள்மேலும் தெளித்து: சர்வேசுரன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றார். (யாத். 24:3-8.)

21. அப்படியே கூடாரத்தின்மேலும், திருப்பணிக்கடுத்த தட்டு முட்டுகளின் மேலும் இரத்தத்தைத் தெளித்தார்.

22. அவ்வண்ணமே பிரமாணத் தின்படி ஏறக்குறைய சகலமும் இரத் தத்தினால் சுத்திகரிக்கப்படுகிற தொழிய இரத்தம் சிந்தப்படாமல் யாதொரு மன்னிப்பும் உண்டாகாது.

23. ஆதலால் பரலோக காரியங்களுக்குச் சாயலாயிருந்தவைகளே இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியிருந்தால், பரலோக காரியங்கள் இவைகளிலும் மேன்மையான பலிகளாலல்லோ சுத்தமாக்கப்படவேண்டியது.

24. ஏனெனில் கைவேலைப்பாடும் மெய்யானவைகளுக்குச் சாயலுமாக மாத்திரமிருந்த பரிசுத்த ஸ்தலங்களுக் குள் சேசுநாதர் பிரவேசியாமல், இப்பொழுது நமக்காகச் சர்வேசுர னுடைய சந்நிதியில் காணப்படும்படிக்கு பரலோகத்திலேயே பிரவேசித்திருக்கிறார்.

25. பிரதான குரு அந்நிய இரத்தத்தோடு வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கிறதுபோல், அடிக்கடி தம்மைப் பலியிடும்படி, அவர் பிரவேசிக்கிறதில்லை.

* 25. நமது ஆண்டவர் சிலுவையில் நிறைவேற்றின இரத்தப்பலியால் உலக பாவங்களின் நிவர்த்திக்கு வேண்டிய சகலமும் ஏற்கனவே செய்திருப்பதால், திரும்பவும் அவர் மரித்து இரத்தஞ்சிந்திப் பலிகொடுப்பவரல்ல. ஆனால் அந்தப் பலியின் ஞாபகமாகவும், அதன் பலன் நமக்குக் கிடைக்கும்படியாகவும் அவர் தேவநற்கருணையில் எங்கும் எந்நாளும் இரத்தம் சிந்தாத பலியாகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுக்கிறார் என்பது சத்தியம்.

26. அல்லாவிட்டால் உலக ஆரம்ப முதல் அவர் அடிக்கடி பாடுபட வேண்டி யதாயிருக்கும். இப்போதோவெனில் இந்தக் கடைசிக் காலங்களில் தம்மைத் தாமே பலியிட்டு, பாவத்தை நிர்மூல மாக்கும்படி ஒரேதரம் தோன்றினார்.

* 26. கடைசிக்காலம்: - ஆதியில் இயல்வேதமும், அதன்பின் வரிவேதமும் வழங்கினபின், இந்தக் கடைசிக்காலத்தில் கிறீஸ்துவேதமாகிய அருள்வேதம் கொடுக்கப்பட்டது. இதற்கு மேல் ஆண்டவரால் வேறே வேதம் கொடுக்கப்படாதென்று காட்டும்படி, அருள்வேத காலத்தை உங்களுக்குக் கடைசிக்காலமென்று சொல்லியிருக்கிறது.

27. மனிதர்கள் ஒரேதரம் மரிக்கவும் அதன்பின் நடுத்தீர்க்கப்படவும் தீர்மானிக்கப்பட்டிருப்பது எப்படியோ,

28. அப்படியே கிறீஸ்துநாதரும் அநேகருடைய பாவங்களை நிர்மூலமாக்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார். இரண்டாந்தரமோ தம்மை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இரட்சகராகப் பாவமின்றித் தோன்றுவார். (உரோ. 5:9; 1 இரா. 3:18.)