இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாத்திராகமம் - அதிகாரம் 05

மோயீசனும், ஆரோனும் போய்ப் பரவோனிடத்தில் கர்த்தருடைய கட்டளைகளைத் தெரிவித்ததும் - அவன் அவர்களைக் கடிந்துகொண்டதும் - பிறகு இஸ்றாயேலித்தாரை முன்னைவிட அதிகமாய்த் துயரப்படுத்தினதும்.

1. அதற்குப் பின் மோயீசனும் ஆரோனும் பரவோனிடம் போய், இஸ்றாயேலின் தேவனாகிய கர்த்தர், வனாந்தரத்திலே நமக்குப் பூசை செய்யும்படி நமது பிரஜையைப் போகவிடு என்கிறார் என,

2. அதற்கு அவன்: நான் இஸ்றாயேல ரைப் போகவிட்டுக் கர்த்தருடைய வாக்கியத் தைக் கேட்க வேண்டியதென்ன? அந்தக் கர்த்தர் யார்? நான் கர்த்தரையும் அறியேன், இஸ்றாயேலித்தாரையும் போக விட மாட் டேன் என்றான்.

3. அதற்கு அவர்கள்: எபிறேயரின் தேவன் எங்களைக் கூப்பிட்டு வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய்த் தேவனாகிய நமது கர்த்தருக்குப் பலியிடும்படி திருவுளமானார். நாங்கள் போகாத பட்சத்தில் கொள்ளை நோயும் பட்டயமும் எங்கள்மேல் வரக் கூடுமென்றார்கள்.

4. அதற்கு எஜிப்த்து இராயன்: மோயீசா, ஆரோனே, தங்கள் வேலைகளைச் செய்யாத படிக்கு நீங்கள் ஜனங்களைக் குழப்பி விடுவ தென்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.

5. மீண்டும் பரவோன்: (உங்கள்) ஜாதியார் தேசத்தில் மிகுதியாயிருக்கிறார்கள். ஒருவரும் கவனிக்காமல் அவர்கள் பெரிய ஜனமாகப் பெருகிப் பலுகினதென்று உங்களுக்குத் தெரி யும். வேலை வாங்குவதில் அவர்களுக்கு இளக் காரம் பண்ணுகிறதாயிருந்தால் மென்மேலும் விருத்தியடைவார்களே என்றான். 

6. அதே நாளில் அவன் வேலை விசாரணைகாரருக்கும் ஊர்த் தலையாரிகளுக்கும் கட்டளையிட்டதாவது:

7. செங்கல்வேலை செய்வதற்காக நீங்கள் அந்த ஜாதியார்களுக்கு வைக்கோலை முன் போலக் கொடுக்கவேண்டாம். அவர்களே போய்த் தாளைச் சேர்த்துவரட்டும்.

8. மேலும் அவர்கள் முன்செய்து கொடுத்த கணக்குக்குச் சரியாய்ச் செங்கல் அறுத்துக் கொடுக்கக்கடவார்கள்; அதிலே நீங்கள் கொஞ்சமேனுங் குறைக்க வேண்டாம். அவர்கள் சும்மாயிருக்கிறதினால் அல்லோ நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோமென்று கூச்சலிட்டிருக்கின்றார்கள்.

9. அவர்கள் அபத்தமான எவ்விதப் பேச் சுகளுக்கும் செவிகொடாதபடிக்கு நீங்கள் அவர்களுக்குத் தாளாத வேலையிட்டு வாருங்கள். அவர்களும் அதைக் கண்டிப்பாய்ச் செய்து முடிக்கக்கடவர்.

10. ஆகையால் வேலை விசாரணைக்காரரும், ஊர்த் தலையாரிகளும் புறப்பட்டுச் ஜனங்களை நோக்கி: பரவோன் சொல்லுகிறதாவது: உங்கட்கு நாம் தாளைக் கொடோம். 

11. நீங்களே போய் எங்கேயாகிலும் தேடிச் சம்பாதியுங்கள். உங்கள் வேலையோ சற்றேனுங் குறைக்கப்படாது என்றார்கள்.

12. ஆனபடியால் ஜனங்கள் தாள்களைச் சம்பாதிப்பதற்காக எஜிப்த்து தேசத்தின் நாலு திக்கிலும் அல்லாடித் திரிந்தனர்.

13. மீண்டும் வேலை விசாரணைக்காரர் அவர்களைப் பார்த்து: உங்களுக்குத் தாளடிகள் இடப்பட்ட நாளில் நீங்கள் எந்தக் கணக்கின்படியே செய்துவந்தீர்களோ, இப்போ தும் அந்தக் கணக்குப்படியே தினந்தோறும் வேலை செய்து முடிக்கவேண்டுமென்று கண்டித்துச் சொன்னார்கள்.

