இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 08

கிறீஸ்துநாதருடைய குருத்துவத்தின் மேன்மையும், புதிய ஏற்பாட்டின் அவசியமும்.

1. மேற்சொல்லியவைகளின் சங்க்ஷேபம் யாதெனில்: பரலோகத்திலுள்ள (தேவ) மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறவரும்,

2. பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் ஸ்தாபிக்கப்படாமல் ஆண்டவரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் குருத்துவ ஊழியஞ்செய்கிறவருமாகிய பிரதான குருப்பிரசாதி நமக்கு உண்டு.

3. ஏனெனில் எந்தக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்; ஆதலால் தாம் ஒப்புக்கொடுக்கும்படியான ஒரு பொருள் இவரிடத்திலும் அவசியமாய் இருக்கவேண்டியது.

4. ஆகையால் இவர் பூமியிலே இருப்பவரானால் குருவாயிருந்திருக்க மாட்டார். ஏனெனில் வேதப்பிரமாணப் படி காணிக்கைகளை ஒப்புக்கொடுக்க வேண்டிய குருக்கள் ஏற்கனவே இருக்கி றார்களே.

* 4. இவர் மற்றவர்களைப்போல் உலகத்திலிருந்து வந்தவரும், உலகத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரத்தின்படி ஏற்பட்டவருமாயிருந்தால், குருப்பிரசாதியாய் இருந்திருக்கமாட்டார். ஏனெனில் பலிகளை ஒப்புக்கொடுக்கிறதற்கு லேவி கோத்திரத்தார் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவரல்லவே.

5. இவர்கள் பரலோக காரியங்களின் சாயலுக்கும் நிழலுக்கும் ஊழியஞ் செய்தார்கள். அப்படியே மோயீசன் கூடாரத்தைச் செய்து முடிக்கையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப் பட்ட மாதிரியின்படிக்கு நீ எல்லாவற் றையும் செய்யும்படி பார்த்துக்கொள் என்று அவருக்குச் சர்வேசுரனால் அறிவிக் கப்பட்டது. (யாத். 25:40; அப். 7:44; கொலோ. 2:17.)

* 5. பழைய ஏற்பாட்டிலிருந்த குருத்துவமும் வெவ்வேறு தொழில்களும், பிற்காலங்களில் கிறீஸ்துநாதரால் இவ்வுலகத்தில் தமது யுத்த திருச்சபையிலும், பரலோகத்தில் தமது ஒட்டோலக சபையிலும் நிறைவேற்ற இருந்தவைகளுக்கு அடையாளமும், முன்குறிப்புகளுமாகமாத்திரம் இருந்தன: அப்படியே கூடாரம் பரலோகத்துக்கு அடையாளமாயிருந்தது.

6. இப்பொழுதோ, மேன்மையான வாக்குத்தத்தங்களால் உறுதியாக்கப்பட்டிருக்கிற மேலான உடன்படிக்கைக்கு இவர் எப்படிப்பட்ட மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அவ்வளவுக்கு மேலான குருத்துவ ஊழியத்தை அடைந்திருக்கிறார்.

7. முதல் உடன்படிக்கை குறையற்ற தானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டியதில்லையே.

8. ஆனால் ஆண்டவர் அவர்களைக் கடிந்து பின்வருமாறு உரைக்கிறாரே. எப்படியெனில் ஆண்டவர் சொல்லுகிறதாவது: இஸ்ராயேல் கோத்திரத்தா ரோடும் யூதா கோத்திரத்தாரோடும் நான் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துமுடிக்கும் நாட்கள் இதோ வருகிறது. (எரே. 31:31, 34.)

* 7-8. இவ்விடத்தில் வேதப்பிரமாணம் அல்ல, ஆனால் பிரஜைகள் கண்டிக்கப்படுகிறார்கள்.

9. அவர்களுடைய பிதாக்களை எஜிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வரும் படிக்கு நான் அவர்களுக்குக் கை கொடுத்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல் இது இராது. ஏனெனில் அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைக்கவில்லை. ஆகையால் நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று இப்படி ஆண்டவர் சொல்லுகிறார்.

10. ஆதலால் அந்நாட்களுக்குப் பின்பு இஸ்ராயேல் கோத்திரத்தாரோடு நான் பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே பதித்து, அவர்களுடைய இருதயங்களில் அவை களை எழுதுவேன். அப்போது நான் அவர்களுக்குத் தெய்வமாயிருப்பேன்; அவர்களும் எனக்குப் பிரஜைகளாய் இருப்பார்கள்.

11. அப்போது சிறியோர்முதல் பெரியோர்வரையில் சகலரும் என்னை அறிந்துகொள்வார்களாகையால், எவனும் தன் சகோதரனுக்காவது, தன் அயலானுக்காவது ஆண்டவரை அறிந்துகொள் என்று போதித்துச் சொல்ல மாட்டான்.

12. நான் அவர்களுடைய அக்கிரமங்களை மன்னித்து, அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைக்கமாட்டேன். இவ்விதம் கர்த்தர் சொல்லுகிறார்.

13. புதிய உடன்படிக்கையென்று அவர் சொல்லுகிறதினால், முந்தினதை பழமையாக்கினார். பழமையானதும் நாட்பட்டதும் அழிவுக்குக் கிட்டினதாயிருக்கிறது.