இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 08

எஜிப்த்து தேசத்தில் தவளைகள் தோன்றியதும் - புழுதி பேனாக மாறிப்போனதும் - திரளான ஈக்கள் மொய்த்ததும்.

1. மீளவுங் கர்த்தர் மோயீசனைப் பார்த்து: நீ பரவோனிடஞ் சென்று, அவனை நோக்கி: ஆண்டவர் சொல்லுகிறதென்ன வென்றால்: நமக்குப் பூசை செய்யும்படி நமது பிரஜையை அனுப்பிவிடு.

2. நீ அனுப்பிவிடமாட்டேன் என்பாயோவெனில், இதோ உன் எல்லை அடங்கலுங் தவளைகளால் வாதித்துத் கண்டிப்போம்.

3. நதியானது கொப்பளித்தாற் போலத் தவளைகளைப் பிறப்பிக்கும், அவைகள் புறப்பட்டு வந்து உன் மனையிலும், உன் பள்ளியறையிலும், உன் படுக்கையின்மீதும், உன் தாசர்களுடைய வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், நீ உண்டு விட்ட சேஷங்களிலும் வந்தேறும்.

4. அவ்வாறே தவளைகள் உன்னிடத்திலும் உன் ஜனங்களிடத்திலும், உன் தாசர்கள் எல்லோரிடத்திலும் நுழையுமென்று ஆண்டவர் சொல்லுகிறாரென்று சொல்லுவாய் என்று சொன்னார்.

5. மீண்டும் ஆண்டவர் மோயீசனிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: நதிகளின் மீதும், அருவிகள் சதுப்பு நிலங்களின் மேலும் உன் கையை நீட்டி எஜிப்த்து தேசத்தின்மேல் தவளைகள் எழும்பும்படி செய்யென்று சொல் என்றார்.

6. அப்படியே ஆரோன் எஜிப்த்துடைய ஜலங்களின்மீது கையை நீட்டவே, தவளைகள் புறப்பட்டு எஜிப்த்து நாட்டை மூடிக் கொண்டன.

7. மந்திரவாதிகளோ தங்கள் மந்திர வித்தையினாலே அவ்வண்ணமாகவே செய்து எஜிப்த்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய்தார்கள்.

8. பரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி ஆண்டவரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள். நானோ ஆண்டவருக்குப் பலியிடப் பிரஜையை அனுப்பிவிடுவேன் என்று சொன்னான்.

* 8-ம் வசனம். பரவோனரசன் தற்காலம் தேவ ஆக்கினைக்கஞ்சிக் கபடமாய்ப் பேசுகிறவனொழிய தேவ கட்டளைக்கு அமைந்தவனல்ல. இருதயம் கடினப்பட்ட பாவி அவ்விதமாய் நடப்பது சகஜமே.

9. அதற்கு மோயீசன்: தவளைகள் உம் மிடத்திலும் உம் வீட்டிலும் உம்முடைய ஊழியர்களிடத்திலும், உம்முடைய ஜனங்களிடத்திலும் இல்லாமல் ஒழிந்து போய் நதியிலே மாத்திரம் இருக்கும்படி நான் உமக்காகவும் உம் தாசர்களுக்காகவும் உம் ஜனத்திற்காகவும் பிரார்த்திக்க வேண்டிய காலத்தைக் குறித்துச் சொல்ல வேண்டு மென்று கேட்டதற்கு:

10. அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது மோயீசன்: எங்கள் தேவனாகிய கர்த் தருக்கு நிகரானவரில்லை என்று நீர் அறியும் பொருட்டு, நான் உம்முடைய வாக்கின்படிச் செய்வேன்.

11. தவளைகள் உம்மையும் உம் வீட்டையும் உம்முடைய ஊழியர்களையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கும், அவைகள் கேவலம் நதியிலே இருக்குமென்றான்.

12. பிறகு மோயீசனும் ஆரோனும் பர வோனை விட்டுப் புறப்பட்டார்கள்; பின்பு தவளைகளின் விஷயத்திலே பரவோனுக்குக் கொடுத்திருந்த வாக்குப்பிரகாரம் ஆண்ட வரை நோக்கிக் கூப்பிட்டான்.