14. பரவோன் நியமித்திருந்த தலையாரிகள் இஸ்றாயேல் புத்திரரின்மேல் வைக்கப்பட்ட ஆளோட்டிகளை நோக்கி: செங்கல் வேலையிலே முன்கணக்குப்படி நீங்கள் நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லையென்று அவர்களைக் கசையாலடிப்பார்கள்.

* 14-ம் வசனம். பரவோன் இஸ்றாயேலரை அதிகமாக உபாதிப்பதற்காக அவர்களில் அநேகரைக் கண்காணிகளாகக் கபடமாய் நியமித்திருந்தான்.

15. அப்போது இஸ்றாயேல் புத்திரரின் மேல் கண்காணிகளா யிருந்தவர்கள் வந்து பரவோனை நோக்கிக் கூச்சலிட்டு: தேவரீர் அடியோர்களை இப்படி விரோதமாய்ச் செய்கிற தென்ன? 

16. தாள்களோ எங்களுக்குக் கொடுக்கப் படுகிறதில்லை; செங்கற்களை முன்போல் அறுத்துத் தீரவேண்டுமே! இதோ அடியோர்கள் கசைகளால் அடிபடுகிறோம். உமது பிரஜையின்மீது அநியாயஞ் செய்யப்பட்டு வருகின்றதே (என்றார்கள்.)

17. அதற்கவன்: நீங்கள் சோம்பலாயிருக்கிறதினால் அல்லோ சுவாமிக்குப் பலியிடப் போவோம் என்கிறீர்கள்.

18. நல்லது. போய் வேலை செய்யுங்கள். தாள்களும் உங்களுக்குக் கொடுக்கப்படாது, நீங்களும் வாடிக்கையான செங்கற் கணக்கைச் செலுத்துவீர்கள், என்றான்.

* 18-ம் வசனம். தெய்வ பயமில்லாத அரசர் பெருந்தன்மையுடன் நடக்கிறதும் வழக்கம். உங்கள் கர்த்தர் உங்களைப் பலி வைக்கும்படிக் கூப்பிட்டாராக்கும்; நானோ உங்களைப் போகவொட்டேன்; முன்னிலும் அதி கொடிய வேலைகளைச் செய்யும்படி கற்பிக்கிறேன்- இதற்குச் சத்திய திருச்சபையின் சரித்திரமே அத்தாட்சி.

19. அப்போது இஸ்றாயேல் புத்திரருடைய கண்காணிகள்: நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கற் கணக்கிலே ஒன்றுங் குறைக்கப்படாதென்று சொல்லப்பட்டதைப் பற்றித் தங்களுக்கு இக்கட்டு நேரிட்டிருக்கிறது கண்டு,

20. பரவோனுடைய சமூகத்தைவிட்டுப் புறப்பட்டு வருகையில், வழியிலே நின்று கொண்டிருந்த மோயீசனுக்கும் ஆரோனுக் கும் எதிர்ப்பட்டு,

21. அவர்களை நோக்கி: ஆண்டவர் உங் கள்பேரில் விசாரித்துத் தீர்வையிடக் கடவாராக! ஏனெனில் நீங்கள் பரவோனுக்கும் அவன் ஊழியர்களுக்கும் முன்பாக எங்கள் நல்ல வாசனையைத் துர்க்கந்தமாக மாற்றி அவர்கள் எங்களைக் கொல்லும்படியான வாளை அவர்கள் கையிலே வைத்திருக்கிறீர்களே என்று முறையிட்டுச் சொன்னார்கள்.

* 21-ம் வசனம். எந்த நன்மையும் இடையூறின்றி உண்டாவதில்லை என்பது தேவதிருவுள மென்று பிரசித்தம்; ஆகையால் பற்பல இம்சைப்பட்டுத் தேவபிரஜையை மீட்டிரட்சித்த மோயீசன் உலகத்தை மீட்டிரட்சித்த சேசுநாதர் சுவாமிக்கு அடையாளமாயிருச்கிறார்.

22. அப்பொழுது மோயீசன் ஆண்டவருடைய சமூகத்திலே திரும்பிப் போய்: சுவாமீ, தேவரீர் இந்த ஜனங்களுக்குத் துன்பம் வருவித்ததென்ன? அடியேனை ஏன் அனுப்பினீர்?

23. இதோ நான் தேவரீருடைய பெயரைச் சொல்லிப் பரவோனிடம் பிரவேசித்துப் பேசினது முதல் அவன் உமது பிரஜைகளை உபத்திரவப்படுத்தி வருகிறான். தேவரீரோ அவர்களை விடுதலை ஆக்கவில்லையே என்றான்.