இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 06

வேதத்தை மறுதலிக்கிறதாகிய கனத்த பொல்லாப்புக்கு விலகும்படி அவர்களை எச்சரித்துப் பொறுமையோடு புண்ணியத்தில் நிலைக்கும்படி புத்திசொல்லுகிறார்.

1. ஆதலால் கிறீஸ்துநாதர் படிப்பித்த போதகத்தில் ஆரம்பப் போதகங்களை விட்டு, அதிக உத்தமமானவைகளுக்கு ஏகிச்செல்வோமாக. செத்த கிரியைகளி னின்று மீட்கும் தவம், சர்வேசுரன்பேரில் விசுவாசம்,

2. ஸ்நானங்களின் உபதேசங்கள், கைவைத்தல், மரித்தோரின் உத்தானம், நித்திய தீர்வை என்பவைகளாகிய அஸ்தி வாரத்தைத் திரும்பவும் போட வேண்டி யதில்லை.

3. சர்வேசுரனுக்குச் சித்தமானால், அப்படியே ஏகுவோம்.

4. ஏனெனில் ஒருவிசை ஞான ஒளி யடைந்தும், பரம கொடையைச் சுவை பார்த்தும், இஸ்பிரீத்துசாந்துவின் வரங் களைப் பெற்றும், (மத்.12:45; எபி. 10:26; 2 இரா. 2:20.)

5. கடவுளின் நல்வாக்கியத்தையும் மறுமையின் வல்லபங்களையும் ருசிபார்த்தும்,

6. தவறினவர்கள் மனந்திரும்பிப் புதுப்பிக்கப்படுவது கூடாதகாரியம். ஏனெனில் அவர்கள் சர்வேசுரனுடைய குமாரனை மறுபடியும் தங்களாலானமட்டும் சிலுவையில் அறைந்து அவமான கோலமாக்குகிறார்கள்.

* 4-5-6. ஒவ்வொரு கிறீஸ்துவனும் உணர்ந்துகொள்ளத்தக்க இரண்டு பிரதான புத்திமதிகளாவன: 1-வது, ஒருவன் ஞானஸ்நானம் பெற்றுப் பரம ஒளியினால் துலக்கப் பட்டு, வேத சத்தியங்களின் உண்மையை உணர்ந்துகொண்டு, உறுதிபூசுதலால் இஸ்பி ரீத்துசாந்துவின் வரங்களையும் இஷ்டப்பிரசாதத்தையும் அடைந்து, தேவநற்கருணை முதலான தேவதிரவிய அநுமானங்களால் அவன் ஆத்துமம் திருப்தியாக்கப்பட்டுப் பரலோக நன்மைகளின் இன்பத்தை ருசிபார்த்தபின் வேத விரோதியாய்த் தவறி விழுந்து, அவிசு வாசியாகி அந்த நன்மைகளையெல்லாம் இழந்துபோவானானால், அப்படிப்பட்டவன் மனந்திரும்புகிறதும், முன்னிழந்த பரம நன்மைகளை முற்றும் திரும்ப அடைகிறதும் மகா வருத்தமும் அருமையுமான காரியமாயிருக்கிறது. 2-வது, அவனவனுடைய ஆத்துமத்தைச் சர்வேசுரனுடைய தோட்டம் என்கலாம். அதிலே சர்வேசுரன் நல்ல விதையைப்போல் தம்முடைய வேத வாக்கியங்களை விதைத்து, அடிக்கடி நல்ல மழை வருஷிக்கிறாப்போலே தேவதிரவிய அநுமானங்களாலுந் தம்முடைய இஷ்டப்பிரசாதத்தாலும் அந்த ஆத்துமத்தைக் குளிரச் செய்து அது தமக்குப் பிரியமான புண்ணிய கனிகளைக் கொடுக்கும்படிக்குக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்படியே நற்கனிகளைக் கொடுக்கிற பூமியைச் சர்வேசுரன் ஆசீர்வதிக்கிறதுபோல் புண்ணிய பலனாகிற நற்கிருத்தியங்களை விளைவிக்கிறவனுடைய ஆத்துமத்தைத் சுவாமி ஆசீர்வதிக்கிறார். ஆனால் அடிக்கடி பெய்த மழையைக் குடித்தும் குடியானவனுக்குப் பலன்கொடாமல் முட்பூண்டுகளை மாத்திரம் முளைப்பிக்கும் பூமியானது சபிக்கப்பட்டு அக்கினியால் தகிக்கப்படுவதுபோல், சொல்லப்பட்ட ஞான நன்மைகளையெல்லாம் கைக்கொண்ட ஆத்துமம் சர்வேசுரனுக்குப் பிரியமான சுகிர்த புண்ணியக் கனிகளைத் தராமல் பாவமாகிய முட்பூண்டுகளைமட்டும் தருமாகில், தேவ கோபத்தை அடைந்து, அதன் முடிவு நரக அக்கினிதானென்பதற்குத் தப்பாது.

