இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். இயாகப்பர் எழுதிய பொது நிருபம் - அதிகாரம் 03

நாவினால் வருகிற பொல்லாப்புகளை விவரித்து, மெஞ்ஞானம் ஏதென்று காட்டுகிறார்.

1. என் சகோதரரே, உங்களில் போதகர் நிரம்பப்பேராயிருக்க வேண்டாம். ஏனெனில் அதிகக் கண்டிப்பான தீர்வையை உங்கள்மேல் சுமத்திக்கொள்ளுகிறீர்களென்று அறிந்து கொள்ளுங்கள். (மத். 23:8.)

* 1. அர்ச். சின்னப்பர் நிருபங்களிலும், அப்போஸ்தலர் நடபடியிலும் பலமுறை காணப்படுகிறதுபோல் புதிதாய் ஞானஸ்நானம் பெற்ற யூதர்களுக்குள்ளே அநேகர் குருமார்கள் மேற்றிராணிமார்களால் அனுப்பப்படாமலும், யாதொரு உத்தரவில்லாமலும், தாங்களாய்ப் புறப்பட்டு ஊருக்கூர்போய், அஞ்ஞானத்திலிருந்து மனந்திரும்பின புதுக் கிறீஸ்துவர்களுக்குப் போதகர்களாகத் தங்களைத் தாங்களே ஏற்படுத்திக்கொண்டு, அவர்கள் விருத்தசேதனம் பெறவேண்டுமென்றும், பழைய ஏற்பாட்டில் தாங்கள் அநுசரித்துவந்த பற்பல முறைமைகளை அவர்களும் அநுசரிக்க வேண்டுமென்றும் அவைகள் இரட்சணியத்துக்கு அவசரமென்றும் போதித்து, அந்தப் புதுச்சபைகளைக் கலங்கடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இங்கே அர்ச். இயாகப்பர் புத்திசொல்லுகிறார்.

2. நாமெல்லோரும் அநேக காரியங்களில் தவறிப்போகிறோம். ஆகிலும் யாதாமொருவன் வார்த்தையில் தவறாதிருந்தால், அவன் உத்தம புருஷன். ஏனெனில் அவன் தன் சரீரமுழுமையும் கடிவாளத்தால் நடப்பித்துக் கொள்ள வல்லவன்.

3. அப்படியே குதிரைகள் நமக்கு அடங்கும்படிக்கு அவைகள் வாயில் கடிவாளமிட்டுக்கொண்டால், அவைகளின் சரீரமுழுமையும் எப்பக்கமும் திருப்பி நடத்துவோம்.

4. கப்பல்களைப் பாருங்கள்; அவைகள் மகா பெரியவைகளாயினும், கடுங் காற்றினால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் அற்பமான சுக்கானால் தன்னிஷ்டப்படி அவைகளைத் திருப்புகிறானல்லோ?

5. அப்படியே இதோ, நாவானது ஓர் சிறிய உறுப்பானாலும், பெரிய காரியங்களையும் பாராட்டும். எவ்வ ளவு சொற்ப நெருப்பு எவ்வளவோ பெருங் காட்டைச் சுட்டெரிக்கின்றது!

6. அப்படியே நாவும் ஒரு நெருப்பு: அது அக்கிரமங்களெல்லாம் நிறைந்த உலகம்; நாவானது நம்முடைய உறுப்பு களில் ஒன்றாயிருந்து, சரீரமுழுமையும் கறையாக்குகின்றது. அது நரக அக்கினியில் கொளுத்தப்பட்டு, நமது பிறப்பு முதல் நமது ஆயுள் சக்கரத்தை எரிக்கின்றது.

7. சகலவித மிருகங்கள், பறவைகள், சர்ப்பங்கள், இன்னும் மற்றவைகளின் சுபாவமெல்லாம் மனுஷனுடைய சுபாவத்தால் அடக்கப்படக் கூடும்; அடக்கப்பட்டுமிருக்கின்றது.

8. ஆனால் நாவை அடக்கவோ எந்த மனுஷனாலும் கூடாது. அது அடங்காத் தீங்கு; கொல்லும் விஷம் நிறைந்தது.

9. அதைக்கொண்டே நாம் பிதாவாகிய சர்வேசுரனையும் ஸ்துதிக்கிறோம்; அதைக்கொண்டே நாம் தெய்வ சாயலாக உண்டாக்கப்பட்ட மனுஷர் களையும் சபிக்கிறோம்.

10. ஸ்துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்தே புறப்படுகின்றது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

11. ஒரே ஊற்றுக் கண்ணிலிருந்து நல்ல தண்ணீரும், உப்புத்தண்ணீரும் சுரக்குமா?

12. என் சகோதரரே, அத்திமரம் திராட்சப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் பிறப்பிக்குமா? அப்படியே உப்புநீர் நல்ல ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. (மத். 7:16.)

13. உங்களில் ஞானியும் கல்விமானும் யார்? அவன் ஞானத்துக்குரிய சாந்தகுணத்தோடு தன் கிரியைகளை நல்லொழுக்கத்தினாலே காண்பிக்கக் கடவான்.

14. ஆனால் உங்கள் இருதயங்களில் கசப்பான வைராக்கியத்தையும் வாக்கு வாதங்களையும் கொண்டிருந்தால், நீங்கள் பெருமைகொள்ள வேண்டாம். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லவும் வேண்டாம்.

15. ஏனெனில், இப்படிப்பட்ட ஞானம் மேலாவிலிருந்து வருகிறதல்ல. அது இலெளகீகத்திற்கும், மிருகத்திற் கும், பேய்க்கும் உரியது. (இயா. 1:5, 7.)

16. வைராக்கியமும் வாக்குவா தமும் எங்கே உண்டோ, அங்கே நிலையின்மையும், சகல துர்க்கிரியை யும் உண்டு.

17. மேலாவிலிருந்து வருகிற ஞானமோ முந்தமுந்தக் கற்புள்ளதும், பின்னும் சமாதானமுள்ளதும், மரியா தையுள்ளதும், இணக்கமுள்ளதும், நல்லவைகளுக்கு உடந்தையுள்ளதும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததுமாயிருக்கின்றது. அது யாதொன் றுக்கும் தீர்ப்பிடுகிறதுமில்லை, பாசாங்கு பண்ணுகிறதுமில்லை.

18. நீதியாகிய கனியானது சமாதானத்தை உண்டாக்குகிறவர்களால் சமாதானத்திலே விதைக்கப்படுகின்றது. (இசை. 32:17; மத். 5:9.)