13. ஆண்டவர் மோயீசனுடைய சொற் படி செய்தருளவே, தவளைகள் மனைகளி லும் கிராமங்களிலும் நிலங்களிலும் மாய்ந்து போயின.

* 13-ம் வசனம். பரிசுத்த இருதயமுடையோர்கள் ஆண்டவரைப் பார்த்து மன்றாடும்போது எம்மாத்திரம் பலனை அடைகிறார்களென்று அதினால் தெளிவாய்க் காணப்படுகிறதுந் தவிர மோயீசனுடைய உச்சித மேன்மையும் சாந்தமும் கபடில்லாததனமும் சர்வேசுரனுக்கு மெத்தவும் பிரியமாயிருந்தது என்றும் அறிக.

14. (ஜனங்கள்) அவைகளைப் பிரமாண்ட மான குவியல்களாய்ச் சேர்த்து வைத்தார் கள், அதனாலே அத்தேசமெங்கும் நாற்ற மெடுத்தது.

15. பிறகு இலகுவாயிற்றென்று கண்டு பரவோன் தன் மனதைக் கடினப்படுத்தின தேயன்றி கர்த்தர் திருவுளப்படி அவர்களுக் குச் செவிகொடுத்தானில்லை.

16. அப்பொழுது கர்த்தர் மோயீசனிட த்தில்: நீ ஆரோனைப்பார்த்துச் சொல்வாய்: உன் கையை நீட்டிப் பூமியின் புழுதியின் மேல் அடி: எஜிப்த்து தேசமெங்கும் பேன்கள் உண்டாகும் என்பாய் என்றார்.

17. அவர்களும் அப்படியே செய்தார்கள். ஆரோன் கோலைப் பிடித்தவனாய்க் கையை நீட்டிப் பூமிப் புழுதிமேல் அடிக்கவே, பேன் கள் மனிதர்களின்பேரிலும், மிருகங்களின் பேரிலும் உண்டாகி, எஜிப்த்து தேசமெங்கும் நிலப்புழுதியெல்லாம் பேன்களாக மாறிப் போயிற்று.

18. மந்திரவாதிகள் தங்கள் மந்திரவித்தை யினாலே பேன்கள் எழும்பும்படி அவ்விதமே செய்தார்கள். செய்திருந்தும் அவர்களால் கூடாதே போயிற்று. பேன்களோ மனிதர்க ளின்பேரிலும் மிருகங்களின்பேரிலும் உண்டா யிருந்தன.

19. மந்திரவாதிகள் பரவோனை நோக்கி: இதிலே தேவனுடைய விரலி(ன் சக்தி) இருக்கிறது என்றார்கள். ஆனால் பரவோனுடைய மனம் கடினமாயிருந்தது. ஆண்டவருடைய கட்டளையின்படி அவன் அவர்களுக்குச் செவிகொடுத்தானில்லை.

* 19-ம் வசனம். இது மூன்றாவது ஆக்கினை. சூனியக்காரர்கள் அவ்விதக் கோலங் காட்டிப் போலிபண்ணக்கூடாமல்: இது தெய்வச்செயல் என்றார்கள்; முன் நடந்தவைகளும் தெய்வச் செயல்தான் அல்லவோ? ஆனால் சூனியக்காரர் பசாசினால் வஞ்சிக்கப்பட்டு அதை ஒத்துக்கொள்ளவில்லை. பரவோனோ அவர்களைப் பார்க்கிலும் அதிக கர்வமுள்ளவனும் கொடிய பாவியுமாயிருந்து சுவாமியுடைய புதுமைகளையும் பொறுமையையும் துர்வினி யோகம் பண்ணினதினாலே கடைசியிலே கெட்டுப் போனான்.

