மோயீசனைப் பார்க்கிலும் கிறீஸ்துநாதர் அதிக மேன்மையுள்ளவராய் இருக்கிறபடியால், நாம் விசுவாசத்தினாலும் கீழ்ப்படிதலினாலும் அவரோடு ஒன்றித்திருக்க வேண்டுமென்று கற்பிக்கிறார்.
1. இதன் நிமித்தமாகவே, பரலோக அழைப்புக்குப் பங்காளிகளாயிருக்கிற அர்ச்சிக்கப்பட்ட சகோதரரே, நாம் அறிக்கைபண்ணும் வேத விசுவாசத்துக்கு அப்போஸ்தலரும், பிரதான குருப்பிரசாதியுமாகிய சேசுநாதரைக் கவனித்துப்பாருங்கள்.
2. சர்வேசுரனுடைய வீட்டிலெங்கும் மோயீசன் பிரமாணிக்கமாய் இருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவர்மட்டில் பிரமாணிக்கராய் இருக்கிறார். (எண். 12:7.)
3. வீட்டைக் கட்டினவன் வீட்டை விட எவ்வளவு மேன்மையுள்ளவனாய் இருக்கிறானோ, அப்படியே இவரும் மோயீசனைவிட அதிக மகிமைக்குரியவராக மதிக்கப்பட்டிருக்கிறார்.
4. எப்படியெனில் எந்த வீடும் ஒருவனால் கட்டப்படும்; அப்படியே எல்லாவற்றையும் உண்டாக்கினவர் சர்வேசுரன்.
5. சொல்லவேண்டியிருந்தவைகளுக்குச் சாட்சியாக மோயீசன் ஓர் பணிவிடைக்காரனைப்போல் சர்வேசுரனுடைய வீட்டில் எங்கும் பிரமாணிக்கமுள்ளவராய் இருந்தார்.
6. கிறீஸ்துநாதரோ பிள்ளை தன் வீட்டில் இருக்கிறதுபோல் இருக்கிறார். நாம் நம்பிக்கையையும், நம்பிக்கையிலிருந்து பிறக்கும் மகிமையையும் முடிவுபரியந்தம் உறுதியாகக் காப்போமாகில், நாமே அவருடைய வீடாய் இருப்போம்.
7. ஆதலால் இஸ்பிரீத்துசாந்துவானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால், (சங். 94:8-11; எபி. 4:7.)
8. வனாந்தரத்திலே எதிரிடை என்ற ஸ்தலத்தில் என்னைச் சோதித்த நாளி லே நடந்ததுபோல் உங்கள் நெஞ் சங்களைக் கல்லாக்கிக்கொள்ளாதே யுங்கள்.
* 8. எதிரிடை என்ற ஸ்தலத்தில்: - வனாந்தரத்தில் இஸ்ராயேல் பிரஜைகள் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியாமல் அவருக்குக் கோபம் மூட்டின இடத்திற்கு இவ்வித பெயர் இடப்பட்டது.
9. அவ்விடத்தில் உங்கள் பிதாக்கள் நாற்பது வருஷமாய் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபண்ணி, என் கிரியைகளைக் கண்டார்கள்.
10. ஆகையால் நான் இந்தச் சந்ததியை அரோசித்து: இவர்கள் எப்போதும் தவறிப்போகிற இருதயமுள்ளவர்கள்; இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்.
11. ஆகையால் இவர்களோ என் இளைப்பாற்றியில் பிரவேசிப்பவர்கள் என்று என் கோபத்தில் ஆணையிட்டேன் என்றார்.
12. சகோதரரே, ஜீவந்தரான கட வுளை விட்டு விலகிப்போவதற்கு ஏது வான விசுவாசமற்ற கெட்ட இருதயம் உங்களுக்குள் எவனிடத்திலாவது இராத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
13. ஆனால் உங்களில் ஒருவனாகிலும் பாவ மயக்கத்தால் கல்நெஞ்சனாகாதபடிக்கு இன்று என்னப்பட்ட காலம் இருக்குமளவும் ஒருவருக்கு ஒருவர் அநுதினமும் புத்திசொல்லி வாருங்கள்.
14. ஏனெனில் கிறீஸ்துநாதரோடு நாம் பங்குள்ளவர்களானோம். ஆயினும் அதற்கு நாம் ஆதியில் அவருக்குள் துவக்கின ஜீவியத்தை முடிவு மட்டும் உறுதியாய்க் காப்பாற்றினாலல்லோ சரி.
15. ஏனெனில் இன்று அவர் சத்தத்தைக் கேட்பீர்களாகில், அந்த எதிரிடை ஸ்தலத்தில் சம்பவித்தது போல் உங்கள் இருதயங்களைக் கடினமாக்காதேயுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
16. ஏனெனில் கேட்டவர்களில் சிலர் கோபமூட்டினார்கள். ஆகிலும் எஜிப்து தேசத்தினின்று மோயீசன் வழியாய்ப் புறப்பட்டுவந்த எல்லாருமல்ல.
17. நாற்பது வருஷகாலமாய் அவர் யாரை அரோசித்து வந்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? வனாந்தரத்தில் விழுந்துகிடந்ததும் அந்தப் பாவிகளு டைய பிணங்களல்லோ. (எண். 14:37.)
18. தமது இளைப்பாற்றியில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அந்த அவிசுவாசிகளைப் பற்றியல்லாதே வேறே யாரைப்பற்றி அவர் ஆணையிட்டார்?
19. ஆகையால் தங்கள் அவிசுவாசத்தினாலேதான் அவர்கள் அதில் பிரவேசிக்கமாட்டாமற் போனார்கள் என்று நாம் காண்கிறோம்.
* 19. விசுவாசமானது சகல நன்மைகளுக்கும் அஸ்திவாரமும், அவிசுவாசமானது சகல தின்மைகளுக்குங் காரணமுமாய் இருக்கிறதென்று பற்பல திருஷ்டாந்தங்களினால் இந்த அதிகாரத்தில் காண்பிக்கிறார். விசுவாசத்தினால் நாம் சர்வேசுரனுடைய வீடும் வாசஸ்தலமுமாய் இருக்கிறோம்; கிறீஸ்துநாதரோடு ஒரே சரீரமாயிருக்கிறோம். அவருடைய இஷ்டப்பிரசாதத்துக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் அவருடைய சகல நன்மைகளுக்கும் பங்காளிகளுமாயிருக்கிறோம். அப்படிப்பட்ட நன்மைகளை எல்லாம் அவிசுவாசத்தினால் இழந்துபோகாதபடிக்கு இடைவிடாமல் எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். ஜீவியரும் நம்முடைய ஜீவியத்துக்குக் காரணமுமாயிருக்கிற சர்வேசுரனை அவிசுவாசத்தினால் இவ்வுலகத்தில் விட்டு அகன்றுபோவோமாகில் மறுலோகத்தில் சர்வேசுரன் தம்முடைய சமுகத்தினின்று நம்மை அகற்றித் தள்ளுவார். வனாந்தரத்தில் இஸ்ராயேல் பிரஜைகளுக்குச் சம்பவித்தது இதற்கு அத்தாட்சியாயிருக்கிறது. சர்வேசுரன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்த இளைப்பாற்றியின் பூமியில் அவர்கள் பிரவேசிக்காமல், தங்கள் அவிசுவாசத்தினாலே வனாந்தரத்திலே சிதறுண்டு செத்தார்களென்று காண்பிக்கிறார்.