* 6. கூடாத காரியம்: - இந்த வசனங்களுக்கு இரண்டு அர்த்தமுண்டு. (1) ஞானஸ்நானம் பெற்றவர்கள் பாவத்தில் விழுந்து கெட்டுப்போனால், திரும்பவும் ஆத்தும சுத்திகரத்துக்கு வழியாக ஞானஸ்நானம் பெறக்கூடாதென்பது. (2) வேதத்தில் உட்பட்டவர்கள் மனதறிய அதை விட்டு விசுவாசத்தை மறுப்பார்களானால், அவர்கள் மனந்திரும்புவது அபூர்வமான காரியமாயிருக்கிறபடியால் கூடாத காரியமாம்.

7. ஏனெனில் அடிக்கடி தன்மேல் பெய்கிற மழையைக் குடித்து, பயிரிடுகிற குடியானவர்களுக்குத் தகுதியான பயிரை முளைப்பிக்கும் பூமியானது சர்வேசுரனால் ஆசீர்வாதம் பெறும்.

8. முள்ளையும் முடல்களையும் முளைப்பிக்கிற நிலமோ தள்ளுபடியானதாயும், சாபத்துக்குக் கிட்டினதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப்படுவதே அதற்கு முடிவு. 

9. மிகவும் பிரியமானவர்களே, நாங்கள் இப்படிப் பேசினாலும், உங்களிடத்தில் அதிக நன்மையானவைகளும் இரட்சணியத்துக்கு அதிக உதவியான வைகளும் உண்டென்று நம்புகிறோம்.

10. ஏனெனில் உங்களுடைய கிருத்தியங்களையும், நீங்கள் தமது பேரால் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததிலும், இன்னும் செய்துவருகிறதிலும் காண்பித்த அன்பையும் மறந்துபோவதற்குச் சர்வேசுரன் அநீதமுள்ளவரல்லவே.

11. ஆனதால் உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் நம்பிக்கை நிறை வேறும்படி இப்படியே முற்றும் முடிய ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசிக்கிறோம்.

12. ஆகையால் நீங்கள் அசதியாயிராமல், விசுவாசத்தினாலும், பொறுமையினாலும், வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்பவர்களைக் கண்டு பாவிக்கக்கடவீர்கள்.

13. ஏனெனில் சர்வேசுரன் அபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணும்போது, ஆணையிடும்படிக்குத் தமக்கு மேற்பட்டவர் ஒருவரும் இல்லாததினால் தமதுமேல்தாமே ஆணையிட்டு,

14. சத்தியமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். (ஆதி. 22:16, 17.)

15. அப்படியே அவரும் நீடிய பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்.

16. மனிதர் தங்களுக்கு மேற்பட்ட வேறொருவரைக்கொண்டு ஆணையிடுகிறார்கள். எவ்வித தர்க்கத்தையும் முடிப்பதற்கு ஆணையே நிச்சயத்துக்கு உதவியாக நின்று, எவ்வித விவாதத்தையும் முடிக்கின்றது.

17. அப்படியே சர்வேசுரனும் தமது வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தம்முடைய ஆலோசனை அசையாதென்று அதிக நிச்சயமாய் எண்பிக்கச் சித்தமாகி, அதற்கு ஓர் ஆணையையும் கூட்டி ஸ்திரப்படுத்தினார்.

18. இவ்விதமாய் நமக்கு நியமித்திருக்கிற நம்பிக்கையைக் கைக்கொள்ளத்தக்கதாக ஓடிவந்த நமக்குக் கடவுள் பொய் சொல்லவே கூடாதென்று காட்டுகிற அசைக்கப்படாத இரண்டு விஷயங்களால் நமக்கு மிகவும் பலமான ஆறுதலுண்டாகும்படி செய்தார்.

19. அப்படிப்பட்ட நம்பிக்கை நமது ஆத்துமத்துக்கு க்ஷேமமும் உறுதியும் திரையின் உட்பாகத்துக்குள் செல்லுகிற துமான ஆத்தும நங்கூரமாயிருக்கின்றது.

20. அந்த உட்பாகத்துக்குள் மெல்க்கி சதேக்கின் முறைமைப்படிக்கு என்றென் றைக்கும் பிரதான குருப்பிரசாதியாய் ஏற்படுத்தப்பட்ட சேசுநாதர் நமக்கு முன்னோடியாகப் பிரவேசித்திருக்கிறார்.