20. மீண்டும் கர்த்தர் மோயீசனுக்குச் சொல்லுவார்: நாளை அதிகாலமே நீ எழுந்து போய்ப் பரவோன் நதிக்குப் புறப்பட்டு வரும் நேரத்திலே அவனுக்கு முன்பாக நின்று: நமக்குப் பூசை செய்யும்படி நம்முடைய பிரஜையைப் போகவிடு என்றும்,

21. நமது பிரஜையைப் போகவிடாதபட் சத்தில் அதோ நாம் உன்மேலும், உன் ஊழி யர்களின்மேலும் உன் ஜனங்களின்மேலும் உன் மனைகளின்மேலும் சகலவிதமான ஈக்க ளையும் ஏவிவிடுவோம்; பலவிதமான ஈக்களி னாலும் எஜிப்த்தியருடைய மனைகளும் அவர் கள் இருக்கும் தேசமுழுவதும் நிரப்பப்படும்;

22. அப்படியிருந்தும் அப்பொழுது நமது பிரஜை குடியிருக்கிற ஜெசேன் நாட்டை நாம் அற்புத நாடாக்கி அதிலே யாதொரு ஈக்களுமில்லாதிருக்கச் செய்வோம், அதி னாலே பூமியின் நடுவில் நாமே ஆண்டவர் என்று நீயுமறியமாட்டுவாய்.

23. இப்படி நமது பிரஜைக்கும் உனது பிரஜைக்கும் வித்தியாசமுண்டாக்குவோம், இப்புதுமை நாளைக்குத்தான் நடக்கு மென்றுஞ் சொல்லுவாய் என்றார்.

24. கர்த்தர் அவ்விதமே செய்தார். மிகவும் கொடிய ஈக்கள் பரவோனுடைய வீடுகளிலும் அவனுடைய ஊழியர்களுடைய வீடுகளிலும் எஜிப்த்து தேசம் எவ்விடங்களிலும் உண்டாகி அப்படிப்பட்ட ஈக்களினாலே தேசம் கெட்டுப்போயிற்று.

25. அப்போது பரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்கள் இங்கேதானே உங்கள் தேவனுக்குப் பூசை பண்ணுங்கள் என்று அவர்களுக்குச் சொன் னதற்கு,

* 25-ம் வசனம். இந்நான்காம் ஆக்கினைக்குப் பயப்படாமல் பரவோன் மனந்திரும்பினவனல்ல. அவன் உள்ளத்திலேயிருந்த விஷமான கருத்து பிறகு தெளிவாகத் தோன்றும்.

26. மோயீசன்: இவ்வாறு செய்யத் தகாது. ஏனெனில், எஜிப்த்தியருடைய அருவருப் பானவைகளைத் தேவனாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிட வேண்டும். எஜிப்த்தி யர் திருப் பொருளாக எண்ணி வருகிற ஜீவஜந்துக்களை அவர்கள் கண்ணுக்கு முன் பாக நாங்கள் அடிப்போமாகில் அவர்கள் எங்களைக் கல்லாலெறிவார்களன்றோ?

27. நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய் ஆண்டவர் எங்களுக்குக் கற்பித்தபடி அவருக்குப் பலியிடுவோம் என்றான்.

28. அப்பொழுது பரவோன் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்திலே பலியிடும்படி நான் உங்களைப் போகவிடுவே னாயினும் நீங்கள் அதிக தூரம் போகாதே யுங்கள், எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

29. இதற்கு மோயீசன்: நான் உம்மை விட்டுப் புறப்பட்ட உடனே ஆண்டவரை மன்றாடுவேன். நாளைக்கு ஈக்கள் பரவோ னையும், அவருடைய ஊழியர்களையும், அவருடைய ஜனங்களையும் விட்டு நீங்கும். ஆனால் தாங்கள் மேலைக்குப் பிரஜையைக் கர்த்தருக்குப் பலியிடும்படிப் போகவொட்டாமல் என்னை மோசம் பண்ண வேண்டாமென்றான்.

30. பிறகு மோயீசன் பரவோனிடமிருந்து புறப்பட்டுக் கர்த்தரை மன்றாடினான்.

31. கர்த்தர் அவன் சொற்படி அருளிச் செய்து ஈக்கள் பரவோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கச் செய்தார். அவைகளில் ஒன்றாகிலும் மீதியிருக்கவில்லை. 

32. ஆனாலும் பரவோனுடைய நெஞ்சம் கடினங்கொண்டதினால், அவன் இம்முறையிலும் முதலாய் பிரஜையைப் போகவிட வில்லை.